சுபஸ்ரீயின் அகால மரணம் நேற்றிலிருந்து மனதைப் பிசைந்துகொண்டிருக்கிறது. அந்த விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் என்னுடைய வீடு இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை. தினமும் அந்தச் சாலை வழியாக என் பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாலா என்றும் தெரியவில்லை. எல்லோரையும் போலவே அந்த மரணத்தை அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.
இன்று காலை 8 மணிக்கு வழக்கம்போல பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது விபத்து நடந்த இடத்தைக் கடக்கும்போது மனம் கனத்தது. ஒரு விபத்தும் மரணமும் நிகழ்ந்ததற்கு அத்தாட்சியாக லாரி டயரின் அழுத்தமான தடம் சாலையில் பதிந்திருந்தது. இறந்துபோன சுபஸ்ரீயின் காலணிகள் சாலையின் ஓரமாகக் கிடந்தன. போலீஸும் செய்தியாளர்களும் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர். வழக்கம்போல அந்தச் சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன.
விபத்து நடந்த பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை என்பது ஈசிஆர் சாலையையும் ஜிஎஸ்டி சாலையையும் இணைக்கும் ஒரு சாலை. இதை ‘மரண சாலை’என்று நிச்சயம் சொல்லிவிடலாம். இந்தச் சாலையில் அதிகபட்ச வேகம் என்று வேக வரம்பு என்னவோ 40 கி.மீ.தான். ஆனால், அந்தச் சாலையில் பயணிப்போர் எல்லோருமே சாகசம் செய்துகொண்டுதான் வாகனத்தை ஓட்டி வருவார்கள். ஒவ்வொரு வண்டியும் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் சீறிப் பாய்ந்து வரும்.
விபத்து நடந்த சாலை
அந்தச் சாலையைக் கடப்பதும் அத்தனை எளிதல்ல. அதுவும் ‘பீக் ஹவர்ஸ்’என்று சொல்லப்படும் நேரத்தில் சாலையைக் கடக்க நிச்சயம் பொறுமை தேவை. சற்று கவனம் சிதறினாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சாலை. அதுமட்டுமா..? மாநில நெடுஞ்சாலையில் இச்சாலை வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அந்தச் சாலையில் எங்குமே வேகத் தடையைப் பார்க்க முடியாது. சுபஸ்ரீ இறந்த இடத்துக்கு அருகே ஒரு பள்ளிக்கூடமும் இருக்கிறது. வழக்கமாக எல்லாப் பள்ளிக்கூடத்துக்கு வெளியேயும் உள்ள சாலையில் வேகத்தடையைப் பார்ப்பதுபோல இங்கே எதுவும் கிடையாது.
ஒரு வேளை வேகத் தடை இருந்திருந்தால், அந்தச் சாலையில் வழக்கமாக வாகனம் ஓட்டிப் பழகியவர்களுக்கு இயல்பாகவே வேகத்தைக் குறைக்கும் ஆறறிவு வேலை செய்திருக்கும். வேகத் தடை இல்லாமல் போனதும் பெரும் சோகம்தான். அண்மைக்காலமாக துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலையில் திருமண மண்டபங்களும் பார்ட்டி ஹால்களும் பெருகிவிட்டன. குறிப்பாக அந்தச் சாலையில் பள்ளிக்கரணை பகுதியில் அதிகரித்துவிட்டன. அரசியல் கட்சியினர் பெரும்பாலும் இந்தச் சாலையில் உள்ள திருமண மண்டபங்களிலும் அருகே உள்ள கோவிலம்பாக்கத்திலும் இல்லத் திருமணங்களை நடத்துகிறார்கள். அதைக் குறை சொல்ல முடியாது.
சாலையில் கிடந்த சுபஸ்ரீயின் காலணி
ஆனால், ஏற்கெனவே சாகசம் செய்து வாகனம் ஓட்டும் இந்தச் சாலையில் கவனச்சிதறலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்களுக்குப் பஞ்சமே இல்லை. வாரத்தில் 2 தினங்களாவது விதவிதமான பேனர்களை இந்தச் சாலையில் பார்த்துவிடலாம். அதுவும் சென்டர் மீடியன் நெடுக பேனர்கள். அதற்கென்றே ஒரு விஷேசமான அமைப்பை வைத்துக் கொடிகளை நடுவது, பேனர்களை வைப்பது என அலப்பறைகளுக்கு அளவே இல்லை. அப்படி விளம்பரப் பித்து பிடித்து ஓர் அரசியல்வாதியால் வைக்கப்பட்ட ஒரு பேனர்தான் இன்று சுபஸ்ரீயின் உயிரைக் காவு வாங்கிவிட்டது.
அதிமுக (பிளக்ஸ் வைக்கும் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்) பிரமுகரின் வாரிசு திருமணத்தால், இன்று யாரோ ஒரு வீட்டு வாரிசு உலகில் இல்லை. கோவையில் ரகு, சென்னையில் சுபஸ்ரீ. அடுத்து..? இன்னும் எத்தனை நாளைக்கு கடந்து போகப் போகிறோம்?