வாட்ஸ் அப்பும் ஃபேஸ்புக்கும் வந்தாலும் வந்தது. தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரன் என்பது போல யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பரப்ப முடியும் என்றாகிவிட்டது.
முன்பெல்லாம் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் ஒரு தகவலைத் தெரிவிக்க தொலைபேசியில் ஒவ்வொருவரின் எண்ணாக டயல் செய்து தெரிவிப்போம். அதற்கு முன்பு கடிதப் போக்குவரத்தை மேற்கொண்டோம். ஆனால், தற்போது அனைத்து விதமான தகவலையும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு அனுப்ப முடியும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஆனால் நாம் அனுப்பும் தகவல்கள் சரியானவைதானா? அவற்றால் ஏற்படப்படப்போகும் விளைவுகள் என்ன? என்பதையெல்லாம் யோசிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. யாரோ ஒருவர் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு அனுப்பும் தகவலை கண்ணை மூடிக் கொண்டு மற்றவர்களுக்கும் ஃபார்வர்டு செய்து விடுகிறோம். இதில் வாக்கியங்களின் முடிவில் ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்’ என்ற மிரட்டல் வேறு.
நாம் அனுப்பும் ஒரே ஒரு தவறான தகவல் மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தவல்லது என்பதை அதை அனுப்புபவர்கள் உணர்வதே இல்லை. கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம். மலேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த ருக்மணி என்ற 65 வயதுப் பெண்மணி தன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்வதற்காக திருவண்ணாமலை வந்தார். அதற்கு முந்தைய சில வாரங்களாகவே குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றைப் பற்றிய வாட்ஸ் அப் தகவல் திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்தது.
ருக்மணி அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு அன்பாக வெளிநாட்டு மிட்டாய்களைக் கொடுத்திருக்கிறார். இதைக் கண்ட சிலர், ருக்மணி குழந்தைகளைக் கடந்த வந்தவர் என்று தவறாக எண்ணி அவரை அடித்தே கொன்றனர். எந்தக் கவலையுமின்றி யாரோ ஒருவர் அனுப்பிய தகவல் ஒரு உயிரைப் பறித்தது. இது தமிழகத்தின் கதை. வட மாநிலங்களிலோ நிலைமை இன்னும் மோசம். இந்தியாவில் மட்டும் வாட்ஸ் அப் வதந்திகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20க்கும் மேல்.
வாட்ஸ் அப் வதந்திகளின் வீரியத்தைக் குறைக்க வாட்ஸ் அப் நிறுவனம் மற்றவர்களிடமிருந்து அப்படியே இன்னொருவருக்கு அனுப்பும் மெசேஜ்களில் ‘forwarded' என்ற குறியீடு இருக்கும் என்று அறிவித்தது. மத்திய மாநில அரசுகளும் பொய்த் தகவல்களைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் அவற்றின் வீரியம் குறைந்தபாடில்லை.
திருப்பதிக்கு மொட்டை அடித்தவரின் புகைப்படத்தை எடுத்து ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுங்கள்’ என்ற வாக்கியத்தோடு பரப்பி காசு பார்த்த சம்பவங்களும் உண்டு. தனக்குப் பிடிக்காத ஒருவரைப் பழிவாங்க, அவரது புகைப்படத்தையும் அதோடு அவரை தீவிரவாதியாகவோ, திருடனாகவோ, கடத்தல்காரனாகவோ அவரைச் சித்தரித்து எழுதப்பட்ட வாக்கியங்களையும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பரப்பிவிட்டவர்களும் உள்ளனர். இவற்றைப் படிக்கும் பாமர மக்களுக்கு இதன் பின்னணியையும், உண்மைத்தன்மையும் ஆராயத் தெரியுமா? இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி எச்சரிக்க வேண்டுமே என்ற நல்ல நோக்கத்தோடு அவர்களும் இதை அடுத்தவர்களுக்கு அனுப்பி விடுகின்றனர். நேரத்தையும், தகவல் பரிமாற்றத்தையும் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் நிலை இன்று இப்படித்தான் இருக்கிறது.
அந்த வகையில் சமீபகாலங்களில் இந்த வாட்ஸ் அப் வதந்தி கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உயிரினம் ‘பிராய்லர் கோழி’. பேசும் சக்தி இருந்திருந்தால் தன்னை விட்டுவிடச் சொல்லி வாய் விட்டே கதறிவிடும் போலிருக்கிறது. ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா’ என்பதைப் போல நாட்டில் என்ன நடந்தாலும் அதற்காக அடிவாங்குவது பிராய்லர் கோழிதான். வாட்ஸ் அப் வதந்தி பரப்புபவர்களைப் பொறுத்தவரை டெங்கு முதல் பன்றிக் காய்ச்சல் வரை வராமல் தடுப்பதற்கான ஒரே தீர்வு கோழிக்கறியைச் சாப்பிடாமல் இருப்பதுதான். சிக்கன் சாப்பிட்டால் சிக்குன் குனியா காய்ச்சல் வரும் என்று பரப்பிய கொடுமையெல்லாம் கூட சில வருடங்களுக்கு முன்னால் பார்த்தோம்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் உணவுப் புரட்சியை கையிலெடுத்தது. அதில் முக்கியமான ஒன்று ‘பிங்க் புரட்சி’. பிங்க் புரட்சியின் நோக்கம் மக்களின் புரதச் சத்து மற்றும் கொழுப்புச் சத்தை உறுதி செய்வது. இதற்காக 1975 ஆண்டுவாக்கில் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டதே ‘பிராய்லர் கோழி’.
பிராய்லர் கோழிக்கறியால் பாதிப்பே இல்லையா என்ற கேள்வி எழலாம். தொடர்ந்து பிராய்லர் கோழிக்கறி உட்கொள்ளும் ஒருவருக்கு உடல் பருமன், உடல் சூடு அதிகரிப்பது உள்ளிட்ட பொதுவான பிரச்சினைகள் ஏற்படுகிறதென்றாலும் சில நாட்களுக்கு முன்பு பரப்பப்பட்ட கோழிகளுக்கு போடப்படும் ஹார்மோன் ஊசிகளால் ஆண்கள் ஆண்மையிழந்து விடுவார்கள், பெண்கள் விரைவில் பூப்பெய்தி விடுவார்கள் போன்ற தகவல்கள் எல்லாம் ஆதாரமில்லாதவை.
மக்களின் பயன்பாட்டுக்கு வரும் மருந்துகளின் சாதக பாதகங்களை மனிதர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால் விலங்குகளின் மீது பரிசோதிக்கும் முறைக்கு பெயர் Randomized controlled trial. இந்த RCT மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பிராய்லர் கோழிக்கறியால் ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை உள்ளிட்டவை ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு மருத்துவ ஆய்வுக் குறிப்பும் இல்லை.
இந்நிலையில் தற்போது சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 3000 பேர் இறந்துள்ளனர். கரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே கரோனா வைரஸுக்கு காரணம் சீனர்களின் கண்டதையும் சாப்பிடும் உணவுப் பழக்கம் என்றொரு கருத்தும் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு அறிவியல்ரீதியாக எந்த ஆதாரமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
நிலைமை இப்படியிருக்க கடந்த சில தினங்களாக இந்தியாவில் பிராய்லர் கோழிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவி விட்டதாகவும் அதைச் சாப்பிட்ட பலர் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் உலவுகின்றன. கரோனா வைரஸை விட இந்தத் தகவல்கள் வேகமாக இந்தியா முழுவதும் பரவி வருகின்றன.
உலகில் எந்தவொரு நாட்டிலும் கோழிக்கறி மூலமாக கரோனா வைரஸ் பரவியதாகத் தெரியவில்லை. கோழிக்கறி மட்டுமல்ல எந்த மாமிசத்தினாலும் கரோனா வைரஸ் பரவாது என்றும் எந்த உணவானாலும் நன்கு சுத்தம் செய்து வேக வைத்துச் சாப்பிடுமாறும் உலக சுகாதார நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலியில் உள்ள கோழிக்கடை உரிமையாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பிராய்லர் கோழிக் கறி சாப்பிட்டால் கரோனா வைரஸ் வருவதாகப் பரவி வரும் தகவலைத் தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அத்தகவலைப் பரப்பியது ஒரு 17 வயது சிறுவன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சிறுவனைப் பிடித்து விசாரித்ததில் கடனுக்கு கோழிக்கறி தராததால் கோபத்தில் வதந்தி பரப்பி விட்டதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறான் அந்த சிறுவன்.
இது ஒரு உதாரணம்தான். இந்தியா முழுக்க பரப்பப்படும் இது போன்ற ஏராளமான சம்பவங்களுக்குப் பின்னால் பெரும்பாலும் பொறாமையும், வன்மமுமே மறைந்து கிடக்கிறது. எந்தவித அடிப்படையும் இல்லாமல் பரப்பப்படும் இது போன்ற தகவல்களால் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கோழி விற்பனை 50% சதவீதம் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் கிலோ ரூ.70க்கு விற்கப்பட்ட கோழிக்கறி ரூ.35 வரை இறங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புலம்புகிறார்கள் கோழிப்பண்ணை உரிமையாளர்கள்.
கோழிக்கறி மூலம் கரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவலை மத்திய கால்நடை பராமரிப்பு ஆணையமும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தெலங்கானாவில் பொதுமக்களின் அச்சத்தைப் போக்க அம்மாநில அமைச்சர்கள் மேடையிலேயே கோழிக்கறி சாப்பிட்டதெல்லாம் கூட கடந்த வாரம் நடந்தது.
எது எப்படியோ ‘கரோனா’ என்னும் அறிமுகமற்ற அரக்கனை எதிர்த்து ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. நாமும் நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற திருக்குறளுக்கு ஏற்ப நமக்கு வரும் தகவலை ஆராயாமல் அப்படியே பகிர்ந்து பின்னால் ஏற்படும் விளைவுகளுக்குக் காரணமாகி விடாமல் இருக்க வேண்டும்.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி நல்லது செய்யவில்லையென்றாலும் கூட பிறரின் வாழ்வை அழிக்கும் அளவுக்கு வல்லமை படைத்த வதந்திகளைப் பரப்பாமல் இருப்பதே இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது.