வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1964 ஆகஸ்ட் 4: உயிர்த் தியாகத்தால் கிடைத்த ஓட்டுரிமை

சரித்திரன்

ஆண்ட்ரூ குட்மேன் எனும் 20 வயது வெள்ளையின இளைஞர் அமெரிக்காவின் மிசிசிப்பி நகரில் வந்திறங்கியவுடன் அஞ்சலட்டையில் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘அற்புதமான சிறு நகரம் இது. நீங்களும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவ்வூர் மக்கள் அருமையானவர்கள். எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது’. இந்தக் கடிதத்தை எழுதிய அதே நாளில் ஆண்ட்ரூ காணாமல்போனார்.

அவர் தொலைந்து இரண்டு நாட்கள் கழித்து அவருடைய கார் எரிந்துகிடந்தது. ஆறு வாரங்கள் கழித்து 1964 ஆகஸ்ட் 4-ல் ஃபிலடெல்பியா அருகில் உள்ள வனப் பகுதியில் ஆண்ட்ரூ குட்மேன், மைக்கேல் ஷவர்னர் மற்றும் ஜேம்ஸ் ஏர்ன் சனேவின் சடலங்கள் சகதியில் புதைந்துகிடந்தன. துப்பாக்கிக் குண்டுகள் மூவர் உடல்களையும் துளைத்திருந்தன.

நியூயார்க் நகர இளைஞர்களான ஆண்ட்ரூ குட்மேனும், மைக்கேல் ஷவர்னரும் ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின் குடி உரிமைக்காக அகிம்சை வழியில் போராடும் ‘காங்கிரஸ் ஆஃப் ரேஷியல் ஈக்வாலிட்டி’ அமைப்பின் உறுப்பினர்கள். கருப்பினத்தவரான ஜேம்ஸ் என்பவரோ 1963 முதலே மிசிசிப்பி அருகில் லாங்டேன் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ‘சுதந்திரப் பள்ளி’யை நிறுவி உள்ளூர் கறுப்பினச் சிறுவர்களுக்கு ஆப்பிரிக்க வரலாறு மற்றும் மனித உரிமை இயக்கங்களின் தத்துவத்தைக் கற்பித்தவர்.

21 ஜூன் அன்று ஆண்ட்ரூ குட்மேனும் மைக்கேலும் மிசிசிப்பிக்கு வந்து உள்ளூர்வாசியான ஜேம்ஸுடன் சேர்ந்து இயக்க வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். கறுப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தவர்களை கே.கே.கே. அமைப்பினர் கடத்தித் துன்புறுத்திக் கொன்றனர்.

‘மிசிசிப்பி பர்னிங்க்’ என அழைக்கப்படும் இச்சம்பவம், அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆண்ட்ரூ குட்மேன், மைக்கேல் ஷவர்னர் மற்றும் ஜேம்ஸ் ஏர்ன் சனேவின் உயிர்த் தியாகத்தை 1964 டிசம்பர் 4-ல் மார்ட்டின் லூதர் கிங் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன் விளைவாக ஆப்பிரிக்க - அமெரிக்கர்களுக்கான 1964-ல் குடியுரிமைச் சட்டமும் 1965-ல் ஓட்டுரிமைச் சட்டமும் அமலுக்குவந்தன. 41 ஆண்டுகள் கழித்து 2005-ல் கொலையின் சூத்திரதாரியான எட்கர் ரேகில்லன் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையின் நடுவே ஆண்ட்ரூவின் 89 வயது அண்ணன் எழுந்து நின்றார். உயிர் வாழும் இறுதி நாள் எனத் தெரியாமல் தன் தம்பி மகிழ்ச்சியோடும், பாசத்தோடும் பெற்றோருக்கு எழுதிய அந்தக் கடிதத்தை வாசித்தார். அத்துடன் எட்கருக்கு மரண தண்டனை கொடுத்து, அவருடைய வாழ்வுரிமையைப் பறிப்பது தவறு எனக் கண்ணீர் மல்கக் கூறினார் ஆண்ட்ரூ குட்மேனின் தாய்.

கறுப்பின மக்களின் எழுச்சிக்காகப் போராடி உயிர்நீத்த மூன்று இளைஞர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 4-ல்தான் இன்றைய அமெரிக்க அதிபரும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் அடையாளமுமாகத் திகழும் பராக் ஒபாமா பிறந்தார் என்பது தற்செயல் பொருத்தம் எனலாம்!

SCROLL FOR NEXT