கரோனா வைரஸை விடவும் மிகவும் மோசமான வைரஸ் இந்த ‘வைரல்’ என்று காட்டப்படும் போலி, பொய்ச்செய்திகள். சீனாவுக்கு கரோனாவைக் கொண்டு வந்ததாகப் பழியைச் சுமந்து வரும் அமெரிக்க ராணுவ வீராங்கனை மாட்யே பெனாசியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது சதிக்கோட்பாட்டாளர்களின் பொலிச் செய்திகள்.
கரோனாவைரஸை விடவும் கொடிய சமூகத்தீமையான வெறுப்புணர்வைத் தூண்டும் போலிச் செய்தி வைரலாக்கப்படுவதன் பலிகடவாகியுள்ளார் அமெரிக்க ராணுவ வீராங்கனை மாட்யே பெனாஸி.
இவரைப்பற்றி தவறான, போலி, பொய்ச்செய்திகள் யூடியூபில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஊடகமும் சீனாவில் ஆரத்தழுவி ஊக்குவிக்கிறது. இவருக்கு கரோனா பாசிட்டிவும் இல்லை. அதற்கான நோய் அறிகுறிகளும் இவருக்கு இல்லை எனும்போதும் இவரும் இவரது கணவரும் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். சீன சமூக ஊடகங்களில் இந்தத் தம்பதிதான் இப்போது விவாதப்பொருளாகியுள்ளனர்.
இதனால் இவர்களது வாழ்க்கையே தடம் புரண்டது. இவர்களது முகவரியும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது, இதனையடுத்து இவர்கள் தங்கள் சமூகவலைத்தள கணக்குகளை மூடுவதற்கு முன்பாகவே உள்பெட்டியில் வெறுப்பு செய்திகள் குவியத் தொடங்கியுள்ளன.
இது கெட்ட கனவிலிருந்து விழித்து துர்சொப்பனத்திற்குள் செல்வது போல் உள்ளது என்கிறார் மாட்யே பெனாஸி. ஆன்லைனில் இவர் மீது டன் கணக்கில் சேற்றை வாரி இரைத்த பிறகு முதலில் இவர் சிஎன்என் பிசினஸ் ஊடகத்துக்குத்தான் முதல் பேட்டியை அளித்தார். ஆன்லைன் பொய்கள் ஆஃப் லைன் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்குதல்களைத் தொடுக்கிறது எனும்போதும் சமூக ஊடகங்கள் வருமானத்திற்காக இவற்றை தடுக்காமல் பொறுப்பற்று செயல்பட்டு வருகின்றன.
மாட்யே பெனாஸி அமெரிக்க ராணுவத்தில் சிவிலியன் ஊழியர், இவர் வர்ஜினியா மையத்தில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இவரது கணவர் பெண்டகனிலிருந்து ஓய்வு பெற்ற ஏர்ஃபோர்ஸ் அதிகாரி. இவ்வளவு பெரிய இடத்தில் பணியாற்றினாலும் இவர்களுக்கு உதவ ஆளில்லை.
தன்னை கண்டபடி சமூக ஊடகங்களில் ஏசுகின்றனர், வசைபாடுகின்றனர், கரோனாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, எங்கிருந்து இது பரப்பப்பட்டது எதற்காக என்பதெல்லாம் தனக்குத் தெரியவில்லை என்கிறார் பெனாஸி. இது தொடர்பாக வழக்கறிஞர்களின் உதவியையும் நாடினார், போலீஸாரையும் நாடியுள்ளார், ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற பதிலே இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
கரோனாவின் ஆரம்பக் காலக்கட்டங்களில் எந்த வித ஆதாரமும் இல்லாமல் சதிக்கோட்பாட்டாளர்கள் கரோனா வைரஸ் அமெரியாவின் உயிரியல் போர் ஆயுதம் என்று எழுதத் தொடங்க்கினர், இதனை சீன அரசின் அதிகாரி ஒருவர் ஊக்குவிக்கத் தொடங்கினார். சீனாவே அமெரிக்க ராணுவத்தினர் மூலம்தான் கரோனா பரவியது என்று தெரிவித்ததையும் பார்த்தோம் அதற்குப் பதிலடியாகத்தான் ட்ரம்ப், வூஹான் வைரஸ், சீனா வைரஸ் என்று பேசத்தொடங்கினார்.
அடிப்படையற்ற இந்தக் குற்றச்சாட்டுக்கு பெனாஸி ஆளானது எப்படி?
கடந்த ஆண்டு அக்டோபரில் வூஹானில் நடந்த ராணுவ உலக விளையாட்டுப் போட்டிகளில் பெனாஸி கலந்து கொண்டார். மிலிட்டரி ஒலிம்பிக் போட்டிகளாகும் இது. இதில் சைக்கிளிங் போட்டியில் பெனாஸி கலந்து கொண்டார், ஆனால் கடைசி சுற்றில் வரும்போது விபத்து ஏற்பட்டு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும் பந்தயத்தை முடித்துவிட்டுத்தான் வந்தார். இதுதான் அவர் வாழ்க்கையில் மோசமானதன் துவக்கமானது. அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான தடகள வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆனால் மாட்யே பெனாஸி பெயர் மற்றும் அதிலிருந்து உருவப்பட்டு கரோனா சதிக்கோட்பாட்டாளர்களால் ஊதிப்பெருக்கப்பட்டது.
ஆனால் உலகையே இவர் கரோனாவினால் தொற்ற வைக்கப் போகிறார் என்ற படுமோசமான பொய்யைத் திரிக்கக் கிளம்பியதில் முக்கியமானவர் ஜார்ஜ் வெப் என்ற 59 வயது அமெரிக்க போலிச் செய்திகளின் மையம் அல்லது முன்னோடி. இவரது போலிச் செய்திகளுக்கு சுமார் 2 கோடியே 70 லட்சம் வாசகர்கள் உள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் இவரைப் பின் தொடர்கின்றனர்.
2017-ல் தெற்குக் கரோலினாவை உலுக்கிய ஒரு போலிச்செய்தி என்னவெனில் சார்ல்ஸ்டன் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று மோசமான வெடிகுண்டுகளுடன் வருகிறது என்பதுதான். இது போலி என்று தெரிந்தது, ஆனால் அமெரிக்காவின் மிகப்பெரிய துறைமுகம் இவரது போலிச்செய்திக்கு அடிபணிந்து பாதுகாப்புக்காக மூடப்பட்டது. வெப்பும் சம்பாதிக்கிறார், யூடியூப் நிறுவனமான கூகுளும் இந்தப் போலிச்செய்திகள் மூலம் பணம் ஈட்டி வருகின்றன.
கரோனா கதையில், இத்தாலியின் பிரபல பாடகர் டி.ஜே.பென்னி பெனாசியின் ’சேட்டிஸ்பேக்ஷன்’ என்ற பாடல் 2002-ல் உலகப்புகழ் பெற்றது, இவரையும் மாட்யே பெனாஸியையும் கணவர் மாட் என்பவரையும் மிக அழகாகக் கோர்த்து விட்டார் வெப். ஆனால் பாடகர் பென்னி பெனாஸி, இவர்கள் இருவரையும் சந்தித்ததே இல்லை என்பதுதான் உண்மை. இத்தாலியில் பெனாஸி என்ற கடைசி பெயர் மிகவும் சகஜமானது, தாங்கள் மூவரும் உறவினரும் அல்ல என்று மறுத்துள்ளார் பென்னி பெனாஸி. ஆனால் பென்னி பெனாசியும் கரோனா பாசிட்டிவ் ஆகாதவர்.
தான் ஒரு ‘புலன் விசாரணை நிருபர்’ மட்டுமே சதிக்கோட்பாட்டாளர் அல்ல என்று சிஎன்என் தொலைக்காட்சியில் இவர் சமீபத்தில் மறுத்தார். இவரது யூடியூப் சேனலில் விளம்பரங்களும் நிறுத்தப்பட்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது. மேலும் வெப் போஸ்ட் செய்த வீடியோக்களும் அகற்றப்பட்டதாக யூடியூப் கூறியுள்ளது.
சுதந்திரப் பேச்சுரிமைக்கு கொடுக்கும் விலையாக அமெரிக்கா வெப் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது. யூடியூப் இந்த வீடியோக்களை அகற்றுவதற்கு முன்பாகவே அது வைரலாகி என்ன சேதம் ஏற்படுத்த முடியுமோ அதை ஏற்படுத்தி விட்டதாக பெனாஸி தம்பதியினர் கூறுகின்றனர், தற்போது தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கல் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெனாசிஸை தாக்கி வெளியான வீடியோக்கள் சீன மொழியில் ஆக்கம் செய்யப்பட்டு அங்கு வெய்போ, வீசாட், சிகுவா வீடியோ ஆகியவற்றில் ஒளிபரப்பப் பட்டு வலம் வந்தது.
“அடுத்து என்ன நடந்தாலும் சரி, என்ன சேதம் செய்ய வேண்டுமோ செய்தாகிவிட்டது. இனி வாழ்க்கை எங்களுக்கு சகஜமானது இல்லை. ஒவ்வொரு முறையும் என் பெயரை கூகுள் செய்தீர்கள் என்றால் பேஷண்ட் ஜீரோ என்பது பாப் அப் ஆகும்” என்கிறார் அவர்..
கட்டுப்பாடற்ற சுதந்திரம் அமெரிக்காவில் சட்டமாகவே இருப்பதால் வெப் முதலான அயோக்கியர்கள் முதல் அவரை ஊக்குவிக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் வரை எதையும் ஒன்றும் செய்ய முடியாமல் தப்பி வருகின்றனர். போலி செய்தி கரோனாவை விடவும் மோசமான வைரஸ். ஒரு தனிநபர் அல்லது ஒரு மதம் சார்ந்தவர்கள் மீது பரப்பப்படும் போலி செய்திகளின் விளைவுகளை அவர்கள் அனுபவிக்கும் விதம் அதனை உருவாக்குபவர்கள் அறியாததாகும். எனவே போலிச்செய்திகளை ஒழிப்போம்.