வலைஞர் பக்கம்

பிறர் வாழ்வில் ஒளியேற்ற கண் தானம் செய்வோம்! 

செய்திப்பிரிவு

நிதானமாகச் சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமியில் பரபரப்பான ஒரு வாழ்க்கை முறையில் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். எப்படி செல்போன் மூலமாக பேசிக் கொள்வது அதிகரித்து அருகில் இருப்பவரிடம் பேசிக் கொள்வது குறைந்து போனதோ அதேபோல் தானமும் ஆகிவிட்டது.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அனைவராலும் அவ்வளவு எளிதாக அன்னதானம் செய்ய இயலாது. இருப்பினும் பலர் பண்டிகை நாட்களிலும், திருவிழாக்களிலும் தங்களால் இயன்ற அளவிற்கு அன்னதானம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்றாலும் அனைவராலும் மதிக்கதக்க சிறந்த தானம் கண் தானம். மனிதன் இறந்த பின்பு இருளில் மறைந்தாலும் அவனது கண்கள் பிறர் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க உதவுவது தான் கண் தானம்.

இந்தியாவில் தோராயமாக 4.6 மில்லியன் மக்கள் கருவிழி பாதிப்பால் பார்வையை இழந்துள்ளனர். நாம் செய்யும் இந்த கண் தானம் மூலமாக அவர்களது வாழ்வில் வெளிச்சத்தைப் பரப்ப முடியும். கண் தானம் செய்வதற்கு வயது வரம்பே கிடையாது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் என குடும்பத்தில் உள்ள அனைவருமே கண் தானம் செய்யலாம். கண் தானம் செய்ய இயலாதவர்கள் என்று பார்த்தால் வெறிநாய்க்கடி, தொற்று நோய், எய்ட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலர் கண் தானம் செய்ய ஆர்வமாக இருந்தாலும் எதை எப்படிச் செய்வது? எங்கு போய் செய்வது? யாரிடம் ஆலோசனை கேட்பது? என பல குழப்பங்களால் அதைச் செய்யத் தவறிவிடுகின்றனர்.

நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம், யாரையும் தேட வேண்டாம். மிகவும் எளிய முறையிலே நம் கையில் இருக்கும் தொலைபேசி, கணினி வாயிலாகவே இதை சேவையை நாம் சுலபமாக செய்யலாம். கூகுளில் எதை எதையோ தேடும் நம் விரல்கள் ஒரு வினாடி 'Eye Donation Form'என்று தேடினாலே அதில் நம் தேடலுக்கான விடை கிடைத்துவிடும்.

உங்கள் ஊர்/ பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு கண் மருத்துவனையின் பெயரைக் குறிப்பிட்டு 'Eye Donation Form' என்று தேடும் போது அதில் நம்மைப் பற்றிய விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பப் படிவம் தோன்றும். அதை நாம் சரியாகப் பூர்த்தி செய்து ஓகே கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் கண் தானம் செய்து விட்டீர்கள்.

பிறகு அந்த கண் தான மையத்தில் இருந்து உங்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். முக்கியமாக நீங்கள் கண் தானம் செய்ய விரும்பியதை உங்கள் பெற்றோர் (அ) கணவன், மனைவி வீட்டில் இருக்கும் யாரிடமாவது தெரியப்படுத்த வேண்டும். ஒருவரின் இறப்புக்குப் பின்னரே அவரது கண்கள் தானம் செய்யப்படும். இதற்கென பயிற்சி பெற்ற மருத்துவர்களால் மட்டுமே கண்கள் எடுக்கப்படும்.

இறந்த ஒருவரின் கண்களைத் தானம் செய்ய விரும்பினால் அவர் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் அருகில் இருக்கும் கண் மருத்துவமனைக்குத் தெரியப்படுத்த வேண்டும். இவ்வளவே கண் தானம் செய்யும் முறை.

நடிகர்களின் பிறந்த நாளுக்கு ரத்ததானம் மற்றும் அன்னதானம் செய்யும் ரசிகர்கள் அப்படியே கண் தானமும் செய்ய முன்வந்தால் இருளே இல்லாத ஒளிமயமான எதிர்காலத்தை நாம் அனைவரும் எதிர்பார்க்கலாம். நடிகர்களின் பிறந்த நாளுக்கு மட்டுமின்றி தங்களுக்குப் பிடித்தமானவர்களின் பிறந்த நாளன்று கூட இந்தச் சேவையை நாம் செய்யலாம்.

இன்றே அதை செய்வோம் என உறுதி எடுப்போம். உயிர் கொண்ட உடல் பிரிந்தால் என்ன நம் கண்களாவது பிறர் வாழ்வில் ஒளியேற்றட்டுமே. கண் தானம் செய்வோம். இருளை நீக்கி வெளிச்சத்தைப் பரப்புவோம்.

- பா.ரஞ்சித் கண்ணன்.

SCROLL FOR NEXT