’பா’ வரிசைப் படங்கள் எடுப்பவர் என்று பேரெடுத்தவர் இயக்குநர் ஏ.பீம்சிங். சிவாஜியை வைத்து இயக்கிய பல படங்களின் முதல் எழுத்து ‘பா’ என்றே ஆரம்பிக்கும். ‘பாசமலர்’ படத்துக்கு முன்பே ‘பா’ வரிசையில் படம் எடுத்திருந்தாலும் இந்தப் படம் வந்த பிறகுதான் ‘பா’ வரிசை என்பது ரசிகர்களால் சொல்லப்பட்டது.
அந்தக் காலத்தில், சிவாஜி, பீம்சிங், கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் சேர்ந்துவிட்டால்,. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படம் என்று படம் தொடங்கும்போதே சொல்லிவிடுவார்கள்.
வலுவான கதை இருக்கவேண்டும் என்பதில் பீம்சிங் உறுதியாக இருப்பார். பிறகு, அந்தக் கதைக்கு மிகத் தெளிவான திரைக்கதையை உண்டுபண்ணுவதற்கு மெனக்கெடுவார். இந்தக் கதைக்கு வசனம் யார் எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்பதை அழகாக முடிவு செய்வார். சிவாஜிக்கு எங்கெல்லாம் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ளதோ அந்த இடங்களை இன்னும் இன்னும் என செப்பனிடுவார்.
அதேபோல், சிவாஜி மட்டுமின்றி படத்தில் நடிக்கும் அத்தனை கேரக்டர்களில் இருந்தும் ஆகச்சிறந்த நடிப்பைப் பெற்றுவிடுவார். அதேபோல், கண்ணதாசனிடம் பாடல்கள் வாங்குவதில் மெல்லிசை மன்னர்களிடம் டியூன்களை செலக்ட் செய்வதிலு வல்லவர் என்று பீம்சிங்கைப் புகழுகிறார்கள் திரையுலகினர். இதற்கு அவர் படத்தில் இடம் பெறும் பாடல்களே சாட்சி. இப்படியாகத்தான், பீம்சிங் - சிவாஜி கூட்டணியின் ‘பா’ வரிசைப் படங்கள், ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றன.
பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்த எல்லாப் படங்களுமே மக்களுக்குப் பிடித்தவையாகவே அமைந்தன. அதற்கெல்லாம் அச்சாரம் போட்டது 61-ம் வருடம். இந்த வருடத்தில், சிவாஜி கணேசன், ‘புனர்ஜென்மம்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘பாலும் பழமும்’ என ஐந்து படங்களில் நடித்தார். இதில் பத்மினியுடன் நடித்த ‘புனர்ஜென்மம்’ படத்தை ஆர்.எஸ்.மணி இயக்கினார். ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கினார்.
மற்ற மூன்று படங்களையும் ஏ.பீம்சிங் இயக்கினார். அதாவது, ‘பாசமலர்’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாலும் பழமும்’ என மூன்று படங்களும் ‘பா’ வரிசைப் படங்களாக, சிவாஜி - பீம்சிங் கூட்டணியில் அமைந்தன. மூன்று படங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வெவ்வேறு கதைக்களத்துடன் வந்தன. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.
சிவாஜி, பீம்சிங், கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணியில்தான் மூன்று படங்களும் வந்தன. இதில், ‘பாலும் பழமும்’ படத்தில் மட்டும் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் நடிக்கவில்லை. ‘பாசமலர்’ மற்றும் ‘பாவ மன்னிப்பு’ இரண்டிலும் ஜெமினி, சாவித்திரி ஜோடி நடித்திருந்து, ஈர்க்கப்பட்டது. அதேபோல், பந்துலுவின் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ஜெமினி, சாவித்திரி இருவரும் நடித்தார்கள்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தால், பாடல்கள் ஹிட் என்பது எழுதப்பட்ட விஷயம். அதிலும் பீம்சிங் படங்களென்றால், எல்லாப் பாடல்களும் ஹிட்டாகியிருக்கும்.61-ம் ஆண்டு வெளியான ‘பாவமன்னிப்பு’ படத்தில், ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘வந்தநாள் முதல்’, எல்லோரும் கொண்டாடுவோம்’, ‘பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது’, ‘சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்’, ‘சாய வேட்டி’, ‘அத்தான் என் அத்தான்’ என எல்லாப் பாட்டும் சூப்பர் ஹிட்டு.
மே 27-ம் தேதி வெளியான ‘பாசமலர்’ படமும் பாடல்களும் அப்படித்தான். ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘மலர்களைப் போல் தங்கை’, ‘யார் யார் யார் அவள் யாரோ’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘வாராயோ தோழி வாராயோ’, ‘மலர்ந்தும் மலராத’ என எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. தவிர, தலைமுறைகள் கடந்தும் கூட அண்ணன் - தங்கைக் கதையென்றாலே ‘பாசமலர்’தான் என்று இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சிவாஜியுடன் சரோஜாதேவி, செளகார் ஜானகி நடித்த ‘பாலும் பழமும்’ கூட பாடல்கள் பாலும் தேனுமாக அமைந்ததாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர் ,ரசிகர்கள். ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘காதல் சிறகைக் காற்றினில் விரித்து’, ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி’, ‘என்னை யாரென்று எண்ணிஎண்ணி’, ’ஆலயமணியின் ஓசையை’, ‘இந்த நாடகம்’, ‘போனால் போகட்டும் போடா’ என்று பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
அடுத்தடுத்து, அடுத்தடுத்த வருடங்களில், ‘பா’ வரிசைப் படங்கள் வந்தன; வெற்றி பெற்றன. இவற்றுக்கெல்லாம் ஆரம்பமாக, 61-ம் ஆண்டும் இந்தப் படங்களும் அமைந்தன.