வலைஞர் பக்கம்

இடம் பொருள் இலக்கியம்: கிழமைகளின் பாடல்!

மானா பாஸ்கரன்

சில பேரைப் பார்த்தவுடன் மனசின் கால்கள் சந்தோஷ சலங்கை கட்டிக்கொள்ளும். அப்படி ஒரு சந்தோஷ அலை அடித்தது… கவிஞர் பரணி சுபசேகரைச் சந்தித்தபோது.

அப்படி என்ன அவர் செய்துவிட்டார் என்று கேட்கிறீர்கள்தானே?

மனிதர் நம் தங்கத் தமிழில் ஒரு சாதனை செய்து அசத்தியிருக்கிறார். அந்த அசத்தலுக்குத்தான் அவருக்கு விருதுகள் கிடைத்துள்ளன. அத்தனையும் அவரைத் தேடியும் நாடியும் வந்த நல்விருதுகள்!

ஒரு நாள்கூட தவறாமல் நள்ளிரவு 12 மணிக்கு… அப்போது பிறந்த அந்த நாளை வரவேற்று மரபுக் கவிதை எழுதி அரங்கேற்றி வருகிறார் இவர்.

ஒவ்வொரு கவிதையும் 20 வரிகள் கொண்டதாக வாசிக்க வசீகரமாக உள்ளது என்பதுதான் இதில் இருக்கும் சிறப்பாகும்.

நாம் ஒரு நாளின் அதிகாலையில் முகநூலையோ, வாட்ஸ் அப்பையோ திறந்தால் அந்த நாளை வரவேற்பதுடன், நமக்கும் அன்றைய புத்தம் புது நாளுக்கான வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தரிசிப்போம்.

சில நண்பர்கள், சில உறவினர்கள் தொடர்ந்து இதுபோன்று அதிகாலையில் நமக்கு வணக்கமும் வாழ்த்தும் சொல்வதை ஓர் உயர்ந்த அம்சமாகவே நாள்தோறும் கடைப்பிடித்து வருவதைக் காண முடிகிறது.

அன்றைய நாளின் தொடக்கம் இப்படி வணக்க மழையுடன் ஆரம்பிக்கிறபோது யார்தான் மகிழ்ச்சிக் குடை பிடிக்க மாட்டார்கள்?

இதே பாணியில் தனக்கென புது ரூட் பிடித்து கவிதை வடித்து… அதை நாள்தோறும் நள்ளிரவில் அனைத்து நண்பர்களின் முகநூல் பக்கத்துக்கும், வாட்ஸ் அப்புக்கும் பகிர்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் கவிஞர் பரணி சுபசேகர்.

சிவகங்கையைச் சொந்த ஊராக கொண்ட இவர் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை எல்லாம் அங்கேயே முடித்தவர். ''நான் கவிஞர் மீராவின் மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்'' என தனது மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்துகொள்கிற இவர்... இளம் வயதிலேயே ‘பாரதி’ எனும் கையெழுத்து இதழை நடத்தியுள்ளார்.

மேலும், பாரதி நூற்றாண்டு விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து – இதயமலர், உதயமலர், மன்றமலர் என்கிற கையெழுத்து இதழ்களையும் நடத்தியிருக்கிற இவர்… ‘’கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள், கவிஞர் மு.மேத்தாவின் கண்ணீர்பூக்களும்தான் தன்னை கவிஞனாக்கியது’’ என்கிறார்.

இவர் இதுவரை – ஒரு கடிதம், பரணியின் கவிதைகள் (3 பாகங்கள்), விடியல் கவிதைகள் பாகம் -1 ஆகிய தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இது தவிர குப்பை அள்ளுபவர்கள், மலம் அள்ளுபவர்கள் பற்றிய ஆவணப்படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

தான் எழுதி முகநூல் மற்றும் வாட்ஸ் அப்களில் நாள்தோறும் நள்ளிரவு 12 மணிக்கு பகிரும் தனது கவிதைகளுக்கு ‘விடியல் கவிதைகள்” எனப் பெயர் சூட்டியிருக்கிறார். இப்படி இவர் அயராது 1,100 நாட்கள் தொடர்ந்து வெளியிட்ட சமீபத்திய இவரது சாதனையைப் பாராட்டி, ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என்கிற அமைப்பும் ’ஃபியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என்கிற அமைப்பும் இவருக்கு சாதனை விருது வழங்கி கவுரவித்திருக்கிறது,

சாதனை விருது பெற்ற கவிஞர் பரணி சுபசேகரை ஒரு மகிழ்ச்சிப் பொழுதில் சந்தித்தேன். தினந்தோறும் நள்ளிரவில் விடியல் கவிதை எழுதும் சிந்தனை பற்றி அவரிடம் கேட்டேன்.

‘’எனக்கு இலக்கணம் சுத்தமாகத் தெரியாது. என்னிடம் தலைக்கனமும் கிடையாது. கவிதை என்பது கடைச் சரக்கு கிடையாது. அவற்றை விற்கும் ஆசையும் எனக்கு உடன்பாடானது கிடையாது. எனக்குக் கவிதை எழுத மட்டும்தான் தெரியும். கவிதை எழுதுவதற்காக முறைப்படி தமிழ் இலக்கணமெல்லாம் நான் படிக்கவில்லை. ஆனாலும் என்னுடைய விடியல் கவிதைகளில் எதுகையும் ஓசையும் சுவையும் இருப்பதாக இதனை வாசிப்பவர்கள் அத்தனை பேரும் சொல்கிறார்கள்.

ஒரு நாளில் முதன்முறையாக ஒருவரைச் சந்திக்கிறபோது வணக்கம் செலுத்தி புன்னகை புரிவதுபோல ஒவ்வொரு நாளையும் என் விடியல் கவிதை புன்னகைத்து வரவேற்கும் விதமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொடர் முயற்சியை… பலரும் வரவேற்க ஆரம்பித்துவிட்டனர்.

என் விடியல் கவிதையை அதிகாலையில் வாசித்துவிட்டு தனது அன்றாடப் பணிகளை ஆரம்பிக்கிற தமிழ் நெஞ்சக் கூட்டம் ஒன்று என்னை முகநூலிலும், புலனத்திலும் (வாட்ஸ் அப்) தொடர ஆரம்பித்துவிட்டது. அவர்கள் என் விரல்களுக்கு விடுமுறையே கிடையாது என அன்பு கட்டளை இட்டுள்ளனர்.

தொடர்ந்து ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் அதுவே ஒரு சாதனையாக அமைந்துவிடும் என்று உவமைக் கவிஞர் சுரதா சொல்வார். அப்படித்தான் எனது தொடர் முயற்சிக்கு… மற்றவர்கள் சாதனை எனும் மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

எனது ஒவ்வொரு விடியல் கவிதையிலும் அந்தக் கிழமையைப் பற்றிய பெருமையும், அந்தக் கிழமையின் பெயரும் அதில் இடம்பெற்றிருப்பது மாதிரி பார்த்துக்கொள்வேன்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் கவிஞர் பரணி சுபசேகர்.

சத்யஜித்ரே தனது மிக முக்கியமான படைப்புக்கு – ‘சாலைகளின் பாடல்’ என்று பெயரிட்டிருப்பார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது புகழ்பெற்ற ஒரு படைப்புக்கு ‘கால்களின் ஆல்பம்’ என்று பெயரிட்டிருப்பார். பரணி சுபசேகரின் விடியல் கவிதைகளை நாம் ‘கிழமைகளின் பாடல்’ என்றழைப்போம்!

SCROLL FOR NEXT