வலைஞர் பக்கம்

அமேசான் கிண்டில்: கையில் ஒரு நூலகம்!

முகமது ஹுசைன்

ஒவ்வொருவருடைய வாட்ஸ் அப்பிலும் நிறைந்துகிடக்கும் மீம்ஸ்கள், வயது வித்தியாசமின்றி அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில மீம்ஸ்கள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கும், சில மீம்ஸ்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கும். சில மீம்ஸ்கள் நம்மைப் பொங்கி எழவைக்கும்! ஆனால் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்துவது மீம்ஸில் இருக்கும் ஒளிப்படமா, வாசகமா? பழைய மீம்ஸ்களைக் கிளறிப் பார்த்தால், அதற்குக் காரணம், அதன் வாசகங்கள்தாம் என்பது புரியும். ஏனென்றால், படங்களால் காட்சியை மட்டுமே உணர்த்த முடியும். ஆனால் வாசகங்கள் காட்சியோடு எண்ண ஓட்டங்களையும் கருத்துகளையும் உணர்த்தும். அதனால்தான், வாசிப்பு முக்கியம் என்று எப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால், நவீன ஸ்மார்ட்போன் உலகில், ‘அதற்கு எல்லாம் நேரமில்லை, ப்ரோ’ என்று நீங்கள் சொல்லலாம். பிஸியானவர்கள்கூட வாசிப்பைப் பழக்கமாகக் கொள்ள உதவுகிறது ஒரு ஆப். அதன் பெயர் ‘அமேசான் கிண்டில்’.

இது ஒரு நூலகம்

அமேசான் கிண்டிலை ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை நிலையம் என்று சொல்லலாம். நூலகம் என்றும் சொல்லலாம். இதில் புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் வாங்கவும் முடியும். அதில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களை வாசிக்கவும் முடியும். ஸ்மார்ட்போனின் அளவை ஒத்த இது ஒரு வாசிப்பு சாதனம். அதன் விலை மிக அதிகம் இல்லை என்றாலும், கிண்டிலை வாங்குவதைவிட கிண்டில் ஆப்பை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்வதே புத்திசாலித்தனம்.

கிண்டிலை ஸ்மார்ட்போனில் நிறுவி, கணக்கைத் தொடங்கி, அதனுள் நுழைந்தால், உலகில் உள்ள அனைத்து மொழிகளின் பெரும்பாலான புத்தகங்களும் நம் விரல்களின் தேர்வுக்காகக் காத்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் புத்தக அலமாரியிலிருந்து புத்தகத்தைத் தேடி எடுப்பதே கஷ்டம். அதிலும் லட்சக்கணக்கான புத்தகங்களிலிருந்து எப்படித் தேர்வு செய்வது என மலைக்கத் தேவையில்லை.

இது கூகுள் உலகம். உங்களுக்கு வேண்டிய புத்தகத்தின் பெயரைப் பதிவிட்டுத் தேடச் சொன்னால், அடுத்த நொடியில் ஸ்மார்ட்போன் திரையில் அந்தப் புத்தகம் விரியும். எந்தப் புத்தகத்தைப் படிப்பது எனத் தெரியவில்லையா? அதற்கும் மெனக்கெடத் தேவையில்லை. புத்தகங்கள் மொழிவாரியாகவும் வகை வகையாகவும் எழுத்தாளர் வாரியாகவும் சீராக அட்டவணையிடப்படுகிறது.

வேண்டிய மொழியைத் தேர்வுசெய்தால், அந்த மொழியில் குழந்தைகள் புத்தகம், சாகசப் புனைவுகள், காதல் புனைவுகள், குடும்பப் புனைவுகள், புனைவற்றவை, பழங்கால இலக்கியங்கள் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அல்லது அதிகம் வாசிக்கப்பட்டதையோ வாங்கப்பட்டதையோ தேர்வு செய்தும் படிக்கலாம். வாசித்த புத்தகம் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்கான மதிப்பீட்டை வழங்கலாம். அது உங்களைப் போன்ற மற்ற வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

டிக்‌ஷ்ஷனரியும் இருக்கே

‘ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க எனக்குப் பிடிக்கும், ஆனால், வார்த்தைகளின் அர்த்தங்களைத் தேடுவதற்கு அடிக்கடி அகராதியைப் பார்க்க வேண்டியுள்ளது. வாசிப்பை மிகவும் அலுப்பானதாகவும் சிரமமானதாகவும் மாற்றிவிடுகிறது’ என்று சொல்பவர்கள், ஒரு முறை கிண்டிலில் வாசித்துப் பாருங்கள். அந்தச் சலிப்பும் சிரமமும் இல்லாமல் ஆங்கில வாசிப்பை இலகுவாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை உணரலாம்.

கிண்டிலில் ஆங்கில அகராதியும், விக்கிப்பீடியாவும் உள்ளடங்கி உள்ளது. வாசிக்கும்போது புரியாத வார்த்தையை அழுத்தித் தொட்டால் போதும், அதன் அர்த்தம் உடனடியாகத் திரையில் தோன்றும். ஒரு வேளை அந்த வார்த்தை ஊரின் பெயராகவோ வரலாற்று நிகழ்வுகளாகவோ இருந்தால் அவற்றின் விவரத்தை அகராதிக்குப் பதில் விக்கிப்பீடியாவின் மூலம் ஸ்மார்ட்போன் திரையில் விரியும். இதனால் உங்கள் வாசிப்பு எளிதாவதோடு உங்களின் ஆங்கில மொழிப் புலமையும் மேம்படும்.

நீங்கள் கவிஞராகவோ எழுத்தாளராகவோ இருந்தால், இனி அதை ஃபேஸ்புக்கிலோ பிளாக்கிலோ கிடைக்கும் லைக்குகளையும் ஹார்டின்களையும் மட்டும் கொண்டு திருப்தியடையத் தேவையில்லை. அதை நீங்கள் புத்தகங்களாக கிண்டிலில் பிரசுரிக்கலாம். அங்கு உங்கள் புத்தகத்தை இலவசமாகவோ விலைக்கோ பிரசுரிக்கலாம். இதன் மூலம் உங்கள் எழுத்து வெறும் லைக்குகளை மட்டுமின்றி பணத்தையும் பெற்றுத் தரும்.

இனி, ஃபேஸ்புக்கில் லைக்குகள் போடுவதற்கும் வாட்ஸ் அப்பில் மீம்ஸ்களைப் பார்ப்பதற்கும், அவற்றைப் பலருக்கு ஃபார்வர்ட் பண்ணுவதற்கும் மட்டும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தாமல், கொஞ்சம் புத்தகங்களையும் வாசிக்கலாமே, ப்ரோ!

SCROLL FOR NEXT