“தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்” என எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்கு எழுதப்பட்ட அந்தப் பாடல் வரிகளைக் கேட்டு உற்சாகமடைந்த பாரதியார் “பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை” எனப் பாராட்டினார்.
உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என அறைகூவல் எழுப்பியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட கவிஞர் அவர். “தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!” என அவர் செதுக்கிய வரிகளை இன்றும் போர்க் குணம்மிக்க தமிழர்களின் உதடுகள் உச்சரிக்கின்றன. இவ்வாறு சுதந்திர வேட்கையைத் தூண்ட எளிய மொழி நடையில் தமிழ்ப் பாடல்களை இயற்றியவர்தான் நாமக்கல் கவிஞர் என அன்புடன் அழைக்கப்படும் வெ. ராமலிங்கம் பிள்ளை.
1888 அக்டோபர் 19-ல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் ஏழ்மையான குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாகப் பிறந்தார் ராமலிங்கம். இவர் தந்தை வெங்கடராமன் காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றியதால், ராமலிங்கத்தையும் எப்படியாவது காவல்துறை அதிகாரியாக்க முயன்றார். ஆனால், ஓவியம் வரைவதில், கவிதை புனைவதில் ஆர்வம்காட்டிய ராமலிங்கம் வீட்டை விட்டு வெளியேறினார்.
எங்கெங்கோ தேடி மகனைக் கண்டுபிடித்து நாமக்கல் தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலையில் அமர்த்தினார் ராமலிங்கத்தின் தந்தை. ஆனால், இம்முறை ராமலிங்கத்தின் தேடல் விடுதலைப் போராட்டம் பக்கம் திரும்பியது. ஆரம்பத்தில் திலகரின் தீவிரமான போராட்ட முறையால் ஈர்க்கப்பட்டவர், பின்னாளில் காந்தியடிகளின் அகிம்சைப் பாதையில் முழுவதுமாக ஈடுபடலானார். அனல் பறக்கும் மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். திருக்குறளுக்குப் புதிய உரை, ‘அவளும் அவனும்’, ‘காதல் திருமணம்’, ‘மரகதவல்லி’ போன்ற புதினங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்’ இவர் எழுதிய ‘மலைக்கள்ளன்’நாவலின் திரைவடிவமே. காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர், 1914-ல் திருச்சி மாவட்ட காங்கிரஸின் செயலாளரானார். 1921-30-வரை நாமக்கல் காங்கிரஸின் தலைவர் பொறுப்புவகித்தார்.
1937-ல் சேலம் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். இந்திய விடுதலை எனும் குறிக்கோள் நிறை வேற மட்டுமே அரசியல் பதவியை வகித்ததால் பதவியி லிருந்தபோதும் வறுமை அவரை வாட்டியது. அப்போது இவருடைய பாடல்களின் அருமை அறிந்த தேவகோட்டை சின்ன அண்ணாமலை, ராமலிங்கப் பிள்ளையின் கவிதை நூல்களைப் பிரசுரிக்கத் தொடங்கினார். அதன் பின்னரே, வறுமை ராமலிங்கத்தை விட்டு விலகியது.
சுதந்திரத்துக்குப் பிறகு 1949-ல் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் பதவி அளித்தும், 1962-ல் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக நியமித்தும் தமிழக அரசு அவரைக் கவுரவித்தது. 1971-ல் மத்திய அரசு அவருக்குப் பதமபூஷண் விருதளித்துப் போற்றியது. காலம் வென்ற எண்ணற்ற தமிழ்ப் பாடல்களைத் தந்த நாமக்கல் கவிஞர் 1972 ஆகஸ்ட் 24-ல் காலமானார்.