வலைஞர் பக்கம்

கரோனா காலத்திலும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் என்ன? 

எல்.ரேணுகா தேவி

உலக நாடுகள் பெரும்பாலும் ஊரடங்கைக் கடைப்பிடித்துவரும் நிலையிலும் தங்கத்தின் விலை உயர்வைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் தங்கத்தின் மீதான முதலீடு

இதனால் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை தடைப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு அமைப்பான (ஒசிஇடி) “எதிர்வரும் நாட்களில் உலகம் முழுவதும் உற்பத்தித் துறை இருபது சதவீதம் முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரையிலான சரிவைச் சந்திக்கும்” எனக் கூறியுள்ளனர். ஆனால் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் 24 காரட் சுத்தத் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தே காணப்படுகிறது.

இந்தக் கரோனா காலத்திலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் அதனைத் தொடர்ந்து தங்க நகைகளின் விற்பனை விலை உயர்ந்திருப்பது கவனிக்கவேண்டிய விஷயமாகும். இதற்கு முக்கியக்காரணம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தக் கரோனா காலத்தில் மற்ற துறைகளில் முதலீடு செய்வதைவிடத் தங்கத்தில் முதலீடு செய்து அதனால் எதிர்காலத்தில் அதிக லாபத்தை ஈட்டித்தர முடியும் என்பதால்தான்.

தங்கக் காசு விற்பனை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடி மிகுந்த காலங்களில் தங்கம் சிறந்த முதலீடாகும். எதிர்வரும் நாட்களில் பல பரிவர்த்தனைகளுக்குத் தங்கத்தின் கையிருப்பு பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கப்போகிறது. இதன் காரணமாகதான் சர்வதேச அளவில் இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் மீதான முதலீடு 5.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலக தங்க கவுன்சில் பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்திய ரிசர்வ் வங்கி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கத்தை வாங்கியுள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கியில் தங்கத்தின் இருப்பு மட்டும் 633.1 டன்னாக உயர்ந்துள்ளது. உலக அளவில் தங்கம் இருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. பலவீனமான பொருளாதார காலத்தில் உற்பத்தியைப் பெருக்கவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் தங்கத்தின் மீதான முதலீட்டுத் தேவை அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதுபோல் சாதாரண பொதுமக்கள் தங்களுடைய சிறுசேமிப்பைத் தங்க நகைகள், தங்கக் காசுகளில் முதலீடு செய்துள்ளனர். இந்தக் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24-ம் தேதி தமிழகத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,352க்கு, ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34,816க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஊரடங்கு காரணமாகத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. பிறகு ஏப்ரல் மாத முதல் வாரத்திலிருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியது. ஏப்ரல் 9-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,465க்கும், ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,720க்கும் விற்பனையானது. இதனைத்தொடர்ந்து வந்த அட்சய திருதியை நாளில் ஏப் 26-ம் தேதியன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.4,509க்கும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 36,072க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மே முதல் நாளில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து ரூ.4,341க்கும் ஒரு பவுன் ரூ.34,728க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி (மே- 8) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.67 உயர்ந்து ரூ.4,449க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.35,592க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுவது குறித்து மெட்ராஸ் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “இந்த ஊரடங்கு சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்தது என முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.

ஜெயந்திலால் சலானி

இந்தியாவில் சர்வதேச அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில்தான் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால்தான் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் தங்க நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நகைகளை வாங்குவதற்குப் பதிலாக பொதுமக்கள் இணையம் மூலமாகத் தங்கக் காசுகளை வாங்கி வருகிறார்கள். நகைகளை விடத் தங்கக் காசுகளை அன்றைய மதிப்பில் அதே விலைக்கு விற்க முடியும் என்பதால்தான் தற்போது மக்கள் தங்கக் காசுகளை அதிக அளவு வாங்கத் தொடங்கியுள்ளனர். இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புள்ளது” என்கிறார் அவர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் நாட்டில் பத்து கிராம் தங்கத்தின் விலை ரூபாய் ஐம்பதாயிரத்தை நெருங்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT