வலைஞர் பக்கம்

ஊரடங்கில் முடங்காத மேதைகள் 2- சர் ஐசக் நியூட்டன்

ஆதி

ஷேக்ஸ்பியருக்கு சற்றுப் பிந்தைய காலத்தில் வாழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன் (1643-1727). 1665 ஆகஸ்ட் மாதம் தன்னுடைய இருபது வயதுகளில் நியூட்டன் இருந்தார். அப்போது பியுபானிக் பிளேக் இங்கிலாந்தைத் தாக்கியது. அதன் காரணமாக அவர் படித்துவந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிரினிட்டி கல்லூரியில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

அங்கிருந்து 100 கி.மீ. தொலைவில் லிங்கன்ஷயர் பகுதியில் இருந்த உல்ஸ்ட்ரோப் பகுதியில் அவருடைய குடும்பத் தோட்டம் இருந்தது. நோயிலிருந்து விலகியிருப்பதற்காக அந்த வீட்டுக்கு நியூட்டன் திரும்பினார். 1667ஆம் ஆண்டுதான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் சென்றார். அவருடைய பிற்காலத் தொழில்வாழ்க்கை, கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைகள், அறிவுத்தூண்டல்கள் இந்த பிளேக் நோய் தொற்றுப்பரவல் காலத்திலேயே உறுதியடைந்தன.

வாழ்க்கையின் சிறந்த காலம்

அடிப்படையில் ஒரு கணிதவியலாளராக அவர் இருந்தார். இந்தத் தனிமைக் காலத்தில் தொடக்ககால நுண்கணிதம் (கால்குலஸ்), ஒளியியல் கொள்கை போன்றவற்றைக் குறித்து ஆராய்ந்தார், தன்னுடைய படுக்கையறையில் ஒரு பட்டகத்தை வைத்து பரிசோதனைகளை மேற்கொண்டார். பிற்காலத்தில் ஒளியியல் கொள்கை உருவாக இதுவே அடிப்படையாக இருந்தது. இந்தக் காலம்தான் புவியீர்ப்பு விசை குறித்த புகழ்பெற்ற கொள்கை உருவாகவும் காரணமாக இருந்தது.

நியூட்டனே இது குறித்து பிற்காலத்தில் குறிப்பிட்டுள்ளார்.: மேற்கண்ட அனைத்துமே 1965, 1666ஆம் ஆண்டுகளில் பிளேக் தொற்று காரணமாக வீட்டில் இருந்த காலத்தில் தோன்றியவை. என்னுடைய வாழ்க்கையின் வேறு எந்தப் பகுதியைவிடவும், அந்தக் காலமே என்னுடைய கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைகள் தோன்றிய சிறந்த பகுதியாகவும் கணிதவியல்-தத்துவவியல் சார்ந்த கவனம் பெருகிய காலமாகவும் கருதுகிறேன்.

ஆப்பிள் தலையில் விழுந்ததா?

பிளேக் நோய் பரவியதால் தனிமைப்படுத்துதலுக்காக கிராமப்பகுதிக்குச் சென்றிருந்த இந்தக் காலத்தில்தான், அவர் தலையில் ஆப்பிள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஆர்கிமிடீஸுக்கு குளியல்தொட்டியைப் போல், நியூட்டனுக்கு ஆப்பிள் அமைந்தது. ஆனால் பரவலாகச் சொல்லப்படுவதுபோல் அவர் தலையில் ஆப்பிள் எல்லாம் விழவில்லை. அவருடைய அறைக்கு வெளியே இருந்த ஆப்பிள் மரத்தை தொடர்ந்து கவனிப்பதற்கு, இந்தக் காலத்தில் நியூட்டனுக்கு நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கும். புவியீர்ப்பு விசைக் கொள்கை உருவாக அந்த ஆப்பிள் மரம் நிச்சயமாகத் தூண்டுதலாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

SCROLL FOR NEXT