வலைஞர் பக்கம்

இடம் பொருள் இலக்கியம்: 2 பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை

செய்திப்பிரிவு

தஞ்சை மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு. அந்த பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றுதான் தஞ்சை வாசன் என்கிற பெயரும். தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இலக்கிய விழாக்கள் தோரணம் கட்டிய 90-களில் தஞ்சை சீனிவாசன் என்கிற பெயரில் இந்த கவிஞன் ராஜாளிப் பறவையைப் போல தனது கவிதைச் சிறகால் வான் அளந்தான்.

சுறுசுறுவென்று சுழலும் தரைச்சக்கரமாய் தஞ்சை பூமியெங்கும் சுற்றிச் சுற்றி வந்து கவிதை வார்த்த இந்தக் கவிஞன்… இயல்பிலேயே நகைச்சுவை உணர்வும் புதுக்கவிதையின் உச்சம் தொட்டு சிலிர்க்கும் மொழியழகும் கொண்டவர். அந்நாட்களில் அவர் அஞ்சல் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நண்பர்களுக்கெல்லாம் சாயங்கால நேர சடையப்ப வள்ளலாவார். அவர் வாங்கித் தந்த தேநீரின் இனிப்பு இன்னமும் நெஞ்சில் இருக்கிறது. தஞ்சை தமிழ்த்தாய் பேரவை, தஞ்சை பிரகாஷின் இலக்கியச் சங்கமம், சும்மா இலக்கியப் பேரவை போன்றவற்றில் தன்னை இணைத்துக்கொண்டு இலக்கியம் விதைத்தவர். தஞ்சையில் பேச்சாளர் இரா.செழியன், கவிஞர்கள் சுகன், வெற்றிப்பேரொளி, கவிஜீவன், புத்தகன், விஜயகுமார், ரவிராஜ், சாலியமங்கலம் சபாபதி, பாபநாசம் மணிமுடி, இளங்கோ, தியாக ஜோதி ராமலிங்கம், ஏழைதாசன்(இன்று பேராசிரியர் மாதவன்) இவர்களோடு தோளோடு தோள் நின்று தமிழில் பாசப் பாசனம் செய்தார் கவிஞர் வாசன்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருவாரூருக்கு கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின் வீட்டுக்கு வந்துவிடுவார். நண்பர்கள் ஜமா கூடிவிடுவோம். எழுத்தாளர் ராஜகுரு, எஸ்.ராஜகுமாரன், பையூர் பாநலவேந்தன், மருதவாணன், கனகராஜன், காட்டூர் கவிதாசன், பாட்டரசர் பாலைக்கண்ணன், மானா பாஸ்கரன், திருவாரூர் குணா, நீதிதாசன் என்று ஆரூர் தமிழ்நாடனின் வீட்டில் இலக்கிய தடபுடல்தான். விடிய விடிய தமிழ் நெய்திருப்போம். மகிழ்ந்திருப்போம். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து திருவாரூரில் தங்கிவிட்டு பிரியவே மனமின்றி தஞ்சைக்குப் பேருந்து ஏறுவார். அவருடன் நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் பல மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறோம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டில் அந்நாளைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து கவிதைக்கான இரண்டாவது பரிசினைப் பெற்றிருந்தார் வாசன். கர்வமோ, பொறாமையோ இல்லாத அன்பின் நிழலாக வாழ்ந்தவர்.

90-களின் பிற்பகுதியில் சென்னை வந்த கவிஞர் வாசன்… கோடம்பாக்கத்தின் கதவுகளை தனது தங்கத் தமிழால் தட்ட ஆரம்பித்தார். மெல்லத் திறந்தது அவருக்கான கதவு. ஆம். ‘ஆஹா’ படத்தில்

'முதன்முதலில் பார்த்தேன்,

காதல் வந்ததே...

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே...

என்னில் இன்று நானே இல்லை,

காதல் போல ஏதும் இல்லை...'

என்ற பாடல்தான் வாசனுக்கு முகவரி தந்த முதல் பாடல். இப்போது, 40-ஐ தாண்டிய அனைத்து தமிழர்களின் நேயர் விருப்பமாக இருக்கும் பாடல் அது. தனது எளிமையான அழகியல் வரிகளால் 150 பாடல்களுக்கும் மேல் எழுதி புகழின் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தார் வாசன்.

'பூந்தோட்டம்' என்ற படத்தில்…

'சுட்டும் விழிச் சுடர் பார்த்து

மனம் கெட்டதைச் சொல்லட்டுமா...

கொட்டும் பனித் துளி கூட

என்னைச் சுட்டதைச் சொல்லட்டுமா...

கம்பனிடம் கடன் கேட்டுக்

கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா...’ என்றெழுதி ரசிகர்களைக் கவர்ந்தார் வாசன்.

அப்போது 'ஆனந்த மழை' என்கிற பெயரில் ஒரு படம் வெளிவந்தது. இது 'தோழி பிரேமா' என்ற தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படம். இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் நெய்தவர் வாசன்தான். 'ஆனந்த மழை' படத்தில் வாசன் வைத்த பாட்டுப் பந்தியின் சுவை புதிதாக இருந்தது.

அப்படத்தில் அவர் எழுதியிருந்த

'உறவொன்று என்னை உரசியதே

உதடுகள் மௌனம் உளறியதே

முதல் மழையின் ஒரு துளி தீண்டி,

உயிர் தரை நனைகிறதே...'

என்ற வரிகளை மொண்டு வந்த அந்தப் பாடல் தமிழ் ரசிகர்களின் இதயத்தை நனைத்தது.

வேகவேகமாய் வளர்ந்து வந்த… கவிஞர் வாசன் தமிழ் திரையிசை ரசிகர்களின் நெஞ்சில் சோகம் படரச் செய்து… கண்ணீர் சிந்த வைத்து உடல்நலக் குறைவால் 1998-ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று மரணமடைந்தார்.

வண்ணம் கொண்ட தனது மொழிக் குடையால் தமிழுக்கு நிழல் விரித்த இந்தக் கவிஞன் காலமானது மின்சாரக் கவிஞன் பாரதியின் பிறந்த நாள் அன்று என்பது இந்த சோகத்திலும் உற்றறிய வேண்டிய ஒரு தகவலாகும்.

அமரர் கவிஞர் வாசன் நூல்கள் வெளியீடு:

கவிஞர் வாசன் அறக்கட்டளையும், தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியகள் சங்கமும் இணைந்து பாடலாசிரியர், அமரர் கவிஞர் வாசனின் ‘பூமிக்கு வெளியே’ என்ற கவிதை நூலையும், ‘ கவிஞர் வாசன் -100’ என்ற திரையிசைப் பாடல் தொகுப்பினையும் இன்று (21.9.2019) வெளியிடுகின்றனர். இதற்கான விழா - சென்னை – சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்க நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர் தமிழமுதன் மற்றும் கவிஞர் வாசனின் சகோதரி கற்பகவள்ளி துரைராஜ் ஆகியோரது அருமையான முயற்சியில் நடைபெறும் இவ்விழாவில் கவிஞர் அறிவுமதி, கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், நடிகர் பேரரசு, கவிஞர் பிறைசூடன், வெற்றித் தமிழ் பேரவையின் மாநில துணைப்பொதுச் செயலாளர் இரா, செழியன் முன்னிலை வகிக்க, நூலை கவிஞர் மு,மேத்தா வெளியிடுகிறார். இயக்குநர்கள் எழில், ஆர்.கே.. செல்வமணி, மு.களஞ்சியம், ஆர்.வி..உதயகுமார், கவிஞர் ராசி அழகப்பன், கவிஞர் கோ.வசந்தகுமாரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

- மானா பாஸ்கரன், எழுத்தாளர். புத்தனின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை, அன்ரூல்டு நோட்டு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: baskaran.m@hindutamil.co.in

SCROLL FOR NEXT