வலைஞர் பக்கம்

கரோனா காலத்தில் சரும நோய்கள் : எளிதான  தீர்வு

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலத்திலிருந்தே, அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

மேலும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி எனவும் வரைமுறைகளை வெளியிட்டு வருகின்றன. முகக்கவசம் அணிந்து கொள்வது, சானிடைசர் மூலமாக கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, வெளியே சென்றுவிட்டு வந்தால் கைகளைச் சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவுவது உள்ளிட்ட பல விஷயங்கள் அதில் அடங்கும்.

மக்கள் இந்த வரைமுறைகளைப் பின்பற்றத் தொடங்க, பல கடைகளில் சானிடைசர்கள் விற்றுத் தீர்ந்தன. சில நிறுவனங்கள் தங்களுடைய சானிடைசர் விலையையும் உயர்த்தின. கரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்றாலும், மக்களுக்கு வெவ்வேறு வழிகளில் இதர நோய்கள் தாக்கி வருகின்றன. அதில் முக்கியமானது சரும நோய்கள்.

மக்கள் தொடர்ந்து அதிக அளவில் சானிடைசர் உபயோகிப்பதால் பலருக்கும் அதிலுள்ள கெமிக்கல் ஒப்புக் கொள்ளாமல் சரும நோய்களால் அவதிப்படுகிறார்கள். இந்த சரும நோய் தொடர்பாக 40 வருடங்களாக சரும நோய் நிபுணராக இருக்கும் மூத்த மருத்துவர் குரு. இளங்கோவனிடம் பேசினோம். அவர் நம்மிடம் பல்வேறு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தற்போது மக்களிடையே பரவி வரும் சரும நோய் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் மருத்துவர் குரு.இளங்கோவன் கூறியதாவது:

"கைகளை அடிக்கடி சானிடைசரால் சுத்தம் செய்யும்போது சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. உள்ளங்கையில் தோல் உரிதல், அரிப்பு, ஒவ்வாமை சிலருக்கு ஏற்படுகின்றன. எல்லோருக்கும் இது வருவதில்லை. இந்த சானிடைசர்களில் இருக்கும் ஆல்கஹால் உள்ளிட்ட கிருமிநாசினிக்கான ரசாயனங்களால் தோல் உரிவதுண்டு.பொதுவாக இது பலருக்கும் வரும் வழக்கமான ஒவ்வாமை பிரச்சினைதான். இதில் ஆபத்து இல்லை. இதற்கு Allergic Contact Dermatitis என்று பெயர். இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் உடனடியாக சானிடைசர் பயன்பாட்டை நிறுத்திவிட்டு சோப்பு பயன்படுத்தினாலே போதுமானது. இரண்டு மூன்று நாட்களில் சருமப் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ஊரடங்கினால் வீட்டிலேயே அடங்கி இருக்கும் நிலையில் , வீட்டில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தால், வீட்டில் சுத்தம் சுகாதாரம் சரியாக இல்லை என்றால் சொறி, சிரங்கு (scabies) வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த ஸ்கேபிஸ் ஒரு தொற்று நோய். குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு எளிதில் பரவக் கூடும். இதற்கான சிகிச்சை எளிதுதான். ஆனால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை செய்வது முக்கியம்.

இதற்கான Gamma benzene hexachloride க்ரீமை தடவினால் 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரத்துக்குள் சரியாகும். அணிந்த வேட்டி, சட்டை, உள்ளாடைகள், போர்வை, தலையணை உறை என அனைத்தையும் சுத்தமாகத் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். சிகிச்சை சரியாகச் செய்யவில்லை என்றால் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சினை வரலாம். இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தால் அது இரண்டாம் நிலை தொற்றாகவும், பாக்டீரியா தொற்றாகவும் மாறும். இது தொடர்ந்து சிறுநீரகத்தைப் பாதிக்கும்.

மனக்கவலையும் தரும் சரும நோய்

மன உளைச்சல், மனக்கவலை, அதிக பதற்றம் ஆகியவற்றால் நம்முடைய உடலில் அவ்வப்போது அரிப்பு, தடிமன் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. மன அழுத்தத்தால் உடலில் நோய் ஏற்படும் இதை Psychosomatic நோய் என்பார்கள். இதே போல சொரியாஸிஸ், கருநீலப்படை ஆகிய சருமப் பிரச்சினைகளும் மன அழுத்தத்தால் வருபவை. இந்தப் பிரச்சினைகளும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அதிகம் ஏற்படுகின்றன. ஏற்கெனவே இருந்தவர்களுக்கு அதிகமாகவும், புதிய நபர்களுக்கும் இந்த வியாதி பாதிக்கிறது. வெண் குஷ்டம், விட்டிலிகோ (தோல் நிறமிழத்தல்) உள்ளிட்ட பிரச்சினைகளும் வருகின்றன.

சில சமயம் உட்கொள்ளும் மருந்துகளாலும் தோலில் அரிப்பு, தடிமன் என பக்க விளைவுகள் ஏற்படும். வழக்கத்தை விட அதிகமாக இப்போது பலர் வீட்டிலேயே இருப்பதால் இத்தகைய சரும நோய்கள் ஏற்படுகின்றன. வியர்வைக் கட்டிகளையும் பார்க்க முடிகிறது. கோடைக் காலமும் ஆரம்பித்துவிட்டதால் சரும நோய்கள் அதிகரித்துள்ளன. லேக்டோ கேலமைன் போன்ற லோஷன்கள் தடவினால் இவை சரியாகும்.

இந்தப் பிரச்சினைகள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. இவை அனைத்தும் தற்காலிகப் பிரச்சினைகள் தான். சிகிச்சை தந்தால் குணமாகிவிடும்".

இவ்வாறு மருத்துவர் இளங்கோவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT