மதுரையில் உள்ள அரசு அலுவலக வளாகச் சுவர்களில் அரசியல் கட்சியினர், சினிமா நடிகர்களின் சுவரொட்டிகளை தவிர்க்கும் வகையிலும், மூலிகைச்செடி, மலர்களின் மருத்துவக் குறிப்புகள் படங்களுடன் கூடிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில் பெரும்பாலும் அரசியல் கட்சியினர் வாழ்த்து மற்றும் வரவேற்பு என துதிபாடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும்.
அதற்கடுத்தாற்போல், சினிமா நடிகர்களின் விளம்பர சுவரொட்டிகளும், தனி நபர்களின் திருமண வாழ்த்து சுவரொட்டிகள், கண்ணீர் அஞ்சலி, நினைவு அஞ்சலி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு அரசு அலுவலகங்கள் போல் இல்லாமல் காட்சி அளிக்கும்.
தேவையில்லாத சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடுக்க முடியாமல் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
தற்போது அரசுத்துறை சுவர்களில் அரசியல் கட்சியினர், தனிநபர்கள், சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்கவும், அதில் மக்களுக்கு பயன்தரும் தகவல்களையும் வழங்கும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டு வருகின்றன.
அதில் பாரம்பரிய மூலிகை செடிகள், பழங்களின் பயன்கள் குறித்தும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதில் தற்போதுவ் மூலிகை செடிகள், பழங்களின் மருத்துவக்குறிப்புகள் மற்றும் படங்களுடன் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இதனைப் பார்த்து இவ்வழியே செல்லும் பொதுமக்கள் பாரம்பரிய மூலிகை செடிகள் மற்றும் பழங்களின் மருத்துவக்குறிப்புகள் இடம் பெற்றுள்ளதை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த ஓவியங்களில் வில்வம் பழம், சங்குப்பூ, நெல்லிக்கனி, நித்யகல்யாணி, கற்றாழை, வேம்பு, செம்பருத்தி, சீமைசாமந்தி உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள், மற்றும் பழங்களின் படங்களுடன் கூடிய ஓவியங்கள் சட்டக்கல்லூரி அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்கா சுவர்களில் முதற்கட்டமாக வரையப்பட்டுள்ளன.