மதுரை
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் முதன்முறையாக மனநோய் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மனநோயாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட மனநல சிகிச்சைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமானது, ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாகக் கட்டணமில்லாமல் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.
ஆனால், இந்த சிகிச்சைத் திட்டத்தில், இதுவரை முழுக்க உடல் நோய்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளுக்கு மட்டுமே நோயாளிகள் பயனடைந்து வந்தனர். மனநோய்கள் சேர்க்கப்படாமல் இருந்தது.
இந்த நோய்க்கான மருந்துகளுக்கும், சிகிச்சைக்கும் அதிகம் செலவாகும். அரசு மருத்துவமனைகளில் இந்த மருத்துவத்திற்கான சிகிச்சை வசதிகள் போதியளவில் இல்லை. இந்த நோயாளிகள், சில தீவிரமான நோய்களுக்கு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப்பெற வேண்டிய உள்ளது.
அதனால், தனியார் மருத்துவமனைகளில் அதிகமான செலவாகுவதால் ஏழை, எளிய நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் இருந்தது. தற்போது மனநோய்கள் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் மனநோயாளிகளுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
என்னென்ன வகை மனநோயாளிகள் பயன் பெறலாம்?
இதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ஆட்டிசம் நோய் சேர்க்கப்பட்டது. அதனால், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்த நோய்க்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் நிதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக காப்பீட்டு திட்டத்தில் மனநோய் சேர்க்கப்பட்டுள்ளது.
மனச்சிதைவு நோய், பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) என்றழைக்கப்படும் இரு துருவ மன நோய், போதை பொருட்களால் ஏற்படும் மன நோய், மூளை நரம்பியல் நோய்களால் ஏற்படும் மன நலபாதிப்புகள், உடல் நல பாதிப்புகளால் ஏற்படும் மன நோய், மன வளர்ச்சி குறைபாடுள்ளவர்களுக்கு ஏற்படும் மனச்சிதைவுக்கு ஒத்த அறிகுறி நோய்கள் உள்ளிட்ட 6 மன நோய்கள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான தீவிர மன நோய்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை(electro convulsion) அவசியமாகிறது. இந்த சிகிச்சை நோயாளிகளுக்கு குறைந்தப்பட்சமாக 4 முதல் 6 முறையாவது வழங்க வேண்டும். மேலும், அதற்கு முன் மயக்க மருந்து கொடுக்க வேண்டும்.
ஸ்கேன், ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளும் எடுக்க வேண்டியுள்ளதால் மன நல சிகிச்சைக்கு செலவும் அதிமாகிறது. தற்போது இவை அனைத்தும் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மற்ற சிகிச்சைகள் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இருப்பதால் அதில் கிடைக்கும் நிதி மூலம், அந்தத் துறைகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிப்பணிகள் செய்வதற்கு ஏதுவாக இருந்தது. ஆனால், மனநல சிகிச்சை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படாமல் இருந்ததால் மனநலத் துறையை மேம்படுத்த முடியாமல் இருந்தது. தற்போது சேர்க்கப்பட்டுள்ளதால் காப்பீட்டுத் திட்டத்தில் வரக்கூடிய பண பலன்கள், இந்தத் துறையை மற்ற துறைகளுக்கு நிகராக மேம்படுத்த உதவியாக இருக்கும், ’’ என்றனர்.