வலைஞர் பக்கம்

பெண் காவலர்களுக்காக ஒரு பாடல்!

வா.ரவிக்குமார்

மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு அடுத்தபடியாக காவலர்கள் கரோனா வைரஸ் தொற்று தாக்கும் அபாயம் அதிகம் இருப்பவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அண்மையில் பெண் காவலர்கள் சிலரும் காவலர் பயிற்சிக்கு வந்த பெண் காவலர்களும் கூட கரோனா பாதிப்புக்கு உள்ளாகினர்.

சமூகத்தில் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பெண் காவலர்களின் தியாகத்தையும் போராட்ட குணத்தையும் அவர்களின் தன்னலமற்ற சேவையையும் முன்னிறுத்தி ஒரு கரோனா விழிப்புணர்வுப் பாடல் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

காவல் ஆணையர் டாக்டர் ஏ.கே.விஸ்வநாதனின் ஆலோசனையோடும் காவல் துணை ஆணையர் ஹெச்.ஜெயலட்சுமியின் ஆலோசனையோடும் இந்தக் காணொலிப் பாடலை ஜோட் ஈவென்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

தாயாகவும் தோழியாகவும் கடமை புரியும் பெண் காவலர்களின் மதிப்பையும் சமூகத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் கரிசனமும் இன்ஸமாம் உல் ஹக்கின் பாடல் வரிகளில் அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. திரை இசையமைப்பாளர் சி. சத்யாவின் மிதமான இசையில் கேட்பவர்களின் காதின் வழியாக நுழையும் பாடல், இதயத்தில் பெண் காவலர்களின் மீதான மதிப்பையும் பாசத்தையும் அபரிமிதமாகக் கூட்டுகிறது.

“ஓயாமல் ஓய்வில்லாமல் காவல் காத்திட வந்தாளே” பாடலைக் காண:

SCROLL FOR NEXT