“உங்கள் கதைகளுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என நினைத்து உண்டா?” எனக் கேட்ட நிருபரிடம் “எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? நான் ஒரு பெண்ணாயிற்றே!” எனச் சொல்லி கலகலவெனச் சிரித்தார் ஆலிஸ் மன்ரோ. 2013-ல் ஆலிஸ் மன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஆலிஸ் மன்ரோ, நோபல் பரிசு பெறும் முதல் கனடா நாட்டுப் பெண் மற்றும் உலகின் 13-வது பெண் ஆவார். ‘இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்தாளர்’ என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகை யான ‘அட்லாண்டிக்’ அவரைப் பாராட்டியது.
1931 ஜூலை 10-ல் கனடாவின் ஹியூரான் கவுன்ட்டியில் உள்ள சிறுநகரமான ஒன்டாரியோவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் ஆலிஸ். குழந்தைப் பருவம் முதலே வாசிப்பில் ஆர்வம் கொண்ட ஆலிஸைச் சிறுகதைகள் எழுதத்தூண்டியதும் ஒரு கதைதான். ‘ஒரு இளவரசன் மீது தீராக் காதல் கொள்ளும் ஒரு கடல் கன்னி, தன்னை முழுவதுமாக வருத்திக்கொண்டு மனித உருவெடுக்க முயல்கிறாள். ஆனால், கடைசிவரை ஒரு முழுமையான பெண்ணாக மாற முடியாமல் கடலில் இறந்து மிதக்கிறாள். துயரமாக முடிவடைந்த இந்தக் கதையை வாசித்த பிறகு, சிறுமி ஆலிஸ் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னையே அறியாமல் புனைவு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினார். தினமும் பள்ளிக்கு நெடுந்தொலைவு நடந்து செல்லும் அவரது மனதுக்குள் புதிய கதைகள் உதித்தன. யுவதியாக மாறியபோது தானே தன் கதைகளின் முக்கிய கதைமாந்தராக மாறினார்.
வாசிக்கத் தொடங்கிய சில மணித் துளிகளில் வாசகரைத் தன் கதைக் களத்துக்குள் இழுத்துச்செல்லும் புனைவுகள் அவர் பேனா நுனியில் பிறந்தன. 1950-ல் கல்லூரியில் படிக்கும்போது வறுமை காரணமாக உணவகத்தில் பரிமாறுபவராகவும் நூலகத்தில் எழுத்தராகவும் வேலைபார்த்தார். 1951-ல் மன்ரோ ஜேம்ஸைத் திருமணம் செய்து இல்லத்தரசியாக மாற, படிப்பு பாதியிலேயே நின்றுபோனது.
சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டாலும் 1968-ல்தான் “டான்ஸ் ஆஃப் ஹாப்பி ஷேட்ஸ்” என்ற தலைப்பில் ஆலிஸின் முதல் சிறுகதைத் தொகுப்பு புத்தக வடிவில் வெளியானது. கிராமப்புறங்களில் வாழும் சாமானியரின் வாழ்க்கைப் போராட்டங்களை அற்புதமாகப் பிரதிபலித்த அவரது கதைகள் வாசகர்களிடம் ஒரு புதிய அலையை ஏற்படுத்தின. ‘ஹூ டு யூ திங்க் யூ ஆர்?’ (1978), ‘தி மூன்ஸ் ஆஃப் ஜூபிடர்’(1982), ‘டூ மச் ஹாப்பினஸ்’(2009), ‘டியர் லைஃப்’ (2012) ஆகியவை இலக்கிய விமர்சகர்கள் ஆலிஸை ‘கனடியன் செக்காவ்’ எனப் பாராட்ட வைத்தன. இன்று 83-வது பிறந்த நாளைக் கொண்டாடும் மன்ரோ கடந்த 40 ஆண்டுகளில் ஏராளமான இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.