மொபைல் போன்கள் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் என்று பெயர்தானே தவிர அதனால் ஏற்படும் குழப்பங்கள்தான் அதிகமாகி வருகிறது.
சரியா கேக்கல... என்ன... என்ன என்று நாம் 10 முறை கேட்ட பிறகு எதிராளி கோபத்துடன் போனைக் கட் செய்யும் ஒலிதான் நம்மில் பலரது மொபைல் அனுபவமாகி வருகிறது.
இதே போன்ற ஒரு சம்பவத்தில்தான் சென்னையில் உள்ள திருவான்மியூரில் வசித்து வந்த வசந்தி (70) என்பவருக்கு திருமண நாள் வாழ்த்தைத் தொலைபேசியில் கூறியுள்ளார் சகோதரர் ரவி.
போன் சரியாகக் கேட்கவில்லையா, அல்லது இவருக்குச் சரியாக காதில் விழவில்லையா என்று தெரியவில்லை. சகோதரிக்கு அவர் திருமண நாள் வாழ்த்துக் கூற சகோதரி வசந்தியோ சரியாகக் கேட்காததால் என்ன.. என்ன என்று கேட்டுள்ளார். இதில் பொறுமை இழந்த சகோதரர் ரவி ‘உன் காதில் வெடிகுண்டு வைக்க’ என்று சத்தமாகக் கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்ததாகத் தெரிகிறது.
அரைகுறையாகக் காதில் வாங்கியதன் விளைவு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் வந்ததாக மாறியது. இதனையடுத்து என்ன? போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் வசந்தியின் வீட்டுக்கு விரைந்தனர். மொபைலை வாங்கி சகோதரர் போனில் என்ன கூறினார் என்பதன் பதிவைப் போலீசார் கேட்டனர். அதன் பிறகு குடும்பத்தினரிடம் விளக்க நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.