சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே. சிந்துசமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் தான் என்பதை நிறுவுவோம், என ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ரெ.பாலகிருஷ்ணன் பேசினார்.
திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் புத்தகத்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்ற சிந்தனையரங்கத்திற்கு திண்டுக்கல் இலக்கியக்களம் தலைவர் மு.குருவம்மாள் தலைமை வகித்தார். ‘சிந்துசமவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும்’ என்ற தலைப்பில் ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ரெ.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கீழடியில் தோண்டத்தோண்ட நமக்கு சங்க கால தடயங்கள் கிடைத்துவருகின்றன. தமிழர்கள் குமரிக்கோடு கடல்கோளால் அழிந்து போனது குறித்தும் பேசிக்கொண்டே இருந்தார்கள். சுனாமியின் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை நாம் பார்த்தோம், உணர்ந்தோம். அப்படி ஒரு கடல்கோள் தாக்குதலால் தான் லெமூரியா கண்டம் அழிந்தது என பேசிக்கொண்டிருக்கிறோம். வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழகத்தின் எல்லைகள் என நம் முன்னோர்கள் வரையறுத்தார்கள்.
1050 ம் ஆண்டுகளில் ஆந்திராவில் உள்ள பல பகுதிகள் தமிழகத்துடன் இருந்தது. தமிழர்கள் தங்கள் வரலாற்று தொன்மையை தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவை எழுத்துவடிவமாக சங்க இலக்கியங்களில் படைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் என்று புராணங்கள், இதிகாசங்கள் உள்ளன.
ஆனால் சங்க இலக்கியங்கள் போன்று மக்களின் வாழ்நிலையை சொன்ன படைப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் வேறு எங்கும் இல்லை. தெற்காசிய நாடுகளில் முதன்முதலில் அச்சில் ஏறியமொழி தமிழ்மொழி தான். சிந்துசமவெளி நாகரீகத்தை பற்றி முதன்முதலில் தொல்லியல் ஆய்வு செய்தவர் சர்ஜான்மார்சல். இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்துசமவெளி மக்கள் வாழ்ந்துள்ளனர். லாகூருக்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகளின் போது நேர்த்தியாக செய்யப்பட்ட செங்கல்கற்கள் கிடைத்துள்ளன.
கட்டுமானங்கள் கி.மு.2500 ம் ஆண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. கழிவுநீர் வடிகால்கள் இருந்துள்ளன. ஒரு மேம்பட்ட நாகரீகத்திற்கு சொந்தமான மக்கள் எங்கே போனார்கள், எப்படி அழிந்துபோனார்கள் என்று கேள்வியை அனைவரும் எழுப்பினர். வங்க எழுத்தாளர் சுனில்குமார்சாட்டர்ஜி கட்டுரையில் சிந்துசமவெளிநாகரீகம் என்பது வேதகால நாகரீகத்திற்கும் முந்தயது.
இது திராவிட நாகரீகம். இன்று சிந்துசமவெளி நாகரீகத்தையொத்த ஆதாரங்கள் நமக்கு கீழடியில் கிடைத்துள்ளன.
கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு மேற்கொண்ட போது இந்த செங்கல் கட்டுமானம் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் இருப்பது போல் உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே. சிந்துசமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் தான் என்பதை நிறுவுவோம், என்றார்.