வலைஞர் பக்கம்

உயிர்காக்கும் சிகிச்சைகளுக்காக ஓர் ஆண்டில் ரூ.58.5 லட்சம்: பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரம் தகவல்

குள.சண்முகசுந்தரம்

கடந்த ஓர் ஆண்டில் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து புக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேரின் மருத்துவச் சிகிச்சைகளுக்காக 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தரப்பட்டுள்ளதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கரோனா பொது முடக்கம் தொடங்கியதுமே தனது குடும்ப சகிதம் சென்னையிலிருந்து சிவகங்கை தொகுதிக்குக் கிளம்பிவிட்டார் கார்த்தி. காரைக்குடி அருகிலுள்ள மானகிரி தோட்ட பங்களாவில் இருந்தபடியே கரோனா நிவாரணப் பணிகளில் காங்கிரஸாரை ஈடுபடுத்தி வந்தவர், அவ்வப்போது ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மாவட்டத்தில் கரோனா தொற்று நிலவரம் குறித்துக் கேட்டு வந்தார்.

ஆங்காங்கே வறியவர்க்குக் கட்சியினர் அளித்த நிவாரணம் தவிர்த்து, தனது சொந்த செலவில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 16 பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,600 பேருக்கு சுமார் 600 ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார் கார்த்தி. தனி னித விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, தான் நேரடியாகக் களத்துக்குப் போகாமல் இந்த உதவிகளை எல்லாம் அந்தந்தப் பகுதி கட்சி நிர்வாகிகளிடம் தந்து அவர்கள் மூலமாகப் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதனிடையே, தான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவுக்கு வருவதால் சிவகங்கை தொகுதிக்கான தனது ஓராண்டுகால சேவைகளையும் பட்டியலிட்டு சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார் கார்த்தி. அதன்படி கடந்த ஓராண்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் சுமார் 4 கோடியே 90 லட்ச ரூபாய் செலவில் மொத்தம் 36 பணிகளைச் செய்து முடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் கார்த்தி.

கடந்த நிதியாண்டில் பாரதப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்காக சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடமிருந்து கார்த்திக்கு மொத்தம் 31 மனுக்கள் வரப்பெற்றிருக்கின்றன. பிரதமருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அந்த மனுக்களில் இதுவரை 21 நபர்களுக்கு மொத்தம் 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு உதவியிருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார் .

SCROLL FOR NEXT