பேரிடர் காலங்களில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் சமூக வலைதளங்கள் சாமானிய மக்களுக்குக் கைகொடுக்கும் காப்பாளனாக இருப்பதை, தற்போதைய கரோனா யுத்த களத்திலும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, ட்விட்டரின் பங்களிப்பை விவரித்தே ஆகவேண்டும்.
தொழிலாளர்களுக்கு உதவி
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கிய சில நாட்களிலேயே, மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால், எந்தவொரு அத்தியாவசியப் பணியும் நடைபெறவில்லை. வெளிமாநிலங்களில் பணிகளுக்குச் சென்ற தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களோ சாப்பாட்டுக்கு வழியின்றித் தத்தளித்தபோது, ட்விட்டர் தளம்தான் கைகொடுத்துள்ளது.
தொழிலாளர்கள் தாங்கள் சிக்கிக் கொண்ட நிலையை தங்கள் அதிகாரிகளிடம் கூற, அவர்களோ மாநில அரசின் உதவிகளை நாடினார்கள். அந்த மாநில அரசோ, தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கும் மாநில அரசின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு தொழிலாளர்களின் தொலைபேசி எண்கள், இருப்பிடம் ஆகியவற்றைத் தெரிவித்து, 'இவர்களுக்கு உதவுங்களேன்' என்று வேண்டுகோள் விடுத்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட மாநில அரசு, தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து, அதன் புகைப்படத்தை எடுத்து 'செய்துவிட்டோம்' என்று கூறினார்கள். உடனே நன்றியுடன் அந்த உரையாடல் நிறைவடைகிறது.
இவ்வாறு பல்வேறு மாநில அரசுகள் விடுத்த வேண்டுகோளுக்கு தமிழக அரசு உதவி செய்துள்ளது. அவை அனைத்துமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் கணக்கைப் பார்த்தால் தெரியவரும்.
கரோனா தொற்று அப்டேட்
கரோனா தொற்று எத்தனை பேருக்கு உள்ளது, புதிதாக கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என அனைத்தையுமே உடனுக்குடன் ட்விட்டர் தளத்தில்தான் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்காகவே @NHM_TN (https://twitter.com/NHM_TN) என்ற ட்விட்டர் பக்கம் இயங்கி வருகிறது. மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோரும் தங்களுடைய ட்விட்டர் தளங்களில் அவ்வப்போது விழிப்புணர்வு தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும், தனது ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பும் நபர்களுக்கும் உடனுக்குடன் பதிலளித்து வருகிறார் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ்.
அப்ளாஸ் அள்ளிய தமிழக முதல்வர்
எப்போதுமே சட்டப்பேரவையில் தனது உரை, அறிக்கைகள் உள்ளிட்டவை மட்டுமே தமிழக முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை தமிழக முதல்வர் ட்விட்டர் தளத்தின் செயல்பாடு பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அண்டை மாநில முதல்வர்களின் வேண்டுகோளுக்கு உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு உதவுமாறு கூறியதில் தொடங்கி தன்னுடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு உதவி கேட்காதவர்களுக்குக் கூட உதவிகள் கிடைக்கும் என்று ட்வீட் செய்து அப்ளாஸ் அள்ளினார்.
களமிறங்கிய கட்சிகள்
தமிழக அரசு மட்டுமன்றி அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுமே பொதுமக்களுக்கு உதவி செய்யக் களமிறங்கியுள்ளன. இதுவுமே அவர்களுடைய ட்விட்டர் தளம் மூலமே தெரிந்துகொள்ள முடிகிறது. அதிமுக சார்பில் முகக் கவசங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
திமுக சார்பில் சம்பந்தப்பட்ட மாவாட்டங்களில் உதவிகள் கேட்போருக்கு திமுக இளைஞரணி நேரடியாகவே உதவிகள் செய்து வருகிறது. இதனை https://twitter.com/dmk_youthwing இந்த ட்விட்டர் தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல் பாஜக கட்சியினரும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். இதையும் பாஜக கட்சியினரின் ட்விட்டர் தளங்களில் காண முடிகிறது.
மத்திய அரசின் செயல்பாடுகள்
கரோனா தொற்று இந்தியாவுக்குள் வந்ததிலிருந்தே, அதற்கான தகவல்களை வெளியிடுவதற்கு என்று தனியாக https://twitter.com/mygovindia இந்த ட்விட்டர் கணக்கைத் தொடங்கியுள்ளார்கள். இதில் உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது, கரோனா தொடர்பான வதந்திகளுக்கு பதில், கரோனா தொடர்பான விழிப்புணர்வு, மருத்துவர்களின் பேட்டிகள் எனத் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது. இவை தவிர்த்து, கரோனா அச்சுறுத்தலால் தொழில்நுட்ப ரீதியில் நாம் முன்னேறி இருக்கிறோம் எனச் சொல்லலாம். எப்படியென்றால், அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சியில் பிரதமர் மோடி கலந்துரையாடியது உள்ளிட்ட சில விஷயங்களைச் சொல்லலாம்.
விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரபலங்கள்
படப்பிடிப்பு எதுவுமே நடைபெறவில்லை. ஊரடங்கு என்பதால் வெளியே செல்லவும் முடியாது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களிலேயே கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வெளியே செல்லாதீர்கள் என்று விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இதுவரை விஜய், அஜித், சிம்பு, விக்ரம், கார்த்தி, விஷால் உள்ளிட்ட சிலரைத் தவிர அனைவருமே வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். இதில் சிலர் ட்வீட் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் முக்கியமான நடிகர்களின் விழிப்புணர்வு வீடியோவினை தமிழக அரசு எடுத்து, அரசாங்கம் சார்பில் பயன்படுத்திக் கொண்டது. மேலும், மணிரத்னம் மகன் நந்தன் வெளிநாட்டிலிருந்து வந்ததால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட வீடியோவை சுஹாசினி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வாழ்த்துகளை அள்ளிக்கொண்டார் நந்தன்.
வதந்திகளுக்கும் குறைவல்ல...
பல நேர்மறையான விஷயங்கள் ட்விட்டர் தளத்தில் நடந்தாலும், எதிர்மறையான விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது. கரோனா தொடர்பான அச்சத்தை உணராமல் குவிந்த மீம்ஸ்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எனினும், துன்ப வேளையிலும் சற்றே இளைப்பாறச் செய்த வகையில் அந்த மீம்ஸ்களை குறைசொல்வதைத் தவிர்க்கலாம். ஆனால், தவறான தகவல்களைப் பரப்புவதிலும் சிலர் தீவிரமாக இருக்கின்றனர். அரசியல் தலைவர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாகப் பரப்பி, அதற்கு அவர்கள் மறுப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், நடிகர்களின் ரசிகர்களோ கரோனா அச்சுறுத்தி வரும் சமயத்தில்கூட தங்களுடைய நடிகர்களுக்காக இந்திய அளவில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து முகம் சுளிக்க வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் - அஜித் ரசிகர்கள்தான்.
தொடர வேண்டும்...
இந்த கரோனா வைரஸ் அச்சுறுத்தலின்போது மாநில அரசுகளுக்கு மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அது சமூக வலைதளம் மூலமாக வெளிப்பட்டது. இந்த கரோனா அச்சத்தோடு நின்றுவிடாமல் தொடர்ச்சியாக அவசரத் தேவைகளுக்கு கடிதம் எழுதுவதை விட, ட்விட்டர் மூலமாகவே குறிப்பிட்டு வேலைகளைத் துரிதப்படுத்தலாம். அதேபோல், அரசியல் கட்சிகளும் இப்போது களமிறங்கி என்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டுச் செய்வதைப் போல தொடர்ச்சியாகச் செய்யவேண்டும்.