தேனீக்கள் வளர்ப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கி மத்திய அரசு கொடுத்துள்ள இந்த அதீத முக்கியத்துவம் பற்றி கோவை வேளாண்மை கல்லூரி முதல்வர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் விளக்கியுள்ளார்.
‘கரோனா’ ஊரடங்கால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது. அதை தூக்கி நிறுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 3-வது கட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன், விவசாயம், கால்நடை, பால் வளம் மற்றும் மீன்வளம் போன்ற 11 அம்ச அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில், முக்கியமானது தேனீக்கள் வளர்ப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கியது. தேனீ வளர்ப்பிற்கு மத்திய அரசு கொடுத்துள்ள இந்த அதீத முக்கியத்துவம் பற்றி மதுரை வேளாண்மை கல்லூரி முன்னாள் பூச்சியியல் துறை தலைவரும், தற்போதைய கோவை வேளாண்மை கல்லூரி முதல்வருமான பேராசிரியர் கல்யாண சுந்தரத்திடம் கேட்டோம். அவர் கூறியதாவது:
தேனீக்கள் வளர்ப்பின் பின்னணியில் விவசாயத்தில் மகசூலை அதிகரிக்கும் சிறப்பான திட்டமும், நிலம் இல்லாத விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் நிரந்தர வருவாய் பெறக்கூடிய உன்னதமான திட்டமும் இருக்கிறது. தற்போது உண்மையான மகசூல் இழப்பிற்கு தேனீக்கள் அழிவே முக்கிய காரணம்.
அதனால், தேனீக்களை வேளாண்மையின் தேவதைகள் என்று சொல்கிறோம். வேளாண்மை நாட்டிற்கு முதுகெலும்பு, வேளாண்மைக்கு முதுகெலும்பு தேனீக்கள். அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் உதவுகிறது. இது நடந்தால் மட்டுமே விவசாயத்தில் மகசூல் கிடைக்கும். மக்கா சோளம், சோளம்,ஏலக்காய், கொய்யா, பப்பாளி, தக்காளி, கத்திரி, பாகற்காய், பூசணிக்காய், மாங்காய், பருத்து உள்ளிட்ட தோட்டக்கலைப்பயிர்களில் தேனீக்கள் வளர்ப்பால் மகசூல் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கூடும்.
தேனீக்கள் இல்லாததால் 5 டன் கிடைக்க வேண்டிய மகசூல் தற்போது 2 டன் மட்டுமேகிடைக்கிறது. தேனீ வளர்ப்பு ஒரு சிறிய தொழில்நுட்பம். இதை செய்தால் மகசூல் அதிகரிக்கிறது என்றால் யாருக்கு கசக்கும். விவசாயிகளுக்கு, இந்த விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் விவசாயிகள் நிரந்தரமாக ஒரு இடத்தில் தேனீக்கள் பெட்டிகளை வைத்து தேனீக்கள் வளர்க்க மாட்டார்கள். தேனீக்கள் வளருவதற்கு பூக்கள் வேண்டும். அதற்கு விவசாயம் நடக்கக்கூடிய தோட்டம் வேண்டும்.
அதனால், மாதத்திற்கு ஒரு இடத்தில் தேனீக்கள் பெட்டிகளை வைப்பார்கள். இதை Migratory Bee Keeping என்று சொல்வார்கள். எந்ததெந்த தோட்டங்களில் விவசாயம் நடக்கிறதோ அந்த இடத்தில் தேனீக்களை வளர்ப்பார்கள். அதனால், விவசாயத்திலும் அதிக மகசூல் அவர்களால் ஈட்ட முடிகிறது. தேனீக்கள் வளர்ப்பிலும் அவர்கள் முன்னோடியாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பூவிலும் மதுரமும், மகரந்த தூளும் வேண்டும். இரண்டும் இருந்தால் மட்டுமே தேனீக்கள் வாழ முடியும். பப்பாளி, பனை மரத்திலும், பூசணி, பாகற்காய், சுரக்காய் போன்ற கொடி காய்கறி பயிர்களிலும் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும்.
ஆண் பூவில் உள்ள மகரந்த தூளை எடுத்து கொண்டு, அந்த பெண் பூவில் உள் சூல் முடியில் வைக்க வேண்டும். இதை தேனீக்கள் சரியாக செய்கின்றன. அவ்வாறு செய்யும்போது விதை உருவாகி பூ நிலைத்து இருக்கும், உதிராது, கொட்டாது, மகசூல் கூடும். காய்கறிகளும், பழங்களும் ருசியாக இருக்கும். தேனீக்கள் இல்லாதால் மகசூல் குறைவதாக வேளாண் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை மகசூல் குறைகிறது. வறட்சி ஏற்படுகிறது.
அதனாலே, மத்திய அரசு நிறைய கமிட்டி போட்டு, அவர்கள் பரிந்துரையிலே குறுகிய காலத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் திட்டமாக தேனீக்கள் வளர்ப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.
தேனீக்கள் வளர்ப்பால் இயற்கை வேளாண்மையை ஊக்கவிக்கலாம். தேனீக்கள் வளர்த்தால் அந்த பூச்சிகளை காப்பாற்ற இயல்பாக விவசாயிகள் பூச்சி மருந்து அடிப்பதை குறைப்பார்கள். மண் வளமாகும். சுற்றுச்சூழல் மேம்படும். கடைசி தேனீ இருக்கிற வரைதான் உயிரினங்கள் இந்த மண்ணில் இருக்கும். தேனீ இனம் அழிந்துவிட்டால் மனித இனம் மறைந்துவிடும்.
60 சதவீதம் தேனீக்கள் ஏறகணவே மாண்டு விட்டன. தற்போது குறைந்த சதவீத தேனீக்களை கொண்டுதான் விவசாயம் செய்கிறோம். மகரந்த சேர்க்கையை செயற்கையாக உருவாக்க முடியாது என்பதால் தேனீக்கள் இடத்தை எந்த தொழில் நுட்பத்தாலும் நிரப்ப முடியாது. உலகத்தில் எத்தனையோ ஜீவ ராசிகள் உண்டு.
எல்லா பூச்சிகளும் பூக்களை நோக்கி போகிறது. அவைகள் அனைத்தும் ஒரு மரத்தில், செடியின் பூவில் உள்ள மகரந்தத்தை எடுத்து இன்னொரு செடியில் கொண்டு போய் வைத்துவிடும். அதனால், மகரந்த சேர்க்கைக்கு அவைகள் உதவாது. ஆனால், தேனீக்கள் மட்டுமே, காலையில் கொய்யா மரத்திற்கு சென்றால் அந்த மரத்தின் பூக்களை மட்டுமே சுற்றும். அதை
வேட்டையாடி மகரந்தத்தை எடுத்து முடித்தப்பிறகே அடுத்த செடிகளுக்கு போகும். ஒரே பூவை தொடர்ந்து சுற்றுவதால் அந்த செடிகளின் அயல்மகரந்த சேர்க்கைக்கு அவைகள் உதவகிறது. இந்த பணியை வேற எந்த பூச்சிகளும் செய்யமுடியாது. அதனால், மத்திய அரசு வெறும் தேன் உற்பத்திக்காக மட்டுமே இந்த ரூ.500 கோடி ஒதுக்கவில்லை. அதன் பின்னணியில் வேளாண்மை மேம்படுத்தும் திட்டமும் உள்ளது, ’’ என்றார்.