நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் சிறந்த பத்திரிகையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) பிறந்த தினம் இன்று (ஜூலை 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் ஓக் பார்க் நகரில் (1899) பிறந்தார். தந்தை மருத்துவர். தாய் இசைக் கலைஞர். வேட்டை, மீன்பிடி தொழில் கற்றார். பள்ளியில் படிக்கும்போதே, பள்ளி இதழில் விளையாட்டுச் செய்திகளை எழுதிவந்தார். பட்டப் படிப்பு முடித்ததும், ‘கான்சாஸ் சிட்டி ஸ்டார்’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்தார்.
l முதல் உலகப்போரின்போது இத்தாலி ராணுவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்தார். இவரது சேவைக்காக இத்தாலியன் வீர சாகச பதக்கம் வழங்கப்பட்டது. போரில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட காதல் தோல்வி அனுபவம், பின்னாளில் ‘எ வெரி ஷார்ட் ஸ்டோரி’ என்ற நூலுக்கு அடிப்படையாக அமைந்தது.
l உடல்நலம் தேறியதும் அமெரிக்கா திரும்பினார். ‘டொரன்டோ ஸ்டார்’ பத்திரிகையில் பணிபுரிந்தார். பாரீஸ் சென்று, ‘ஸ்டார்’ பத்திரிகையின் வெளிநாட்டு செய்தியாளராகப் பணியாற்றினார்.
l சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1929-ல் மீண்டும் அமெரிக்கா திரும்பியவர், புளோரிடாவில் குடியேறினார். இங்குதான் ‘எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ நூலை எழுதி முடித்தார். இது மிகவும் பிரபலமாகி, இலக்கிய உலகில் இவருக்கு நிரந்தர இடம் பெற்றுத்தந்தது.
l எழுதுவதுபோலவே, சாகசச் செயல்களிலும் அதிக நாட்டம் கொண்டவர். எழுதாத நேரங்களில் ஸ்பெயின் நாட்டின் காளைச் சண்டை, புளோரிடாவில் ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற பல சாகச செயல்களில் ஈடுபட்டார்.
l ‘ஃபார் ஹும் தி பெல் டோல்ஸ்’ என்ற நாவலை 1940-ல் எழுதினார். இது புலிட்சர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2-ம் உலகப்போரின்போது, போர்முனை செய்தியாளராகப் பணிபுரிந்தார். ‘தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ’ நாவலை 1951-ல் எழுதி உலகப் புகழ் பெற்றார். இதற்கு புலிட்சர் விருது கிடைத்தது. இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1954-ல் பெற்றார்.
l சிலமுறை சாகசங்களின்போது காயமடைந்தார். ஓரிருமுறை விமான விபத்தில் இருந்தும் உயிர்தப்பினார். இதனால் உடலும் மனமும் பலவீனமடைந்தன. மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.
l பாரீசில் தனது அனுபவங்கள் குறித்து ‘எ மூவபிள் ஃபீஸ்ட்’ என்ற நினைவுக் குறிப்பை எழுதினார். தனித்துவமான எழுதும் பாணி, குறைந்த சொற்பிரயோகம் ஆகியவற்றால் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
l இவரது பாத்திரப் படைப்பு விசேஷமானது. இவரது பல பிரபலமான நூல்கள் தமிழ் உட்பட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
l பெரும்பாலான படைப்புகள் அமெரிக்க செவ்விலக்கிய நூல்களாக கருதப்படுகின்றன. 7 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், 2 அபுனைவு (non-fiction) நூல்கள், மறைவுக்குப் பிறகு 3 புதினங்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 20-ம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எர்னஸ்ட் ஹெமிங்வே 62 வயதில் (1961) தற்கொலை செய்துகொண்டார்.