‘லிட்டில் மாஸ்டர்’ என்று அழைக்கப்படுபவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் மனோகர் கவாஸ்கர் (Sunil Manohar Gavaskar) பிறந்தநாள் இன்று (ஜூலை10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் (1949) பிறந்தவர். சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது மாமா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். அவர்தான் இவரது முதல் பயிற்சியாளரும்கூட.
l மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். பள்ளி நாட்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு ‘இந்தியாவின் பெஸ்ட் ஸ்கூல்பாய் கிரிக்கெட்டர்’ என்று பெயர் எடுத்தவர்.
l முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 1966-67ல் விளையாடத் தொடங்கினார். 1970-71ல் மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிராக ஆடச் சென்ற இந்திய அணியில் இடம்பெற்றார். காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. அடுத்த போட்டியில் களமிறங்கியவர் அபாரமாக ஆடி, 4 போட்டிகளில் 774 ரன் குவித்தார்.
l மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிராக 1975-76ல் நடந்த போட்டியின் 2, 3-வது டெஸ்ட்களில் 156 மற்றும் 102 ரன்கள் விளாசினார். இப்படி இவர் தொடர்ந்து அடித்த சதங்களும், அரை சதங்களும், ஒட்டுமொத்த ரன்களின் எண்ணிக்கையும் உலக சாதனையை நோக்கி முன்னேறிக்கொண்டே வந்தன. இந்திய அணியின் வெற்றிக்கும் உதவின.
l வேகப் பந்துவீச்சில் சிறப்பான ஆட்ட உத்திக்காக போற்றப்பட்டார். 1970 முதல் 1987 வரை மொத்தம் 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை உட்பட100 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
l 34 டெஸ்ட் சதங்களை அடித்த சாதனையாளர். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு இந்த சாதனையை யாரும் எட்டவில்லை. உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் வீரர். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் இவர்.
l ஆண்டுக்கு 1000 ரன் என 3 முறை சாதனை படைத்தவர். 18 வெவ்வேறு கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து 58 முறை பார்ட்னர்ஷிப் சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச் பிடித்த முதல் இந்திய ஃபீல்டர் (விக்கெட் கீப்பர்கள் தவிர்த்து), அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர். இவற்றில் பல சாதனைகள் இன்னும் எட்டப்படாமலே உள்ளன.
l கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுபெற்ற பிறகு, கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார். ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கிரிக்கெட் கமிட்டி தலைவராக பதவி வகித்தார். 2004-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக இருந்தார்.
l கவுரவமிக்கதாக கருதப்படும் மும்பை ஷெரீப் பதவியை 1994-ல் வகித்தார். பத்மபூஷண், அர்ஜுனா விருது, ‘கர்னல் சி.கே.நாயுடு’ வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
l ‘சன்னி டேஸ்’ என்ற சுயசரிதை மற்றும் கிரிக்கெட் சம்பந்தமாக பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.