வலைஞர் பக்கம்

‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று அந்தஸ்தை இழந்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கோட்டை விட்டதால் அவலம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம், தான் பெற்றிருந்த ‘ஐஎஸ்ஐ’ தரச்சான்று அந்தஸ்தை இழந்துள்ளது. ஒரு முறை வழங்கப்படும் ஐஎஸ்ஓ தரச்சான்று 3 ஆண்டு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்நிலையில், பஸ்நிலையத்தை புதுப்பொலிவுப்படுத்தி மீண்டும் ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்று பெற மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அடுத்து தமிழகத்தின் 2 வது மிகப்பெரிய பஸ்நிலையமாக மாட்டுத்தாவணி பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 2 1/2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். 725 வெளியூர்அரசுபஸ்கள், 140 தனியார்பஸ்கள், 160 மாநகரபஸ்கள், 26 மினிபஸ்கள்எனமொத்தம் 6 ஆயிரத்து 40 முறைபஸ்கள் 24 மணி நேரமும் வந்து செல்கின்றன.

இந்த பஸ்நிலையத்தை கடந்த 1999-ம் ஆண்டு மே 25-ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பஸ்நிலையம் திறந்தபோது பஸ்நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நிறைவாக இருந்தது.

பஸ்நிலையத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள், இலவச கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு தனிக் கழிப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, மின்விளக்கு வசதி, பஸ்நிலையத்தின் முன் பகுதியில் விசாலமான பார்க்கிங் வசதி இருந்தது.

பஸ்நிலையத்தின் முகப்புப்பகுதியில் பசுமை பூங்கா அமைத்து அதில், பயணிகளை கவரும் வகையில் பூஞ்செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் சிலைகள் அமைத்து அழகுப்படுத்தப்பட்டிருந்தன.

24 மணி நேர புறகாவல்நிலையம், 36 காமிராகள் கண்காணிப்பு மற்றும் சுகாதாரமான வளாகம் என்று பஸ் நிலையம் சுற்றுச்சூழல் பூங்காபோல் சிறப்பாக பராமரிக்கப்பட்டது.

அதனால், கடந்த 2007-ம் ஆண்டு தமிழகத்திலே முதல் முறையாக இந்த பஸ்நிலையம் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றிருந்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பஸ்நிலையம், பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமில்லாமல் நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டதால் தற்போது ‘ஐஎஸ்ஐ’ தரச்சான்று அந்தஸ்தை இழந்து நிற்கிறது. மாநகராட்சியும், பஸ்நிலையத்தை பராமரித்து, புதுப்பொலிவுப்படுத்தி மீண்டும் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு ஒரு இலவச கழிப்பிட அறை கூட இல்லை. அனைத்து கட்டண கழிப்பிட அறைகளாக உள்ளன. அவையும் சரியான பராமரிப்பு இல்லாமல் தூர்நாற்றம் வீசுவதால் மூக்கைப்பிடித்துக் கொண்டுதான் கழிப்பிட அறைகளுக்குள் நுழைய வேண்டியதாக உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கழிப்பிட அறை, இலவச கழிப்பிட அறைகளில் தண்ணீர் விநியோகம் செய்யாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

பஸ்நிலையத்தின் மேற்கூரை ஆங்காங்கே விரிசல் விட்டு மழைநீர் ஒழுகுகிறது. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் வரக்கூடிய பஸ்நிலையத்தில் திறந்த வெளியில் வைத்து உணவுகள் சமைக்கக்கூடாது. ஆனால், இங்குள்ள ஹோட்டல்கள், டீ கடைகளில் 24 மணி நேரமும் உணவுகள், பலகாரங்கள் திறந்த வெளியில் வைத்து சமைக்கப்படுகிறது.

சுகாதாரம் பேணப்படாததால் அதை வாங்கி சாப்பிடும் பயணிகளுக்கு செரிமாணக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. உறவினர்களை வழியனுப்ப வரும் பயணிகள், தங்கள் வாங்களை நிறுத்துவதற்கு பஸ்நிலையத்தில் பார்க்கிங் வசதியில்லை. பஸ்நிலையத்தின் முன் பகுதியில் உள்ள காலியிடம் இரண்டாக பிரித்து ஒரு பகுதி ஆட்டோ ஸ்டாண்டாகவும், மற்றொரு டாக்ஸி ஸ்டாண்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதில், காலி இடங்கள் இருந்தும், பஸ்நிலையத்திற்கு உறவினர்களை வழியனுப்ப வரும் பயணிகளின் வாகனங்களை நிறுத்த ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் அனுமதிப்பதில்லை.

பஸ்நிலையம் கடை வியாபாரிகள் ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டி முன்பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை நீட்டியுள்ளனர்.

முன்பகுதியில் மார்க்கெட் போல் பஸ்நிலையம் வளாகத்தை ஆக்கிரமித்து சிறு, குறு வியாபாரிகள் பழக்கடைகள் விரித்துள்ளனர். மழை பெய்தால், தண்ணீர் வழிந்தோட மழைநீர் வடிகால் அமைப்பு இல்லை. பஸ்நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகி இருளில் மூழ்கி கிடக்கின்றன. பஸ்நிலையத்தில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் 37 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன.

அதில் 17 காமிராக்கள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன. மற்றவை பழுதாகியுள்ளன. அதனால், பஸ்நிலையம் அசம்பாவித சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள் நடந்தால் அதன் பதிவுகளை பதிவு செய்ய முடியாது.

தாய்மார்கள் பாலூட்டும் அறை பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால் பெண்கள் உள்ளே செல்ல அச்சமடைந்துள்ளனர். பயணிகள் தாகத்திற்கு குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியில்லை. பஸ்நிலையங்களுக்கு பெரும்பாலும் ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமே வருகின்றனர். அவர்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஒட்டுமொத்தமாக பஸ்நிலையத்தில் இல்லாததால் ‘ஐஸ்ஓ’ தரச்சான்று பெற்ற பஸ்நிலையம் தற்போது உள்ளூர் சீர்குலைந்து அலங்கோலமாக காணப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஐஎஸ்ஓ தரச்சான்று பெற, மீண்டும் பஸ்நிலையத்தை மேம்படுத்த பல கோடி ரூபாய் செலவாகும். தற்போது மாநகராட்சியில் நிதிப்பற்றாக்குறை உள்ளது. ஸ்மார்ட் சிட்டி, அம்ரூட் திட்டத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் திட்டப்பணிகள் நடக்கின்றன. அந்த பணிகள் நிறைவடைந்தபிறகு மீண்டும் மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தை புதுப்பொலிவுப்படுத்தி ஐஎஸ்ஓ தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றனர்.

SCROLL FOR NEXT