வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1991 ஆகஸ்ட் 5: உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி

செய்திப்பிரிவு

‘மை லார்ட்’ என்ற சொல் மட்டுமே உச்சரிக்கப்பட்ட நீதிமன்றங்களில் ‘மை லேடி’ என்று அழைக்கும் வழக்கம் ஏற்படக் காரணமாக இருந்தவர் நீதிபதி லீலா சேத்.

90-களில் இந்தியத் தொலைக்காட்சிப் பார்வையாளர்களைக் கட்டிப்போட்ட ‘சக்திமான்’ நெடுந்தொடரை நிஜம் என நம்பி விபத்தில் சிக்கிய குழந்தைகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தினார். “நான் யார் இன்னொருவரின் உயிரைப் பறிக்க? நான் என்ன கடவுளா?” என்று கேட்ட நீதிபதி அவர். 2012-ல் டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில், வர்மா கமிஷனில் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டு, வன்புணர்வுச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்கள் கொண்டுவந்தார். இந்தியாவில் உயர் நீதிமன்றத்துக்கு முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

1930-ல் லக்னோவில் பிறந்தார் லீலா சேத். 1959-ல் கைக் குழந்தையோடு பரீட்சை எழுதி இங்கிலாந்து பாரில் முதலிடம் வென்றார். அப்போது ‘மதர்-இன்- லா’ (சட்டத்தில் தாய்) என லண்டன் நாளிதழ் அவரைப் பாராட்டியது. அதே ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். அடுத்து, வழக்கறிஞராக பாட்னா உயர் நீதிமன்றத்துக்குள் கால் பதித்தபோது, அவருடன் சட்ட நிபுணராகப் பணியாற்ற இன்னொரு பெண் மட்டுமே இருந்தார். அரசியல் சாசனம், வரி விவகாரங்கள் என அத்தனை சட்ட இலாகாவிலும் பணியாற்றத் தொடங்கினார்.

1977-ல் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியானார். ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் நிராகரிப்பையும் கடுமையான பாலியல் பாகுபாடுகளையும் எதிர்கொண்டார். “இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு என்றால், வாதாடும் வழக்கறிஞர்கள் என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சகோதர நீதிபதியை மட்டுமே பார்த்து ‘மை லார்ட்’ என வாதாடிவிட்டுச் செல்வர். என்னைப் பார்த்து ‘மை லேடி’ என அழைத்தவர்கள் வெகு சிலரே” என்கிறார் லீலா.

1991 ஆகஸ்ட் 5 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று, இந்தியாவின் முதல் பெண் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற பெருமையைத் தனக்கும் நாட்டுக்கும் சேர்த்தார்.

கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண் பிள்ளைகளுக்குச் சமமான உரிமை உண்டு என இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தார். தனது வாழ்க்கைப் போராட்டத்தை 2007-ல் ‘ஆன் பேலன்ஸ்’ எனும் பெயரில் சுயசரிதையாக வெளியிட்டார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர் அவர். இளம் வயதில் திருமணம் செய்துகொண்டாலும் கல்வி, பணி என்று தொடர்ந்து இயங்கியவர். 84 வயதாகும் லீலா சேத், மனித உரிமைச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

SCROLL FOR NEXT