வலைஞர் பக்கம்

இருமல், ஜலதோஷம், காய்ச்சல் வராமல் தடுக்கலாம்: நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்ட தேனை பரிந்துரைக்கும் வேளாண் அறிவியல் நிலையம் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கரோனாவை வெல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தேனையும், அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் சாப்பிட்டு பயன்பெறலாம் என்று மதுரை வேளாண் அறிவியல் நிலையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், உதவிப்பேராசிரியர்கள் உஷா ராணி, ஆரோக்கிய மேரி ஆகியோர் கூறியதாவது:

200 கிராம் தேனின் ஊட்டச்சத்தானது 1.5 லிட்டர் பால் அல்லது 1 கிலோ பாலாடை அல்லது 330 கிராம் மாமிசத்திற்கு சமமாக மதிப்பிடப்படுகிறது.

தேனில் நுண்கிருமிகள் வளர இயலாது. தேனில் 20 சதவீதம் நீர், 5 சதவீதம் கரும்புச் சர்க்கரை, 37 சதவீதம் பழசர்க்கரை, 34 சதவீதம் திராட்சை சர்க்கரை, 0.2 சதவீதம் தாதுஉப்புகள், 0.2 சதவீதம் அங்கக அமிலங்கள், புரதம்மற்றும் 1.6 சதவீதம் அமிமோன அமிலங்கள் உள்ளன. 2.0 சதவீதம் பிற பொருட்கள் உள்ளன.

தேன் சிறந்த பாக்ட்ரீயா கொல்லி. ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் உற்பத்திக்கு உதவும். ரத்தசுத்திகரிப்பியாக இருப்பதால் இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை வராமல் தடை செய்யும் உணவுப்பொருளாக உள்ளது.

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள்,விளையாட்டு வீரர்கள், நோயுற்றவர்கள் போன்றவர்களுக்கு இது ஏற்ற உணவாகும். தேன் உடனடியாக சத்து தரக்கூடிய உன்னத உணவாகும். துரித உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. நச்சுப்பொருட்களை கல்லீரல் மூலம் வெளியேற்றவும், கிளைக்கோஜன் மூலம் உருவாகுவதற்கும் பெரிதும் உதவுகிறது.

குடல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. இரைப்பை புண், குடல் புண், நாக்குப்புண் குணப்படுத்துகிறது.ஆயுர்வேத மருத்துவங்களில் பல்வகை லேகியங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது. தேனின் நிறம், மனம், கெட்டி தன்மை, ருசி மற்றும் அதில் அடங்கியுள்ள பல்வேறு பொருட்களின் அளவு மதுரத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். சூரியகாந்திதேன் மஞ்சள் நிறத்தில் தங்க நிறத்தில் இருக்கும். ரப்பர் தேன் அதிகம் கெட்டியாக இருக்காது. வேப்பம் பூ தேன் சிறது கசப்பு சுவையுடன் இருக்கும்.

தேன் சுத்தமான தேனாகவும், தேன் பிஸ்கட், தேனுடன் முந்திரி, பேரீட்சை சேர்க்கப்பட்ட தேன் பாதம், முந்திரி, உலர் திராட்சை சேர்க்கப்பட்ட தேன், நெல்லித்தேன், தேன் எலுமிச்சைப் பழரசம், தேனுடன் பழங்கள் மற்றும் வனிகர் சேர்த்த பழரசம், தேன் ஆரஞ்சு பழரசம் மற்றும் தேன் ஐஸ்கீரிம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் கடைகளில் கிடைக்கிறது.

கரோனா பரவும் இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனையும், தேன் பொருட்களையும் சாப்பிட்டு பயன்பெறலாம், ’’ என்றனர்.

SCROLL FOR NEXT