சமுத்திரம், நிலம் என்ற பேதமின்றி கானுயிர்களின் வாழ்க்கையையும் கடல்வாழ் உயிரிகளின் வாழ்க்கையையும் பிபிசி தொலைக்காட்சித் தொடர்களின் மூலமாக நெருங்கிப் பார்ப்பதற்குக் காரணமாக இருப்பவர் சர் டேவிட் அட்டன்பரோ. அவருக்கு இன்று 94 -வது பிறந்த நாள். அழுத்தமும் நேயமும் கொண்ட குரலால் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகமெங்கும் பார்வையாளர்களை ஈர்த்த தொலைக்காட்சி உயிரியலாளர் இவர். காந்தி திரைப்படம் மூலமாக நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர் இவர்.
கண்களை நிறைக்கும் நீலக்கடலுக்குள் இருக்கும் உலகங்களையும் உயிர்வாழ்க்கையையும் நமக்கு சினிமாவின் பிரமாண்டத்தில் காட்டுவதோடு டேவிட் அட்டன்பரோவின் வேலை முடியவில்லை. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெருமளவு சேதாரமாகாமல் இருந்த கடலின் இயற்கைச் சூழ்நிலையை, உயிர்களின் வாழ்வு, நவீனத்தின் பெயரால் நுகர்வின் பெயரால் கடந்த அறுபது ஆண்டுகளில் சீரழிந்த கதையையும் இவர் விவரிப்பதன் மூலம் இயற்கை பாதுகாவலராகவும் பரிணமித்தவர் டேவிட் அட்டன்பரோ.
வேட்டை தொடர்கிறது
சர் டேவிட் அட்டன்பரோவின் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான ‘தி ஹன்ட்’- ல் வேட்டையாடும் உயிருக்கும் வேட்டையாடப்படும் இரைக்கும் இடையிலான உறவை விவரிப்பது. எவ்வளவு தந்திரமாக இரை உயிர் தப்பித்தாலும் விடாமுயற்சியுடன், தலைமுறை தலைமுறையாகப் பெற்ற சிறப்புத் திறன்களுடன் எப்படி வேட்டையாடும் உயிர் தனது வேட்டையை நடத்தி முடிக்கிறது என்பதை மிகவும் சுவாரசியமாகச் சொன்ன நிகழ்ச்சி இது. வேட்டையாடும் விலங்குக்கும் வேட்டையாடப்படும் விலங்குக்கும் நடக்கும் சின்னச் சின்னப் பரிமாற்றங்கள் உட்பட காட்சிப்படுத்திய முன்னுதாரணமற்ற தொடர் இது.
‘தி ஹன்ட்’-ல் தான் வனப்பகுதிகளில் விலங்குகள் ஒன்றையொன்று வேட்டையாடும் காட்சிகள் முதல்முறையாகப் படம்பிடிக்கப்பட்டது. தூந்திரப் பிரதேசத்துக் கரடிகள் தாங்கள் இரையாகப் பிடித்த சீல்களை, பனி உருகிய குட்டைகளில் போட்டு வரும் நாட்களுக்குச் சேகரிக்கும் காட்சி சுவாரசியமானது.
‘ப்ளூ ப்ளேனட்’ தொடரில் தான் டேவிட் அட்டன்பரோ இரண்டு அவதாரங்களை எடுத்தார். விவரணையாளர், தொகுப்பாளர் என்ற பொறுப்புகளை ஏற்று, கடலுக்கடியில் உள்ள உயிர்களின் வாழ்க்கையை நெருங்கிச் சென்றார். வெப்ப மண்டலக் கடல் பகுதிகளிலிருந்து கடுங்குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிகள் வரை இந்தத் தொடருக்காக சாகசப் பயணத்தை மேற்கொண்டார். நவீன ஒளிப்பதிவுக் கருவிகள், தொழில்நுட்பங்களும் இணைந்த மகத்தான சினிமா அனுபவத்தை அட்டன்பரோ இந்தத் தொடரில் சாத்தியப்படுத்தினார்.
நெஞ்சில் ரோமம் உள்ள நண்டுகள், நீரைப் பீய்ச்சும் ஓங்கில்களின் ஆட்டம், நடனமாடும் யெட்டி நண்டுகள் புரியும் இந்திர ஜாலம், பாய்ந்து செல்லும் கடல் டிராகன், துள்ளி விழும் பெருங்கணவாய், அமைதிப்படையைப் போல உற்றுப் பார்க்கும் கருநிற மீன்களின் கண்கள் என ப்ளூ ப்ளானட் தான் சமுத்திரம் தனக்குள் பதுக்கியிருக்கும் விருந்துகளை நமக்கு சற்றுத் திறந்து காண்பித்தது.
இயற்கை உலகத்தின் மீதான தாக்கம்
திரைத் தொழில்நுட்பம், அறிவியல், சூழலியல் என மூன்று துறைகளில் தனது பங்களிப்பைச் செய்துள்ளார் டேவிட் அட்டன்பரோ. ‘அட்டன்பரோஸ் 60 இயர்ஸ் இன் தி வைல்ட்’ என்ற நிகழ்ச்சியில் டேவிட் அட்டன்பரோ, தனது வாழ்நாளில் பூமி என்னும் கிரகம் என்னவாக மாறியிருக்கிறது என்பதைப் பற்றி முதலில் பேசுகிறார். கானுயிர்களைப் படம்பிடிப்பது தொடர்பிலான தனது எண்ணங்களையும் இதில் பகிர்ந்துகொள்கிறார். நாம் பூமியைப் பார்க்கும் பார்வையை மாற்றிய முக்கியமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொள்கிறார். அத்துடன், கடந்த அறுபது ஆண்டுகளில் இயற்கை உலகத்தின் மீது மனிதகுலம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் தான் ஏன் இயற்கை பாதுகாவலர் ஆனேன் என்பது குறித்தும் பேசுகிறார்.
பருவநிலை மாறுதல்கள் உலகத்துக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சூழலில் அதற்கான தீர்வுகளை ‘க்ளைமேட் சேஞ்ச் : தி பேக்ட்ஸ்’ தொடரில் விரிவாக அலசுகிறார். உலகத்தின் பல பகுதிகளிலும் இதுவரை இல்லாத அதீத பருவநிலைகள், இயற்கைப் பேரிடர்கள், காட்டுத்தீ போன்றவற்றுக்கான காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன. பருவநிலை மாறுதல்களால் மனித குலத்துக்கும், இயற்கைச் சூழலுக்கும் அதைச் சார்ந்திருக்கும் உயிர்களுக்கும் என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன என்பது இத்தொடரில் பேசப்படுகிறது. அட்டன்பரோவின் கம்பீரமான குரல், நாம் உடனடியாக இறங்கிச் செயலாற்ற வேண்டிய அவசரத்தை உணர்த்துவதாக உள்ளது.
62 நாடுகள், 204 இடங்கள், 71 ஒளிப்பதிவாளர்கள், 2000 நாட்கள் தயாரிப்பில் உருவான ‘பிளானட் எர்த்’, நமது பூமிக் கிரகம் பற்றிய முழுமையான திரைச்சித்திரமாகும்.
கருப்பு வெள்ளை, வண்ணம், எச்டி, த்ரீடி, போர் கே என எல்லா வடிவங்களிலும் பாஃப்டா விருதுகளை அள்ளிக்கொண்டேயிருக்கும் அரிதான திரை ஆளுமை சர் டேவிட் அட்டன்பரோ.
இயற்கை உலகம் சார்ந்த புரிதலும், அங்கு என்னவெல்லாம் நடக்கிறது என்ற அறிதலும் நமது ஆர்வத்துக்குத் தீனி போடுவதோடு மிகப் பெரிய உளநிறைவையும் அளிப்பது என்கிறார் டேவிட் அட்டன்பரோ. இவரை இங்கிலாந்து நாடு தனது தேசியச் சொத்தாகக் கருதுவதில் ஆச்சரியமொன்றும் இல்லை.