பொதுமுடக்கத்தால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சினிமா ஆர்வலர்களுக்கு தகுதியான நபர்களைக் கொண்டு இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது ‘பட்டறை’ அமைப்பு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஈழத் தமிழர் ஒருவர் முன்னெடுக்கும் இந்த முயற்சி சினிமாத் துறைப் பிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பட்டறை அமைப்பின் நிறுவனர் தமிழியம் சுபாஸ், நார்வே நாட்டில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சினிமா துறையின் மீதும் அதீத ஆர்வம் கொண்ட சுபாஸ், திரைப்பட இயக்கப் பணியிலும் ஆர்வம்கொண்டவர். இந்நிலையில், அவர் நடத்தி வரும் பட்டறை அமைப்பின் மூலம் திரைப்படத் துறையின் மீது நாட்டம் கொண்ட மாணவ - மாணவிகளுக்கு திரைப்படத் துறையின் பல்வேறு உள்கூறுகளையும் அடங்கிய வகுப்பினை இலவசமாக நடத்த முடிவு செய்தார்.
இவரது இந்த எண்ணத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஒத்துழைக்க, இப்போது ஆன்லைனில் இலவச வகுப்பு நடத்தி வருகிறது பட்டறை அமைப்பு. ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த இலவச ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
இதுகுறித்து தமிழியம் சுபாஸ் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “சினிமாவுக்குள் இருக்கும் ஒவ்வொரு துறைக்கும் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டே பயிற்சி கொடுக்கிறோம். இயக்கத்தைப் பொறுத்தவரை பாலாஜி சக்திவேல் சாரும், நலன்குமார சாமி சாரும் பயிற்சி கொடுக்கிறார்கள். சினிமா நிறையவே நவீனமாகி வருகிறது. புதிய புதிய அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதற்கேற்ப அத்துறை சார்ந்த ஆர்வம் கொண்டோரைத் தகுதிப்படுத்தும் முயற்சிதான் இது. சனி, ஞாயிறு மட்டுமே வகுப்பு நடக்கும், இந்தப் பயிற்சி, மொத்தம் 30 வகுப்புகளைக் கொண்டது.
பட்டறை அமைப்பைப் பொறுத்தவரை சினிமா மட்டுமே இலக்கு அல்ல. சகல துறை அப்டேட்களையும் அதற்கேற்ற நிபுணத்துவம் கொண்டோரை வைத்து அணுகுவதுதான் இதன் நோக்கம். அதில் இந்தப் பொதுமுடக்கத்தில் சினிமாவைக் கையில் எடுத்திருக்கிறோம். இப்போது ஆன்லைன் வகுப்பில் பங்கெடுப்பவர்களில் 90 சதவீதம் பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். 10 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதிலிருந்து பத்துக் கலைஞர்கள் உருவானாலும் பட்டறை அமைப்பின் கனவு நனவாகி விடும்” என்றார்.