தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஹீரோக்கள் வருவார்கள். ரசிகர்களைக் கவரும் வகையிலான வில்லன்கள் வருவார்கள். காமெடியன்கள் வருவார்கள். ஹீரோயின்களும் கிடைப்பார்கள். நல்ல நடிகர்கள் கிடைப்பதுதான் மிக மிக அரிது. அப்படியொரு அரிதாகக் கிடைத்த நடிகர்தான் நாசர்.
எல்லோரைப் போலவும் நடிப்பதற்குத்தான் வந்தார் நாசர். செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு வந்து, கோடம்பாக்கத்தின் ஸ்டுடியோக்களுக்கும் தயாரிப்பு கம்பெனிகளுக்கும் இயக்குநர்கள் அலுவலகத்துக்கும் நடையாய் நடந்தார். அந்த அலுவலகக் கதவு திறந்தது. திறந்தது கட்டிடக் கதவு மட்டுமா? நாசரின் திரை வாழ்வின் நீண்ட பயணத்துக்கான பாதையும்தான்!
அந்தப் பாதையைத் திறந்தவர்... பாதையில் பயணிக்கச் செய்வதவர்... பாதையையே உருவாக்கித் தந்தவர்... இயக்குநர் கே.பாலசந்தர். நாசரை அவர் அறிமுகப்படுத்திய அந்தப் படம்... ‘கல்யாண அகதிகள்’.
மிகச்சிறிய அந்தக் கதாபாத்திரத்திலேயே கவனம் ஈர்த்தார் நாசர். பிறகு கவிதாலயாவின் ‘உன்னால் முடியும் தம்பி’, ‘வேலைக்காரன்’ என பல படங்களில் நடித்தார். கமலின் ‘சத்யா’வில் இரண்டாவது மூன்றாவது வில்லனாக நடித்துப் பெயர் வாங்கினார். மணிரத்னம் இயக்கத்தில் கமலின் நடிப்பில் வெளியாகி, தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட ‘நாயகன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அசத்தினார்.
இதன் பிறகு, கொடூர வில்லனாகவோ கோபக்கார போலீஸாகவோ எந்தக் கேரக்டர் கிடைத்தாலும் அதில் பேர் தட்டிச் செல்வதில் வல்லவர் நாசர். ஒவ்வொரு வீட்டிலும் மளிகை லிஸ்ட் எழுதும்போது, முதலில் மஞ்சள் என்று எழுதுவதுபோல், தயாரிப்பு நிறுவனமும் இயக்குநரும் ஹீரோவும் முதலில் எழுதுவது நாசரின் பெயராக இருந்தது. குருநாதர் பாலசந்தர் அறிமுகப்படுத்திய நாசரை, கமலும் இனம் கண்டுகொண்டார். தொடர்ந்து தன் படங்களில் அவரை பயன்படுத்திக் கொண்டார்.
‘தேவர் மகன்’, ‘குருதிப்புனல்’, ‘அவ்வை சண்முகி’ என ஒவ்வொரு கேரக்டரும் வேற லெவலாக இருந்தது. இந்தப் படங்களிலெல்லாம் நாசர் தன் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி, தான் நடிப்பில் அசுரன் என நிரூபித்தார். முக்கியமாக, ‘மகளிர் மட்டும்’ படத்தில் காமெடி ஹீரோவாகவும் பட்டையைக் கிளப்பினார்.
இதனிடையே நாசர் இன்னொரு அவதாரமும் எடுத்தார். ‘அவதாரம்’ படத்தின் மூலம் நாயகனாகவும் இயக்குநராகவும் அவர் ஆடிய ஆட்டம், தெறித்தனமாக இருந்தது. முதல் இயக்கத்திலேயே தான் ஒரு நடிகர் மட்டுமில்லை... அதற்கும் மேலே என்பதை ரசிகர்களுக்கு நிரூபித்தார். தொடர்ந்து, ‘தேவதை’, ‘முகம்’ மாதிரியான படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் வந்த படங்கள் யாவுமே, தனித்துவம் மிக்க படங்களாக அமைந்தன என்பதுதான் நாசர் எனும் படைப்பாளியை, அவரின் திரை தாகத்தை இன்றைக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை செம்மையாய் செய்து வருவதில் வல்லவர். நடிகர் சங்கத் தலைவர் முதலான பதவிகளில் செயல்பாடுகள், பல மொழிகளிலும் நடிப்பு எனத் தொடர்ந்து இயங்கி வரும் நாசர்... பிறவிக்கலைஞர். அற்புத நடிகர். மகா படைப்பாளி.
இயக்குநர் கே.பாலசந்தரின் ‘கல்யாண அகதிகள்’ மூலம் திரையுலகிற்கு வந்தார் நாசர். 1985-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி வெளியானது இந்தப் படம். படம் வெளியாகி 35 வருடங்களாகிவிட்டன. அதாவது நாசர் திரையுலகிற்கு வந்து 35 ஆண்டுகளாகிவிட்டன.
வாழ்த்துகள் நாசர் சார்!