வலைஞர் பக்கம்

இடம் பொருள் இலக்கியம்: 3- கலாப்ரியாவைக் கொண்டாடும் மீறல் இலக்கியக் கழகம்

செய்திப்பிரிவு

புதுச்சேரியை மையகமாகக் கொண்டு அற்புதமாகச் செயல்பட்டு வருகிறது ‘மீறல் இலக்கியக் கழகம்’. நவீன இலக்கியச் சூழலில் இயங்கி வரும் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க, பெருமைமிகு இலக்கிய மேடையாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

‘மீறல் இலக்கியக் கழகத்தின்’நிறுவனராகவும் அமைப்பாளராகவும் இருந்து இதனை முன்னெடுத்துச் செல்கிறார் கவிஞர் இளங்கவி அருள்.

‘மீறல் இலக்கியக் கழகம்’ நவீன இலக்கியத்தில் பெருமைக்குரிய படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை போற்றும் வகையில் - ஒவ்வோர் ஆண்டும் சீர்மிகு இலக்கியத் திருவிழாவை புதுச்சேரியில் கொண்டாடி வருகிறது.

தமிழ் படைப்புச் சூழலில் மீறல் விருதுக்கு என தனி மரியாதையும் கவுரவமும் உள்ளதை இவ்விருதை அவர்கள் தேர்ந்தெடுப்பதில் இருந்தும் அதைப் பெறுபவர்களையும் வைத்தே கணக்கிட்டு விடலாம். புரவலர்களை நாடாமல் தனது சொந்த நிதியைக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக ‘மீறலை’நகர்த்திச் செல்லும் கவிஞர் இளங்கவி அருளைப் பாராட்ட வேண்டும்.

இளங்கவி அருள்

இந்த ஆண்டு மீறல் இலக்கியக் கொண்டாட்டம் இன்று (22.9.2019) புதுச்சேரி - லப்போர்த் வீதியில் உள்ள பி.எம்.எம்.எஸ் அரங்கில் நடைபெறுகிறது.

இவ்விழாவின் முதல் நிகழ்வாக - மீறல் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. கவிஞர் வெண்ணிலாவுக்கு அவ்வை விருது (ரூ.10 ஆயிரம்), கவிஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கு கபிலர் விருது (ரூ.10 ஆயிரம்), கவிஞர் ஷாலின் மரியலாரன்ஸுக்கு பாரி விருது (ரூ.10 ஆயிரம்) வழங்கப்படுகிறது.

இவ்விழாவின் 2-வது நிகழ்வாக ‘கலாப்ரியா - 50’ எனும் படைப்புலக கொண்ட்டாட்டம் நிகழவுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியத்தில் தங்கத் தடம் பதித்து வரும் கவிஞர் கலாப்ரியாவை பெருமைப்படுத்துகிறது ‘மீறல்’

உருள் பெருந்தேர், காற்றின் பாடல், மறைந்து திரியும் நீரோடை, தண்ணீர்ச் சிறகுகள், பனிக்கால ஊஞ்சல், மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள், என் உள்ளம் அழகான வெள்ளித்திரை , சில செய்திகள் சில படிமங்கள் , பாதையெல்லாம் பூமுகம் காணுகின்றேன், பேனாவுக்குள் அலையாடும் கடல் ... உள்ளிட்ட பல நவீன படைப்புகள் மூலம் தமிழ் வாசகப் பரப்பில் நீள்கோடாக நீண்டு... வண்ண நதியாக வளைந்து சென்றுகொண்டிருப்பவர் கவிஞர் கலாப்ரியா.

கவிஞர் கலாப்ரியாவை - உச்சி முகர்ந்து கொண்டாடும் தித்திக்கும் இத்திருவிழாவில் - வண்ணதாசன் தலைமையில்... பி.என்.எஸ்.பாண்டியன் முன்னிலையில்...கலாப்ரியாவுக்கு மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயண வாழ்த்துரை வழங்கவிருக்கிறார். மேலும் பா.ஜெயப்பிரகாசம், இளங்கோ கிருஷ்ணன், அந்திமழை அசோகன், எழுத்தாளர் ஆத்மார்த்தி ஆகியோர் கலாப்ரியாவின் பெருமைமிகு படைப்புகளைப் பற்றி அழகுற உரை நிகழ்த்தவுள்ளனர். நிகழ்ச்சியில் கலாப்ரியாவின் கவிதைகளும் வாசிக்கப்படவுள்ளன. திருச்சி கு.இலக்கியன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

மீறல் இலக்கிய திருவிழாவின் அழைப்பிதழில் - இந்நிகழ்ச்சியில் இசை வழங்குபவர், சிற்றுண்டி வழங்குவோர், மதிய உணவு வழங்குவோர், நிகழ்ச்சியை அழகுறப் புகைப்படமாக எடுக்கவுள்ள கவிஞர் அய்யப்ப மாதவன், நிகழ்ச்சியை படம்பிடிக்கவுள்ள சுருதி டி.வி. கபிலன் ஆகியோரது பெயர்களையும் பதிவு செய்திருப்பது சிறப்பு.

மீறல் விழா இலக்கியச் சாரல் விழாவாக சிறப்புறத் திகழ... 'இந்து தமிழ் திசை' பெருமையுடன் வாழ்த்துகிறது.

- மானா பாஸ்கரன், எழுத்தாளர். புத்தனின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை, அன்ரூல்டு நோட்டு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: baskaran.m@hindutamil.co.in

SCROLL FOR NEXT