கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள நாடு முழுவதும் ஊரடங்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு முடிவதற்கு முன்னதாகவே பெரும்பாலானோர் இந்த நீட்டிப்பை எதிர்பார்த்திருந்தாலும் கூட அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லாமலேயே உள்ளனர். அத்தகைய நிலையில் உள்ளோருக்கான உளவியல் ஆலோசனையே இது.
சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரன் 'இந்து தமிழ்' இணையதளத்துக்கு அளித்த பேட்டி:
1. இதுவரை உலகு காணாத வீரியம் கொண்ட தொற்று. அதனால் இரண்டாவது ஊரடங்கு. இது பொதுவாக என்ன மாதிரியான மனநிலையை உண்டாக்கும்?
இரண்டாம் ஊரடங்கு முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல என்பதால் பெரிதளவில் அதிர்ச்சி இருக்காது. ஆனாலும் இவ்வளவு நாட்கள் போனதே பெரும் சிரமமாய் உணர்ந்தவர்களுக்கு, ஒரு சலிப்பும் வெறுப்பும் மனத்தில் தோன்றும். மற்றபடி வழக்கமாய் இவ்வகைச் சூழலில் வரும் பதற்றம், பயம், பொருளாதாரம் குறித்த குழப்பம், சோர்வு ஆகியவையே மனத்துள் மிகும்.
2. குழந்தைகள்...இதுவரை 21 நாட்கள் தங்களுக்குள் இருந்த திறமைகளை எல்லாம் வெளிக் கொண்டுவந்து மகிழ்ந்து மகிழ்வித்தார்கள். இனியும் அவர்களை எப்படிச் சமாளிப்பது?
குழந்தைகளிடம் நிறைய பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம். குடும்பத்தில் அனைவருக்கும் ( இல்லத்தை நிர்வகிக்கும் பெண்கள் உட்பட) சற்று கூடுதல் நேரம் கிடைக்கும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாம். இது பாடம் எடுப்பது போல் அல்லாமல் வேறு வேலைகளில் அவர்களையும் நம்மோடு ஈடுபடுத்தி அந்நேர உரையாடலாக ஆக்கலாம். குழந்தைகளைச் சமையலுக்கு உதவ, வீட்டைச் சுத்தம் செய்ய நம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வகை வேலைகளை அதிகாரத்தோடு செய்யச் சொல்லாமல், நமக்கு உதவ அழைப்பது போல் ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர்களுக்குப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம். புதிதாய் இணையம் மூலம் மொழி, கைவேலைத் திறன் ஆகியவற்றைக் கற்க ஊக்குவிக்கலாம்.
3. இங்கு நிறைய பெண்களுக்கு அலுவலகம்தான் குடும்ப வன்முறையில் இருந்து விடுபடுவதற்கான வழியாக இருந்தது. எப்படியோ 15 நாட்களை வீட்டில் கடந்துவிட்டவர்கள் இனியும் தாக்குப்பிடிக்க என்ன செய்யலாம்? அவர்களுக்குத் தங்களுடைய ஆலோசனை என்ன?
நிறைய பேச வேண்டும் எனும்போது உரையாடல்கள் விதண்டாவாதமாகும் போது, ஒரு சண்டையின் ஆரம்பமாகும் போது பேச்சை மாற்றுவதோ நிறுத்திக் கொள்வதோ உதவும். குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு ஒரு சண்டையின் ஆரம்ப அறிகுறிகள் நன்றாகத் தெரியும். அப்போது வேறு ஏதாவது பேச்சை மாற்றி, எதிரில் இருப்பவருக்குப் பிடித்ததைச் செய்வது உதவும். இது பெண் அடிபணிந்து போவதாய் ஆகாது. அடிபடாமல் தப்பிப்பது என்பதாகும்.
4. ஊரடங்கு என்றவுடனேயே வீட்டில் இருக்கும் கணவருக்கும், குழந்தைகளுக்கும் விதவிதமாக சமைத்துப் போட ஆரம்பித்த பெண்கள் சமையலறையில் இருந்து விடுதலை கிடைக்காதா என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். அவர்கள் என்ன செய்யலாம்?
சமையலில் குடும்பத்தினர் அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டும். இது ஒரு நிர்பந்தம் போல் ஆக்காமல், ஒரு விளையாட்டான கூட்டு முயற்சியாக ஆக்க வேண்டும்.
5. நான் வேலை தேடி வருகிறேன் வேலை தேடக்கூட முடியாத நிலையில் வீட்டில் பெற்றோருக்கு பண உதவி செய்ய முடியாத நிலையில் மிகுந்த விரக்தியில் இருக்கிறேன்.. நான் என்ன செய்யலாம் என்று தவிக்கும் இளைஞர்களுக்கு தங்களின் ஆலோசனை?
இந்த நேரத்தில் எந்த வறட்டு ஆலோசனையும் உதவாது. காலம் கனியும் வரை காத்திருங்கள் என்பதைத் தவிர எதுவும் சொல்ல முடியாது. இந்நேரம் உங்கள் தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்ளுங்கள், இலவசமாய்க் கிடைக்கும் தளங்கள் மூலம் உங்கள் திறன்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள் – உதாரணமாய் மொழித்திறன்.
6. ஊரடங்கின்போது என் மகன் வீட்டில் இருந்தேன். 15 நாள் இங்கு அடுத்த 15 நாட்கள் மகள் ஊரில் என்றுதான் வாழ்க்கை நகர்ந்தது. இப்போது ஒரே இடத்தில் கூடுதல் சுமையாகிவிட்டேனோ என்று வருந்தும் முதியவர்களை எப்படித் தேற்றுவது?
இவர்களைத் தேற்றுவது கடினம். வாழ்க்கையில் அவர்களுக்குப் புதிய நம்பிக்கைகளை நாம் உருவாக்க முடியாது. அவர்களது இருப்பு நமக்கு ஓர் இறுக்கமானதாக இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் சற்றே நிம்மதியாய் இருக்க விடுவது மட்டுமே நாம் செய்ய முடியும். அவர்களது வயதுக்கேற்ப, இயல்புகேற்ப வெளிப்படுத்தும் எரிச்சலான சொற்களையும் செயல்களையும் உதாசீனப்படுத்துவதே நாம் செய்யக் கூடிய காரியம்.
7. என் சாணைக்கல் இயந்திரத்தை தெருவில் இறக்கினால்தான் சோறு நிச்சயம், இன்னும் 21 நாட்களைக் கடந்து பிழைப்பேனா என ஏங்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கு என்ன ஆறுதல் வார்த்தை சொல்லலாம்?
தினசரி உழைப்பே வாழ்க்கை என்றிருக்கும் இவர்களுக்கு வெறும் வார்த்தைகள் உதவாது. இலவசமாய் நாம் எதுவும் தருவதும் சில நேரம் அவர்களது தன்மானத்துக்கு ஒவ்வாது, ஆகவே முடிந்தால் சாதாரண வேலை ஒன்றை அவர்களைச் செய்யச் சொல்லி, அதற்கு சற்று அதிகமாகவே ஊதியம் போல் தரலாம். இவர்களுக்கு அரசுதான் எதுவும் செய்ய முடியும்.
8. குடும்ப உறவுகளுக்குள் கணவன் - மனைவி, மாமியார் - மருமகள், அண்ணன் - தம்பி, சகோதரன் - சகோதரி இடையேயான புகைச்சல்கள் பூதாகரமாகும் நிலையில் எப்படி சிக்கல்களைச் சமாளிக்கலாம்?
இது தவிர்க்க முடியாத ஒன்று. முன் இப்படி நிகழும்போது கோபித்துக் கொண்டு அல்லது தப்பித்துக் கொண்டு வீட்டை விட்டுப் போக முடியும். இப்போது அது சாத்தியமில்லை. ஆகவே சண்டை முடிந்தவுடன் ‘தான்’ எனும் தற்பெருமையோ அகம்பாவமோ இல்லாமல், நமக்கு இழுக்கு என்று எண்ணாமல் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எதிர் நபரிடம் இயல்பான விஷயங்களைப் பேசுவது இந்த இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்த உதவும்.
9. 10-ம் வகுப்புக் குழந்தைகளின் மன அழுத்தம் பெரிதாக இருக்கிறது. அவர்களை மகிழ்ச்சியாக உற்சாகமாக வைப்பது எப்படி?
இவர்களை எல்லா நேரமும் படி என்று சொல்லாமல், விளையாடவும் அனுமதிப்பது உதவும். அவர்கள் விளையாட்டில் பங்கேற்பது உதவும். அவர்களது நண்பர்களோடு செல்பேசியில் அரட்டை அடிக்க அனுமதிப்பதும் உதவும்.
10. ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் பியானோ சொல்லித் தருகிறேன், பீட்சா மேக்கிங் சொல்லித் தருகிறேன் என்றெல்லாம் ஒரு பக்கம் பணம் பறிக்கப்படுகிறது. நிச்சயமாக இப்படி ஏதாவது கற்றுக் கொண்டால் தான் நாம் நமது நாட்களை உருப்படியாக செலவழித்தோம் என்று அர்த்தமாகுமா?
இல்லை. இப்படி நம் நிலைமையைப் பயன்படுத்தி விதவிதமாய் சொல்லித்தரும் வியாபாரங்களை நிராகரிக்கலாம். அப்படி அந்த விஷயங்களில் நமக்கே ஆர்வம் இருந்தால், இலவசமாகக் கிடைக்கும் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாய்க் கற்றுக்கொண்டால்தான் காலத்தை விரயமாக்காமல் இருக்கிறோம் என்றில்லை, இருக்கும் திறன்களை மெருகேற்றிக் கொள்வது, நம் இல்லத்தை/ அறையை நமக்கு ஏற்றாற்போல் ஒழுங்குபடுத்திக் கொள்வது, நேரப் பயன்பாட்டுக்குப் பழகிக்கொளவது ஆகியவையும் பயனுள்ள காரியங்கள்தான்.
11. பொருளாதார தன்னிறைவு பெற்றவர்கள் அன்றாட சமையலுக்குக் காட்டும் மெனிக்கெடலும் அதை சமூக ஊடகங்களில் பகிர்வதும் குற்றம் சாட்டப்படுகிறது. சிலர் குற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்மையிலேயே ஊரடங்கு காலத்தில் உணவுப் பகட்டு தவறா? அப்படியென்றால் அதை எப்படி அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்?
எந்தப் பகட்டும் சரியிலாததுதான். அப்படி ஒரு போலியான பெருமிதத்தைப் பறைசாற்றுபவர் உங்கள் நண்பராக இருந்தால் அவர்களுக்கு இதை ஒரு தனிப்பட்ட செய்தியின் மூலம், உரையாடல் மூலம் சொல்லிப் புரியவைக்க முயலலாம். இப்படிப்பட்டவர்களின் முதிர்ச்சியில்லாத செயல்பாடுகள் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அவர்களை உங்கள் வட்டத்திலிருந்து ஒதுக்கிவிடலாம். யாரையும் திருத்துவது மாற்றுவது என்பதெல்லாம் எளிதல்ல.
12. பொருளாதார மந்தநிலை, தேக்கநிலை இன்னும் பெரிய தடிமனான வார்த்தைகளால் உலகப் பொருளாதார எதிர்காலத்தை சிலர் கணித்துச் சொல்லும் போது சாமானியர்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடாமல் இருக்க என்ன செய்யலாம்?
கடவுள் நம்பிக்கை உள்ளோர் பிரார்த்தனை செய்யலாம். அது இல்லாதவர்கள் வரும் கடினமான காலத்தைச் சமாளிப்பது எப்படி என்பதை நிதானமாக யோசித்து, அது குறித்து நிறைய படித்து, தெரிந்தவர்களிடம் கேட்டு திட்டமிடலாம்.
13. தினமும் சானிடைசர் குடித்து மரணம், ஷேவிங் க்ரீம் குடித்து உயிரிழப்பு என்றிருக்கும் குடிநோயாளிகளும், அவர்களால் பாதிக்கப்படும் இரண்டாம் நிலை நோயாளிகளான குடும்பத்தினருக்கும் என்ன தீர்வு?
இது நெடுங்காலமாய் உள்ள பிரச்சினை. இன்று மது கிடைப்பது அரிதாகி விட்டதால் வெகுசிலர் இப்படி முட்டாள்தனமாய் எதையாவது குடித்து விட்டுச் சாகிறார்கள். இப்படிச் செய்யாதவர்கள் கடை திறக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். எப்படியும் இவர்களால் இதுவரைக்கும் கூட இவர்களது குடும்பத்திற்கு நிம்மதி இருந்ததில்லை. இதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி மதுவிலிருந்து இவர்கள் விடுபட விரும்பினால் அப்போது அவர்களை அரசு மனநல மருத்துவ மையங்களுக்குக் கொண்டு செல்லலாம். வெறும் ஆலோசனை உதவாது.
14. இது ஊரடங்கு தான். முற்றுப்புள்ளி அல்ல அதற்குப் பின் மீண்டும் ஒரு வாழ்க்கை புதிய நம்பிக்கை உண்டு என்பதற்கான நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லுங்களேன்.. உளவியல் பார்வையில்...
இருள் நிரந்தரமல்ல- உயிர் இருக்கும் வரை. உடலளவில், மனத்தளவில் சோர்ந்து விடாமல் இருந்துவிட்டால், நாளை விடியும்போது உழைக்கவும், உழைப்பின் வெற்றியை ருசிக்கவும் முடியும். அதற்கு நிதானமாய் இருப்பதைப் பழகிக்கொள்ள வேண்டும். இப்போது கிடைத்திருக்கும் காலத்தை நம் பழக்கங்களை மெருகேற்ற, குறைகளைக் குறைத்துக் கொள்ளப் பழகினால், மீதமுள்ள வாழ்க்கை நிச்சயமாய் நன்றாகவே அமையும்.
ஆலோசனைகளைப் பற்றுவோம். மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம். உடல் நிச்சயமாக உற்சாகம் பெறும். மே 3-க்குப் பின் புது நம்பிக்கையுடன் நம் வாழ்வை எதிர்கொள்ளலாம்.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in