வலைஞர் பக்கம்

புதிய பார்வை, புதிய பாதை: வழிகாட்டும் கர்ண வித்யா தொழில்நுட்ப மையம்

செய்திப்பிரிவு

பார்வையிழப்பு ஊனம் கிடையாது. இதுவும் படைப்பின் இன்னொரு வடிவமே. வளர்ந்துவரும் தொழில்நுட்பம், எண்ணற்ற உதவிகளை எங்களுக்குச் செய்கின்றது. கணினியை நாங்கள் 'கண் இனி' என்றுதான் கூறுகிறோம்.

கண்ணிருந்தும் வாழ்வை வெளிச்சமாக்கிக் கொள்ளத் தெரியாமல் முயற்சியற்றிருக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். தன்னம்பிக்கையோடு கூடிய இடைவிடாத முயற்சியின் மூலம் கண்ணில்லாத பலரும்கூட தங்கள் வாழ்வில் ஒளிபெற முயல்வதைக் காண்கிறோம். கர்ண வித்யா தொழில்நுட்ப மையம், அத்தகையவர்களுக்கு ஊன்றுகோலாக, வாழும் வாழ்வுக்கான பிடிமானத்தை அளித்து வருகிறது.

'திருஷ்டி' என்னும் பார்வையற்றவர்களுக்கான ரோட்டரி சங்கத்தினரால் தொடங்கப்பட்டது கர்ண வித்யா தகவல் தொழில்நுட்ப மையம். சமூக ஒருங்கிணைப்புக்காக 2013-ல் இந்த அமைப்பைத் தொடங்கிய திருஷ்டி, மெல்ல மெல்ல பார்வையற்றோரின் பொருளாதார உயர்வுக்கும் வழிவகை செய்ய ஆரம்பித்துள்ளது. பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சியை அளிக்கும் கர்ண வித்யா, முழுக்க முழுக்க பார்வையற்றவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது.

அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், பார்வையற்றோரின் தேவைகள் குறித்தும் நம்மிடம் விலாவாரியாகப் பேசினார் கர்ண வித்யா அமைப்பின் ஆலோசகர் ரகுராம்.

"பார்வையற்ற சிலரின் வீட்டில், பார்வையற்றோரை ஒதுக்கிவிடுகிறார்கள். சிலரின் வீட்டில், பெற்றோருக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை. அவர்களே முட்டி மோதித்தான் மேலே வருகின்றனர். ஆதரவாய் இருக்க நினைக்கும் பெற்றோர்கள் பலருக்கு வசதி இல்லை.

கர்ண வித்யா அமைப்பு அத்தகைய பார்வையற்றோரின் சுய மரியாதைக்கான இடமாகவும், வேலைவாய்ப்பு மையமாகவும் இருக்கிறது. பார்வையிழந்தவர்கள் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் ஆசிரியர் பணியைத் தாண்டி, தமிழ்நாடு தேர்வாணையம் மற்றும் வங்கித் தேர்வுப் பணிகளுக்கான பயிற்சி அளிக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களில், இங்கே பயிற்சி எடுத்த பத்துக்கும் மேற்பட்ட பார்வையற்றோர், பரந்துபட்ட இடங்களில் வேலை பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். கர்ண வித்யா மாணவர் அருண் போஸ், தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் கண்காணிப்பு மையத்தில் வேலை பார்க்கிறார்.

கர்ண வித்யாவில் மூன்று விதமான இலவசப் பயிற்சி அளிக்கிறோம். முதலில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டாவதாக தனிப்பட்ட நபர்களின் தேவை அடிப்படையிலான பயிற்சி. உதாரணமாக எக்ஸல் தேவைப்படுவோருக்கு, அதனையும், கணிப்பொறி அறிவு வேண்டுவோருக்கு அதிலும் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். மூன்றாவதாக கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான மென்திறன் பயிற்சிகள் தனித்தனியாக அளிக்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் பார்வையற்றோருக்கு, மாதிரி நேர்முகத் தேர்வுகளையும் நடத்துகிறோம்.

டெய்ஸி என்னும் எழுத்துரு பார்வையற்றோர் படிக்க உதவுகிறது. கர்ண வித்யா அமைப்பின் மூலம், ஏராளமான பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களை டெய்ஸி எழுத்துருவுக்கு மாற்றியுள்ளோம். அதனை பார்வையிழந்தவர்கள் அனைவரும் படிக்க ஏதுவாக, உலகளாவிய அளவில் பார்வையற்றோரால் பயன்படுத்தப்படும் "புக்‌ஷேர்" என்னும் சர்வதேச நூலகத்தில் பதிவு செய்கிறோம்" என்கிறார்.

இவர்கள் படிக்கும் முறையைப் பற்றிக் கேட்டதற்கு, "சாரா என்று ஒரு இயந்திரம் இருக்கிறது. இது பார்வையற்றோருக்கான ஸ்கேனிங் மற்றும் வாசிப்பு இயந்திரம். இதில் இருக்கும் உதவி பொத்தானை அழுத்தினால், மற்ற பொத்தான்களின் அனைத்துச் செயல்பாடுகளையும் பொறுமையாய் விளக்கும். மேலே கேமரா இருக்கிறது. அதை ஆன் செய்து ஸ்கேன் பொத்தானை அழுத்த, ஸ்கேனிங் தொடங்கப்பட்டு விட்டது என்று குரல் ஒலிக்கும். இதன் மூலம் ஒரு முழுப்புத்தகத்தையே, எங்களுக்குத் தேவையான வடிவத்தில் படிக்க முடிகின்றது

'கர்ஸ்வில்' என்னும் மென்செயலி மூலம், ஆங்கிலம் மட்டுமல்லாது, தமிழ் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தட்டச்சு செய்யலாம். பிரெயில் எம்ப்ராஸர் மூலம், புத்தகங்களையும், தகவல்களையும் பிரெயில் முறையில் அச்செடுக்க முடிகிறது.

தகவலை நண்பர் ஒருவர் படித்துக் காண்பிப்பதற்குப் பதிலாக, கணிணி படிக்கும். விசைப்பலகையில் நாங்கள் கட்டளைகளைக் கொடுக்க, திரை தகவலைச் படித்துச் சொல்லும். நாங்கள் அதைக் கூர்மையாகக் கவனித்து உள்வாங்கிக் கொள்வோம். எங்களுக்குத் திரையும், மவுஸும் தேவையில்லை. ஒலிப்பெருக்கியும், விசைப்பலகையுமே போதும்.

தூத்துக்குடியில் இருந்து எங்கள் மையத்துக்கு வந்தார் செல்வி. நன்றாக ஓடியாடித் திரிந்தவரின் பார்வை இடையிலேயே பறிபோனது. அத்தோடு செல்விக்கு இதயநோயும் இருந்தது. வாழ்க்கையில் இனி நிமிர்வே கிடையாது என்று தளர்ந்து போயிருந்தார் செல்வி. தற்செயலாய் இம்மையம் பற்றிக் கேள்விப்பட்டவர், வந்து பயிற்சி எடுத்துக்கொண்டு, தற்போது தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார். இங்கே படித்த, ஷர்மிளா என்னும் பார்வையற்ற பெண், தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தில், ஆன்லைனில் தகவல்களை உள்ளீடு செய்யும் பணியைத் திறம்படச் செய்துவருகிறார். தேர்வாணைய இணை இயக்குநரே, இவரின் பணியைப் பாராட்டினார் என்ற ரகுராமின் முகத்தில் பெருமையும், நம்பிக்கையும் பொங்கியது.

பொறியியல், வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வமைப்புக்கு அதிகம் வருகின்றனர். வரும் மாணவர்களின் நேரம் தவறாமையையும், பொறுப்பையும் ஒழுங்குபடுத்த எண்ணியது கர்ணவித்யா. கையெழுத்துப் பதிவேட்டுக்குப் பதிலாக அவர்கள் வைத்தது 'பொட்டு பதிவேடு'. வகுப்புக்கு வருபவர்கள் வருகைப் பதிவேட்டில் தினமும் ஒரு பொட்டை ஒட்டுகின்றனர். நேரம் தவறி வருபவர்களுக்கு முக்கோண வடிவிலான பொட்டு. மாணவர்கள் தலைவர், இதை ஒழுங்குபடுத்துகிறார். ஒரு கட்டமைப்புக்கு உட்பட்ட ஒழுங்குமுறையில் செயல்படுகிறது கர்ணவித்யா.

விடாமல் தொடர்ந்து பேசிய ரகுராம், அரசு தங்களுக்குச் செய்ய வேண்டிய தேவைகளையும் கவனமாகப் பட்டியலிட்டார்.

திருஷ்டி ரோட்டரி அமைப்பு, கர்ண வித்யா அமைப்புக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் முதலிலேயே அளித்துவிட்டது. அதுபோக தன்னார்வலர்கள் அளிக்கும் பணத்தால்தான், அலுவலகத்துக்கான மின்சாரம், தண்ணீர், பராமரிப்பு செலவுகள் செய்யப்படுகின்றன. அவை போக விடுதியில் இருந்து, இங்கே வந்து படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்க வேண்டியிருக்கிறது. எங்களைப் போன்ற அமைப்புகளுக்கு அரசு உதவுவது எங்களின் செயல்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

ஒவ்வொரு கல்லூரியும் பார்வையற்றோர் மேல் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். பெயருக்கு ஒரு ஒலி நூலகத்தைத் திறந்து வைக்காமல், பார்வையற்றோருக்கான அனைத்துக் கருவிகளையும் கல்லூரியில் பொருத்த வேண்டும். அரசாங்கம், எங்களைப் போன்ற தொழில்நுட்ப மையங்களுக்கு உதவ வேண்டும். பார்வையற்றோர்களால், பெரிதாய் எதுவும் செய்துவிட முடியாது என்ற பொதுவான எண்ணம் மறைய வேண்டும். உலகளாவிய பொதுத் தட்டச்சுத் தமிழ் முறையான 'யுனிகோட்' வகையைத் தமிழக அரசும், பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும். பார்வையற்றோர், யுனிகோட் முறையில்தான் தமிழ்த்தட்டச்சு பழகுகின்றனர். பார்வையற்றோர் முன்னேற்ற்த்துக்கான ஆராய்ச்சிகள் அதிகப்படுத்தப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

பார்வையிழப்பு ஊனம் கிடையாது. இதுவும் படைப்பின் இன்னொரு வடிவமே. வளர்ந்துவரும் தொழில்நுட்பம், எண்ணற்ற உதவிகளை எங்களுக்குச் செய்கின்றது. கணினியை நாங்கள் கண் இனி என்றுதான் கூறுகிறோம். முந்தைய காலத்தைப் போல பார்வையற்றோர் சிரமப்பட வேண்டியதில்லை. தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், பார்வையற்றோரின் வாழ்க்கையும் சொர்க்கம்தான்" என்கிறார்.

ரகுராம்

நந்தனம் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராய் வேலை பார்ப்பவரிடம், எப்படி வழக்கமான மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டே, கர்ணவித்யா அமைப்பிலும் வேலை பார்க்க முடிகிறது என்று கேட்டேன். சரிந்த கண்ணாடியைச் சரி செய்துகொண்டே சிரித்தவர், பளிச்செனக் கூறினார். "ஆசிரியர்களுக்கும், வழிகாட்டுபவர்களுக்கும் தேவை தொண்டையும் மண்டையும்தான்!"

SCROLL FOR NEXT