கரோனா பொதுமுடக்கத்தால் வருமானத்துக்கு வழியில்லாமல் பலரும் பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள். வெளியில் அதிக நடமாட்டம் இல்லாமல் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத காரியங்களில் ஈடுபடுவோரும் ‘பிழைப்புக்கு’ வழிதேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில், பொதுமுடக்கத்தை சாக்காக வைத்து சமூக விரோதிகள் தங்களது கைவரிசையைக் காட்ட முன்வரலாம். திடீர் சமூகவிரோதிகளும் அவதாரம் எடுக்கலாம் என காவல் துறையில் இருப்பவர்களே எச்சரிக்கிறார்கள்.
இது தொடர்பாக வலைதளத்தில் பரவி வரும் செய்தி ஒன்று மக்களை கூடுதல் விழிப்புடன் இருக்கச் சொல்கிறது.
''வேலை இழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பணப் புழக்கம் குறைவு காரணமாக பழைய குற்றவாளிகளும் திடீர் அவதாரம் எடுக்கும் புதிய குற்றவாளிகளும் தங்களது கைவரிசையைக் காட்டக்கூடும். அதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரமிது.
வெளியில் செல்லும்போது விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை அணிய வேண்டாம். முடிந்தவரை தங்க ஆபரணங்களைத் தவிர்த்துவிடலாம். கையில் வைத்திருக்கும் உங்கள் கைப்பையில் எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். உங்களது மொபைல் போனை பொது இடங்களில் அதிகம் பயன்படுத்த வேண்டாம். முகம் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுப்பதை தவிர்த்துவிடவும். தேவைக்கு அதிகமான பணத்தை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டாம்.
வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். வீட்டிலிருக்கும் வயதானவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க அடிக்கடி அவர்களை மொபைல் போனில் அழைத்துப் பேசவும். வீட்டில் அழைப்பு மணி ஒழிக்கும் போது, ஒருவர் கதவைத் திறக்கும்போது மற்றவர்கள் பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தால் கிரில் கேட்களை பூட்டிக் கொள்ளவும். முடிந்தவரை அதன் அருகில் செல்லாமலும் இருக்கவும்.
தனிப்பயிற்சிக்குச் செல்லும் குழந்தைகள் உங்கள் வீட்டில் இருந்தால் அவர்களைச் சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்தவும். வீட்டிலிருந்து செல்லும்போதோ வீடு திரும்பும்போதோ பிரதான சாலை வழியையே பயன்படுத்தும்படி அறிவுறுத்தவும். நீங்கள் வெளியில் இருக்கும்போது உங்கள் சுற்றுப்புறங்கள் மீது ஒரு கண் வைத்திருங்கள். எப்போதும் கையில் அவசர அழைப்புக்கான எண்களை வைத்திருங்கள். பிறரிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடியுங்கள்.
வாடகைக் கார் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். காலை நடைப்பயிற்சிக்கான நேரத்தை காலை 6 மணிக்கு மேல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். மாலையாக இருந்தால் இரவு 8 மணிக்குள் வீடு திரும்பிவிடுங்கள். நீங்களும் பிரதான சாலைகளையே பயன்படுத்துங்கள். வெற்று வீதிகளைத் தவிர்க்கவும்.
குறைந்தது 3 மாதங்கள் அல்லது நிலைமை மீண்டும் சகஜநிலைக்குத் திரும்பும்வரை இதையெல்லாம் மறக்காமல் கடைப்பிடியுங்கள். கரோனா தவிர்த்த பிற சங்கடங்களில் இருந்தும் உங்களை முடிந்தவரை காத்துக் கொள்ளலாம்''.
இப்படி சமூக அக்கறையுடன் எச்சரிக்கிறது அந்த சமூகவலைதளப் பதிவு. இதையெல்லாம் நாமும் முடிந்தவரை கடைப்பிடிக்கலாமே!