அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் வாகிகன் நகரில் (1920) பிறந்தார். தந்தை லைன்மேன். அத்தை ஏராளமான சிறுகதைகளைப் படித்துக்காட்டுவார். அதனால், சிறு வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் கதைகள் மீதும் அலாதி ஆர்வம் உண்டானது.
l ரேடியோவில் கதை கேட்டு பிறகு அதை அப்படியே தன் பாணியில் எழுதிப் பார்ப்பார். இளம் பருவத்திலேயே ஏராளமான சாகசக் கதைகள், அறிவியல் புனைகதைகளைப் படித்தார். தான் ஒரு எழுத்தாளர் ஆகவேண்டும் என்பது 12-13 வயதில் அவர் எடுத்த முடிவு. தான் படைக்கும் ஹீரோக்கள் மங்காத புகழ் கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.
l குடும்பம் 1934-ல் லாஸ்ஏஞ்சல்ஸுக்கு குடியேறியது. கல்லூரிக்கு சென்று படிக்க குடும்ப வருமானம் இடம்தரவில்லை. வாரத்தில் 3 நாட்களுக்கு உள்ளூர் நூலகத்துக்கு சென்றுவிடுவார். இப்படி 10 ஆண்டுகள் செய்துள்ளார்.
l ‘நூலகம்தான் என்னை வளர்த்தது’ என்று அவரே கூறியுள்ளார். ஹெச்.ஜி.வெல்ஸ், ஜுல்ஸ் வெர்ன், எட்கர் ஆலன்போ போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தார். வருமானத்துக்காக பத்திரிகை விற்றார்.
l முதலில் திகில் கதைகள் எழுத ஆரம்பித்தார். 1938-ல் இவரது முதல் சிறுகதை பத்திரிகையில் வெளிவந்தது. அடுத்த ஆண்டு, அப்பத்திரிகையின் 4 இதழ்களிலும் அனைத்து படைப்புகளையும் இவரே வெவ்வேறு பெயர்களில் எழுதினார்.
l முழு நேர எழுத்தாளராக 1943-ல் மாறினார். ‘டார்க் கார்னிவல்’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1947-ல் வெளிவந்தது. ‘எ சவுண்ட் ஆஃப் தண்டர்’, ‘தி வெல்ட்’, ‘ஆல் சம்மர் டே’ ஆகிய சிறுகதைகள் பிரபலமானவை.
l அறிவியல் புனைகதை, திகில் என பல்வேறு பாணிகளிலும் கதைகளை எழுதினார். கவிதைகளையும் படைத்துள்ளார். 1950-களில் இவரது பல கதைகள் ‘ஈ.சி. காமிக்ஸ்’ நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன.
l தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான திரைக்கதையையும் இவரே எழுதினார். 1953-ல் வெளியான இவரது ‘ஃபாரன்ஹீட் 451’ புதினம் உலகப்புகழ் பெற்றது. ‘தி மார்ஷியன் குரோனிகல்ஸ்’, ‘தி இல்லஸ்ட்ரேட்டட் மேன்’, ‘சம்திங் விக்கட் திஸ் வே கம்ஸ்’ ஆகியவையும் குறிப்பிடத்தக்க படைப்புகள். இவரது பல கதைகள் திரைப்படங்களாக, தொலைக்காட்சிப் படங்களாக, தொடர்களாகத் தயாரிக்கப்பட்டு மேலும் புகழ்பெற்றன.
l அமெரிக்க தேசிய கலைப் பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரையிறங்கிய இடத்துக்கு ‘பிராட்பரி லேண்டிங்’ என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
l தினமும் பல மணி நேரம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏறக்குறைய 600 சிறுகதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். எழுத்தையே சுவாசித்துவந்த ரே பிராட்பரி 91 வயதில் (2012) மறைந்தார்.