கரோனா பொது முடக்கம் பலரின் வாழ்க்கையையே முடக்கிப் போட்டிருக்கிறது. பல்வேறு மக்களின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கிறது. பல பேர் தாங்கள் பார்த்துவந்த தொழில்களை விட்டுவிட்டு புதிய தொழில்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர், தங்களது தொழிலைக் கரோனா காலத்துக்கு ஏற்றதாக கெட்டிக்காரத்தனமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை மற்றும் கோவையில் செயல்படும் ‘மார்க் ஒன் வெட்டிங் டெக்கார் அண்ட் ஈவன்ட்’ நிறுவனமும் அப்படித்தான் தன்னைக் கரோனா காலத்துக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் கரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. தள்ளிவைக்க முடியாதவர்கள் நான்கைந்து பேரை மட்டும் வைத்து தங்கள் வீட்டு வைபவங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஐம்பது பேர்கூட இல்லாமல் எப்படி ஒரு விசேஷத்தை நடத்துவது? என நினைப்பவர்கள் கரோனா கெடுபிடிகளுக்குப் பயந்து ஒதுங்கி நிற்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகவே சிறப்பு பேக்கேஜ் திட்டங்களை அறிவித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறது ‘மார்க் ஒன் வெட்டிங் டெக்கார் அண்ட் ஈவன்ட்’ நிறுவனம்.
கரோனா காலத்தில் திருமணங்களை நடத்த நினைப்பவர்கள் இவர்களது கையில் இரண்டு லட்ச ரூபாயைத் தந்துவிட்டால் போதும், ஐம்பது பேர் கூடி இருந்து நடத்தும் ஒரு திருமண விழாவை அற்புதமாய் நடத்திக் கொடுக்கிறார்கள். இதில் திருமண வீட்டாருக்கு எந்த ரிஸ்க்கும் இல்லை. திருமண விழாவை நடத்துவதற்கான போலீஸ் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஈவன்ட் நிறுவனத்தினரே பெற்றுத் தந்துவிடுவதால் நமக்குக் கூடுதல் நிம்மதி.
இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய ‘மார்க் ஒன் வெட்டிங் டெக்கார் அண்ட் ஈவன்ட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.சுதர்சன், “இந்தக் கரோனா காலத்தில், நிச்சயித்தபடி திருமணங்களை நடத்த முடியாததால் பல குடும்பங்கள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றன. இவர்களுக்குக் கைகொடுக்கும் விதமாகத்தான் நாங்கள் இந்த பேக்கேஜ் திட்டத்தை அறிவித்தோம். எங்களால் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சிகளில் கட்டாயம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என நாங்கள் ஸ்டிரிக்டாக சொல்லிவிடுகிறோம்.
திருமண வீட்டை டெக்கரேட் செய்வது, திருமண மேடையில் பேக் டிராப் அமைப்பது, மணமகள் அலங்காரம், திருமணத்துக்கு வருபவர்களுக்கு தாம்பூலப் பைகள் தருவது, டிஜிட்டல் இன்விட்டேஷன் ரெடி செய்வது, போட்டோ, வீடியோ ஏற்பாடு, புதுமணத் தம்பதியருக்கான மாலைகள், அவர்கள் பயணிக்கும் காருக்கான டெக்கரேஷன் எல்லாமே எங்களுடைய பொறுப்பு. நாதஸ்வரம், மியூசிக் சிஸ்டம்கூட பேக்கேஜில் வந்துவிடும்.
இவை இல்லாமல் கரோனாவுக்காகவும் பேக்கேஜில் சில முக்கிய அம்சங்களைச் சேர்த்திருக்கிறோம். திருமணத்தில் கலந்துகொள்ளும் அத்தனை பேரும் தெர்மல் ஸ்கேனிங் செய்த பிறகே திருமண வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அத்தனை பேருக்கும் ஹேண்ட் சானிடைசர் கொடுப்பதுடன் ஒரு ஜோடி கையுறைகளும், முகக்கவசமும் தரப்படும். சாதாரணமாக, திருமண விழாக்களில் திருமண தம்பதியரைக் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிப்பார்கள். ஆனால், நாங்கள் நடத்தும் திருமணங்களில் அதற்கு அனுமதியில்லை. திருமண தம்பதியரை கண்ணாடித் திரை வழியாக மட்டுமே பார்க்க முடியும். இது அவர்களின் பாதுகாப்புக்காக நாங்கள் செய்திருக்கும் ஏற்பாடு.
திருமணத்தில் ஐம்பது பேருக்குச் சைவ விருந்தும் உண்டு. கூட்டமாக அமர்ந்து சாப்பிட முடியாத வீடுகளில் விருந்தை அதற்கெனத் தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் டிபன் கேரியரில் அழகாக பேக் செய்து கொடுத்து விடுவோம். அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம். தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிடும் வசதியுள்ள வீடுகளில் ஒருவருக்கு ஒரு சேர், ஒரு டேபிள் வீதம் ஐம்பது பேருக்கும் தனித்தனியாக குறைந்தது ஆறடி இடைவெளிவிட்டு ஏற்பாடு செய்து தருகிறோம்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக, திருமணத் தம்பதியரின் பெயரில் புதிய செயலி ஒன்றையும் நாங்கள் வழங்கு கிறோம். அதன் மூலம் அவர்களது உறவினர்கள் எந்த தேசத்தில் இருந்தாலும் திருமண விழாவைக் கண்டு ரசிக்கும்படி நாங்களே திருமணத்தை லைவ் ஸ்டீரீமிங் செய்துகொடுப்போம்.
இப்போதைக்குச் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் எங்களது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் மற்ற மாவட்டங்களுக்கு எங்களால் நகர முடியவில்லை. இருப்பினும் கரோனா காலத்தில் இதுவரை 6 திருமணங்களைக் கரோனா ஸ்பெஷல் பேக்கேஜில் நடத்திக் கொடுத்திருக்கிறோம். இரண்டு லட்ச ரூபாயில் மட்டுமல்லாது இன்னும் கொஞ்சம் எளிமையாக திருமணம் நடத்துபவர்களுக்காக ஒரு லட்ச ரூபாயிலும் ஒரு பேக்கேஜ் வைத்திருக்கிறோம்” என்றார்.
இது தொடர்பாக மேலும் பேசிய சுதர்சன், “நான் தமிழ்நாடு வெட்டிங் ஈவன்ட் மீடியா ஆர்ட்டிஸ்ட் அசோஸியேஷன் தலைவராகவும் இருக்கிறேன். தமிழகம் முழுவதும் பதிவு பெற்ற, திருமண ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கும் பணியாளர்கள் மட்டுமே பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். இதில்லாமல் பதிவு பெறாத தொழிலாளர்களும் இருக்கிறார்கள். கரோனா காலத்தில் இவர்களையும் கண்டு நோக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
திருமணம் உள்ளிட்ட விழாக்களை நடத்த அனுமதி பெறுவதற்கு மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் ஒற்றைச்சாளர முறை அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் இன்னும் அந்த முறை அமலுக்கு வரவில்லை. இந்தப் பிரச்சினை உள்ளிட்ட இன்னும் சில முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அவரும் கவனிப்பதாகச் சொல்லி இருக்கிறார். நல்லது நடக்குமென்று காத்திருக்கிறோம்” என்றார்.