விருதுநகர் மாவட்டத்தில் 'அதிரடி' அரசியல் செய்த தாமரைக்கனி இறந்துவிட, சலம்பலுக்குப் பேர் போன சாத்தூர் ராமச்சந்திரன் சாந்தமாகிவிட, 'அவர்களை எல்லாம் மிஞ்சியவன் நான்' என்பதுபோல அடாவடி அரசியல் செய்துவருபவர் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
அண்மைக்காலமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிவரும் நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்கக் கோரி திமுக, காங்கிரஸ், இஸ்லாமிய அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், திடீரென கேடிஆரை விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
படிப்படியான வில்லங்க ரூபம்!
2011-ல், ஜெயலலிதா அரசில், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சராக இருந்த கேடிஆர், 2016-ல் பால்வளத் துறை அமைச்சராக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்குப் பயந்த நல்ல பிள்ளையாக இருந்த அவர், ஜெயலலிதா மறைந்ததும் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார். சசிகலா போஸ்டரைக் கிழித்த அதிமுகவினரை அவர் விரட்டி விரட்டி அடித்த வீடியோ வெளியானதுதான், அடாவடி அரசியலுக்கு முதல் சாட்சியம்.
அடுத்து 'கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன்' என்று கேடிஆர் சொன்னது மீடியாவில் பரபரப்பாக, விளம்பர வெறியும் அவரைப் பிடித்து ஆட்டத் தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில்,'திமுகவினரை வீடு புகுந்து அடிங்க' என்று பகிரங்கமாக உத்தரவிட்டார். விருதுநகர் எம்.பி.யான மாணிக்கம் தாகூரை, 'பன்றியைச் சுடுவது போல சுடணும்' என்று சொன்னார். பத்திரிகை நிருபர் கார்த்தி மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டது. இது நாடாளுமன்றம் வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்தே கேடிஆரின் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆளுங்கட்சியினர் சொல்லும் கதை
ஆனால், பதவி பறிபோன கதையே வேறு என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர். மைக்கைப் பார்த்துவிட்டால் கட்டுப்பாடே இல்லாமல் கரடு முரடாகக் கருத்துச் சொல்பவர் ராஜேந்திர பாலாஜி. முதல்வர் ஈபிஎஸ்ஸும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் பலமுறை கண்டித்தும் அவரால் நாக்கைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. யாரையும் விமர்சிக்காத ஓபிஎஸ் கூட ஒருமுறை, ''அவர் பால்வளத் துறை அமைச்சர் அல்லவா… அதனால்தான் பொங்குகிறார்'' என்று பத்திரிகையாளர்களிடம் சொன்னார். அதன் பிறகும் அமைச்சர் அடங்கவில்லை.
நானே ராஜா
ராமநாதபுரம் அமைச்சர் மணிகண்டனைப் போலவே, தன் மாவட்டத்துக்கு, தான் மட்டுமே ராஜா என்பதைப் போல செயல்பட்டார் கேடிஆர். தன்னுடைய மாவட்டத்துடன் அரசியல் ரீதியாகத் தொடர்புடைய அமைச்சர்களை மாவட்டத்துக்குள் நுழையவிடுவதே கிடையாது. மீறி கட்சிக்காரர்கள் யாராவது அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், கெட்ட வார்த்தையில் திட்டுவதாகவும் அவர் மீது புகார்கள் உண்டு. இந்த விஷயங்களை எடப்பாடியின் காதை எட்டியபோது, “அவருக்கென்ன கொம்பா இருக்கு? இது அம்மா கொடுத்த பதவி. எவனும் கை வைக்க முடியாது” என்று கட்சியினரிடமே கேடிஆர் எகிறியதாகவும் சொல்கிறார்கள்.
தனக்கே முக்கியத்துவம்
கூடவே, இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர். ''ஜெயலலிதா மறைந்த பிறகு, தன்னைப் பெரிய தலைவராகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார் கேடிஆர். ‘போஸ்டர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் படத்தைவிட தனது படத்தைத்தான் பிரதானமாக இருக்க வேண்டும்’ என்பது மாவட்ட அதிமுகவினருக்கு அவர் கொடுத்துள்ள வாய்மொழி உத்தரவு.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தலைவர்களாகவே அவர் கருதவில்லை. இரு மாதங்களுக்கு ஒருமுறை ஓபிஎஸ் தன்னுடைய சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், குலசாமி கோயிலுக்கும் வருவார். அதைக்கூட, 'ஏன் என்னிடம் சொல்லாம இந்தாளு என் மாவட்டத்துக்கு வர்றாரு?' என்று கமெண்ட் அடித்திருக்கிறார் கேடிஆர்.
மதுரையில் அழகிரி ஆட்கள் எப்படி ஸ்டாலினை அவமதித்தார்களோ, அப்படி கேடிஆர் ஆட்கள் ஓபிஎஸ்ஸை உதாசீனப்படுத்துவதும் ஊரறிந்த ரகசியம். மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் கொஞ்சம்கூட வேலை பார்க்கவில்லை. கேட்டால், 'மற்ற ஊர்களில் மட்டும் ஜெயிச்சிட்டீங்களோ?' என்று திருப்பியடித்தார். பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கேடிஆரின் இந்துத்துவ கருத்துக்களைத் தொடர்ந்து பாராட்டியதன் விளைவோ என்னவோ மனிதருக்கு அடுத்த முதல்வர் ஆசையும் வந்துவிட்டது” என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர்.
2016 வரையில், தான் சார்ந்த விஸ்வகர்மா சமூகத்தில் இருந்து யாராவது பார்க்க வந்தால்கூட, '''நம்ம சாதிக்காரன் ஒருத்தன் வளர்ந்தால் உங்களுக்குப் பிடிக்காதே, உடனே துண்டைத் தூக்கிட்டு வந்திடுவீங்களே'' என்று பேசிய, அதே கேடிஆர், தனக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்று சாதி ரீதியாகவும் இப்போது அணி திரட்ட ஆரம்பித்திருக்கிறார்.
காலை வாரிய கான்ட்ராக்ட்
இப்படிப் பல்வேறு செயல்களால் முதல்வரின் முழு அதிருப்தியை சம்பாதித்துவிட்டார். இருந்தாலும் அவரை நீக்குவதற்கு உடனடிக் காரணம், கான்ட்ராக்ட் விஷயம்தான் என்கிறார்கள் கட்சிக்காரர்கள். “விருதுநகர் மருத்துவக் கல்லூரி கட்டும் 358 கோடி ரூபாய் கான்ட்ராக்ட்டை, தான் சொன்ன ஆளுக்குக் கொடுக்கவில்லை என்பதால் முதல்வரிடமே முறைத்துக்கொண்டார் கேடிஆர். முதல்வரை போனில் கூப்பிட்டு குரலை உயர்த்தியதாகவும் சொல்கிறார்கள். கரோனா நேரம் என்பதால் தேவையற்ற சர்ச்சை வேண்டாம் என நினைத்தார் முதல்வர். அதனால்தான் அமைச்சர் பதவி தப்பித்தது. தன்னை மாற்றிக்கொள்ளா விட்டால் சீக்கிரமே கேடிஆரின் அமைச்சர் பதவியும் அம்பேலாகிவிடும்” என்கிறார்கள் அவர்கள்.
ஆனால், கேடிஆரின் ஆதரவாளர்களோ, ''மாவட்டத்துல அண்ணன மீறி யாரும் கட்சி நடத்த முடியாது. இந்த விவகாரம்கூட இஸ்லாமியர்களைக் குளிர்விப்பதற்காக எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கைதான். 'உங்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். அமைச்சர் பதவி வேண்டுமா... கட்சிப் பதவியா?' என்று சாய்ஸ் கொடுத்தார்கள். ‘அமைச்சர் பதவி என்னிடம் இருந்தால், கட்சியும் கட்டுப்பாட்டில் இருக்கும். தேர்தல் நேரத்தில் மீண்டும் கட்சிப் பதவியைத் தாருங்கள்’ என்று அண்ணன் சொன்னதைக் கேட்டே, மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார்கள்'' என்று கண் சிமிட்டுகிறார்கள்.
கேடிஆர் என்ன சொல்கிறார் என்று கேட்டறிய, அவரது செல்போனைத் தொடர்பு கொண்டோம். பதில் இல்லை. பாஜக வட்டத்தில் தனது நெருங்கிய நண்பர்களான எச்.ராஜா உள்ளிட்டோரிடம் அவர் ஆலோசனை நடத்திக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அது உண்மையென்றால், பாஜகவை அதிமுக கழற்றிவிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையக்கூடும்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்!
* காமதேனு இதழ் ஸ்பெஷல்...