கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவத் தொடங்கியவுடன் பலரும் கேள்விப்பட்ட முதல் சொற்களில் ஒன்று குவாரன்டைன் (Quarantine-தனிமைப்படுத்திக் கண்காணித்தல்), ஐசோலேஷன் (Isolation-தனிமைப்படுத்துதல்). நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுபவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நடைமுறையே குவாரன்டைன். இந்த நடைமுறை நமக்கெல்லாம் புதிது. வரலாற்றில் நோய் கண்காணிப்பு சார்ந்த இந்த நடைமுறை எப்போது தொடங்கியது?
650 ஆண்டுகளுக்கு முன் வைரஸ், பாக்டீரியா பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதேநேரம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை, நோயால் பாதிக்கப்பட சாத்தியமுள்ளவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிப்பது அவசியம் என்பதை மருத்துவர்களும் நகராட்சி அதிகாரிகளும் அந்தக் காலத்திலேயே புரிந்துகொண்டிருந்தார்கள். பூபானிக் பிளேக்-கறுப்பு மரணம் எனப்படும் தொற்றுநோயால் 14 ஆம் நூற்றாண்டில் உலகம் பெரும் அவதிப்பட்டு வந்தது. அந்தக் காலத்தில்தான் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நடைமுறை தொடங்கியது.
மத்திய கால இத்தாலி, பிளேக் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 1348இல் வெனிஸ், மிலன் ஆகிய நகரங்களில் பிளேக் நோய் பரவத் தொடங்கியிருந்தது. பொருட்களை வர்த்தகம் செய்வதன் மூலம் பிளேக் பரவலாம் என்பது உணரப்பட்டிருந்தது. நோய் பாதித்த ஒருவருடன் மற்றொருவர் தொடர்புகொள்வது ஆபத்தானது என்பதையும் புரிந்துகொண்டிருந்தார்கள். அதனால் இவற்றையெல்லாம் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தார்கள். அதன் ஒரு பகுதியாகவே தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நடைமுறையும் தொடங்கியது.
வெனிஸ் துறைமுகத்துக்கு வரும் கப்பல் பயணிகள், சரக்குகள் உடனடியாகக் கரைக்கு வர அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அந்தக் கப்பல்கள் நடுக்கடலிலேயே 40 நாட்கள் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே 'குவாரன்டைன்' என்ற சொல் உருவானதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்படலாம் என சந்தேகிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்தும் குவாரன்டைன் நடைமுறை முதன்முதலில் வெனிஸ் இருந்த இத்தாலியின் மற்றொரு நகரத்தில்தான் தொடங்கியது. இது தொடர்பாக ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேன் ஸ்டீவன்ஸ் கிராவ்ஷா எழுதிய நூல் 'Plague Hospitals: Public Health for te City in Early Modern Venice'. இந்த நூல் பல முக்கிய விவரங்களைத் தருகிறது.
நகருக்கு வெளியே
அட்ரியாடிக் கடற் பகுதியிலிருந்த ரகுசா துறைமுகம் (இன்றைய துப்ரோவ்னிக்) நகரத்தில்தான் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நடைமுறை (குவாரன்டைன்) முதலில் சட்டபூர்வ நடைமுறையாக்கப்பட்டது. இது தொடர்பாக ரகுசா துறைமுக நகராட்சி மன்றத்தில் ஓர் ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்ரோவ்னிக் ஆவணக் காப்பகத்தில் இந்த ஆணை இன்றும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஆவணம் கவனப்படுத்தும் அம்சங்கள்:
பிளேக் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் ரகுசா அல்லது அந்த மாகாணப் பகுதிகளுக்குள் நுழையக் கூடாது. துறைமுகத்துக்கு வரும் அனைத்துக் கப்பல்கள், வணிகக் குழுக்கள் நோய்த்தொற்றுக்காகத் தனிமைப்படுத்தப்படும். வெளியிலிருந்து வருபவர்கள், நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்காக மர்கன் தீவு, ட்ஸவ்டட் நகர்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் மையங்களில் ஒரு மாதம் கழித்த பிறகே நகருக்குள் வரலாம்.
ரகுசா பகுதிக்குத் தெற்கில் உள்ள பாறை மிகுந்த தீவு மர்கன், நிலப்பகுதி வழியாக வரும் வணிகக் குழுக்கள் ரகுசாவுக்கு முன்பாக வந்தடையும் இடம் கவ்டட். ரகுசா (துப்ரோவ்னிக்) துறைமுகம், மர்கன், கவ்டட் போன்ற பகுதிகள் அன்றைக்கு இத்தாலியில் இருந்திருந்தாலும், இன்றைக்கு அவை குரோஷியா நாட்டில் அமைந்துள்ளன.
30 நாட்களா, 40 நாட்களா?
மத்திய கால மருத்துவச் செயல்பாடுகளில் ரகுசா நகரம் நிறைவேற்றிய தனிமைப்படுத்துதல் கண்காணிப்பு குறித்த ஆணை மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. வெளியிலிருந்து நகரத்துக்குள் வருபவர்களை 30 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பது என்ற நடைமுறை, நோய் அடைக்காலம் (Incubation period) தொடர்பாக அந்தக் கால மருத்துவர்களுக்கு இருந்த மேம்பட்ட புரிதலை வெளிப்படுத்துகிறது. ஏற்கெனவே நோய் தொற்றியிருப்பவர்கள் அந்தக் காலத்துக்குள் குணமடைந்துவிடுவார்கள் அல்லது புதிதாக நோய் தொற்றியவர்கள் என்றால், அந்தக் கால இடைவெளிக்குள் நோய் வெளிப்பட்டுவிடும். வெளியிலிருந்து வருபவர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்படாமலும் இருக்கலாம். அவர்களிடம் நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே, இந்த 30 நாள் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்கப்பட்டது.
இப்படி அந்த நகரத்துக்கு வரும் கடல் பயணிகளும் வணிகக் குழுக்களும் 30 நாட்கள் அல்லது ஒருமாத காலம் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அது இத்தாலி மொழியில் ட்ரென்டினோ (Trentino) என்றே அழைக்கப்பட்டது. அதேநேரம் குவாரன்டைன் என்ற சொல் இத்தாலியச் சொல்லான குவாரன்டினோ என்ற சொல்லில் இருந்தே உருவானது. குவாரன்டினோ (Quarantino) என்றால், 40 நாட்கள் என்று அர்த்தம்.
அப்படியென்றால் 30 நாட்கள் தனிமைப்படுத்துதல் ஏன் குவாரன்டினோ என்று தவறாக அழைக்கப்பட்டது? மத்திய கால கிறிஸ்தவர்களிடையே 40 நாட்கள் என்ற காலப் பகுதி முக்கியத்துவம் பெற்றிருந்தது. உலக உயிரினங்களைக் காப்பாற்ற அவற்றின் பிரதிநிதிகளை கப்பலில் நோவா அழைத்துச் செல்வதற்குமுன் 40 நாட்கள் பெருமழை பெய்தது, இயேசு கிறிஸ்து காட்டுப் பகுதியில் இருந்தபோது 40 நாட்கள் உண்ணா நோன்பு இருந்தார். பிளேக் தனிமைப்படுத்துதலுக்கு முன்பாகவே புதிதாகப் பிரசவித்த தாய், 40 நாட்கள் ஓய்வெடுப்பது மருத்துவ வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
மேலும் ஒரு பெருமை
இப்படிக் கடுமையான தனிமைப்படுத்துதல் சட்டங்களைக் கொண்டிருந்தும்கூட ரகுசா நகரம் பிளேக் தொற்றால் பாதிப்பை எதிர்கொண்டது. கடல்வழி வணித்தை மையமாகக் கொண்டிருந்த அந்த நகரத்தைச் சுற்றி சுவரை எழுப்ப முடியவில்லை. வர்த்தகம் மூலமாக அந்த நகரம் தழைத்துக்கொண்டிருந்ததுதான் இதற்குக் காரணம். 14 ஆம் நூற்றாண்டில் பரவத் தொடங்கினாலும் 17 ஆம் நூற்றாண்டுவரை பிளேக் நோய் ஐரோப்பாவைப் பிடித்தாட்டிக்கொண்டிருந்தது.
அதேநேரம் ரகுசா நகரத்துக்கு மற்றொரு பெருமையும் உண்டு. அது பிளேக் சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனை. உலக வரலாற்றில் ஒரு தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட முதல் மருத்துவமனை அது. அந்த நகரத்துக்கு அருகே இருந்த மில்யெட் என்ற தீவில் அந்த மருத்துவமனை அமைந்திருந்தது. அரசு நிதியில் செயல்பட்ட இது போன்ற சிகிச்சை மையங்கள் 'லாசரெட்டோ' என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டன. பிளேக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தும் மையங்களாகவும் இவை அமைந்தன. நோயாளிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த லாசரெட்டோ மருத்துவ மையங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டுவந்தன. இப்படியாகக் குவாரன்டைன், அதற்கான சிகிச்சை என இரண்டு முதல் பெருமைகளை ரகுசா நகரம் தட்டிச் செல்கிறது.