வலைஞர் பக்கம்

9,000 நாய்களுக்கு 1,000 கிலோ அரிசியில் உணவு;  துவணி அறக்கட்டளையினரின் கருணை உணர்வு

வி. ராம்ஜி

கரோனாவின் கோரமுகத்தில், நமக்குத் தெரிந்துகொண்டிருக்கின்றன மனிதர்களின் கருணை முகங்கள். சாலையோரமே வீடு என்றிருப்பவர்களுக்கு தேடியோடி உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் பல இடங்களில். ஊருக்குக் காவலனாக இருந்து, நன்றியுணர்வுடன் சேவை செய்துகொண்டிருக்கும் வாயில்லா ஜீவன்களான நாய்கள், உணவின்றித் தவித்து வருகின்றன.


நாய்களின் வயிறை கருத்தில் கொண்டு, கண்ணும்கருத்துமாகச் செயல்படத் தொடங்கியது துவணி அறக்கட்டளை. விஐடி துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் மற்றும் வழக்கறிஞரும் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுப்பதற்கான அமைப்பின் ( SPCA- வேலூர் மாவட்டம் ) துணைத் தலைவருமான அனுஷா செல்வம் ஆகியோரைக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் ‘துவணி அறக்கட்டளை’.


கரோனாவால், ஊரடங்கு வீடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கும் குரங்குகளுக்கும் உணவில்லை. பசித்த வயிறும் வெறித்த பார்வையுமாகச் சுருண்டுகிடக்கின்றன.


இவற்றை கவனத்தில் கொண்ட துவணி அறக்கட்டளை அன்பர்கள், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் குரங்குகளுக்கு தினமும் உணவு வழங்கிவருகின்றனர்.


மக்கள் நடமாடினால்தான் கடைகள் திறந்திருந்தால்தான் இந்த நாய்களுக்கு உணவென ஏதேனும் கிடைக்கும். மனித நடமாட்டமும் இல்லை. டீ ஸ்டால் உள்ளிட்ட கடைகளும் திறக்கவில்லை. இந்தநிலையில், துவணி அறக்கட்டளையினர் தேடித்தேடிச் சென்று நாய்களுக்கும் குரங்குகளுக்கும் உணவளித்து வருவதைப் பார்த்து நெகிழ்ந்து பாராட்டுகின்றனர் மக்கள்.


நாய்கள் மற்றும் குரங்குகளுக்குக்கான உணவுகள், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனரும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு பொறுப்பாளருமான ஜே. நவநீதகிருஷ்ணன் மூலமாக கொடுக்கப்படுகின்றன.

புதிய உலகு விலங்கு மீட்பு அமைப்பின் தலைவர் சுகுமார், செயலாளர் ரமேஷ் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள், விலங்குகள் நலவாரிய உறுப்பினர் புனிதா
மூலமாக பிராணிகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.


ஆம்பூர், வாணியம்பாடி, பேராணம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, கல்புதூர், காட்பாடி, தாராபடவேடு, வேலூர், வேலூர் ரயில் நிலையம் கண்டோன்மண்ட , சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பிராணிகளுக்கு துவணி அறக்கட்டளை சார்பில் 1000 கிலோ அரிசி உணவாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சுமார் 9000 பிராணிகள் உணவு கிடைக்கும். இவை தவிர, 300 பிரட் பாக்கெட்டுகள், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன.



’’துவணி அறக்கட்டளையின் சார்பாக இரண்டு முக்கியமான திட்டங்களை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம். ’சிறகுகள்’ அமைப்பு மூலமாக அரசாங்கப் பள்ளிகளுக்கு உதவுவது என்பது முதலாவது. அதிலும் குறிப்பாக கிராமப்புற பெண்கள் படிக்கும் பள்ளிகளுக்கு உதவுவது என்பதுதான் எங்கள் முதல் இலக்கு. இரண்டாவதாக ’செல்லக்குட்டி’ அமைப்பு மூலமாக கால்நடைகள் மற்றும் சாலையோர நாய்களுக்கு மற்றும் பிற பிராணிகளுக்கு உதவுவது என்பது இன்னொன்று!’’ என்கிறார்கள் அறக்கட்டளை அன்பர்கள்.


துவணி அறக்கட்டளையினரின் செயலால், வயிறு நிறைந்து நாய்கள் நன்றியுடன் வாலாட்டி தங்களின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. இந்த மாவட்டத்து மக்களோ, பிராணிகளுக்கு உதவும் அன்பர்களைக் கண்டு நெகிழ்ந்து நெக்குருகி வாழ்த்துகின்றனர்.

SCROLL FOR NEXT