மதுரை
காந்தியின் அரிய புகைப்படங்கள், தபால் தலைகளை சேகரித்து வைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற தாபால் ஊழியர் ஒருவர்.
‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’, ‘இன்ஸ்ட்ராகிராம்’ போன்ற நொடிப்பொழுதில் விரும்பியவர்களுக்கு விரும்பிய தகவல்களை கொண்டு செல்லும் ஹைடெக் தொழில்நுட்பம் வந்தாலும் தபால் அட்டை தகவல் பரிமாற்றத்தில் கிடைத்த சுவாரசியமும், பேரானந்தமும் தற்போது கிடைப்பது இல்லை.
மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்தோஷத்தையும், அழுகைகளையும் தாங்கி வரும் அந்த தபால் அட்டைகளை பொக்கிஷம் போல் தற்போதும் பாதுகாத்து வருவோர் இருக்கிறார்கள்.
அவர்களில் சற்று வித்தியாசமானவர் கோவையைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற தாபால் ஊழியர் ஹரிஹரன். இவர், காந்தியின் அரிய புகைப்படங்கள், தபால் தலைகளையும் சேகரித்து வைத்துள்ளார். அதில், தபால்துறை 1951-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தியின் 82-வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி படத்தைப்போட்டு வெளியிட்ட தபால் அட்டை முக்கியமானது.
இந்த தபால் அட்டை வெளியிடும்போது அதன் விலை 9 பைசாவாக இருந்துள்ளது. மற்ற தபால்கார்டுகளில் இருந்து இந்த தபால்கார்டு சற்று வித்தியாசமாகவும், பெரும் வரவேற்பையும் பெற்றதால் 1 ½ அனாவுக்கு விற்றார்கள். இந்த தபால் அட்டை கடந்த 68 ஆண்டாக பொக்கிஷம்போல் தபால்காரர் ஹரிகரன் பாதுகாத்து வருகிறார்.
அவர் கூறுகையில், ‘‘பொதுவாக நாட்டிற்காக பாடுப்பட்டவர்கள், பெருமை தேடித் தந்தவர்களையும் கவுரவிக்கும் வகையில் தபால்துறை அவர்கள் படத்தை போட்டு தபால்தலை வெளியிடுவார்கள். நாட்டின் விடுதலையை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதின் காரணமாக தேசத் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்திக்கு 87 நாடுகள், அவரின் படத்தைப்போட்டு தபால் தலைகளை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
நான் அறிந்தளவுக்கு சர்வதேச அளவில் வேற எந்த நாட்டின் தலைவருக்கும் இதுபோல் தபால்தலைகள் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் காந்தி படம் போட்ட தபால் அட்டை, இந்தியாவில் வேறு யாருக்கும் வெளியிடப்படவில்லை.
இந்த தபால் அட்டை இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நாசிக்கில் அச்சடிக்கப்பட்டது. இதேபோல், காந்தி, அவரது மனைவி கஸ்துரிபாயுடன் இருக்கும் தபால் கார்டு ஒன்றையும் மத்திய அரசு கடந்த 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியிட்டு கவுரவப்படுத்தியது.
இது இந்தியா வெளியிட்ட முதல் தம்பதி தபால் கார்டு என்ற பெருமையைப் பெற்றது. இதுபோன்று காந்தியைப் பற்றி அரிய தகவல்களையும், அவரது புகைப்படங்கள், தபால் தலைகள், தபால் கார்டுகளையும் சேகரித்து வைத்துள்ளேன், ’’ என்றார்.