சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ ரவி மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் காயமடைந்த சுபஸ்ரீ மரணமடைந்தார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களையும், கொடிகளையும் வைக்கக் கூடாது என்று கட்சித் தலைவர்கள் பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சுபஸ்ரீ மரணத்துக்குக் காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று #WhoKilledShubashree என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Mustaffa
நேற்று ரகு
இன்று சுபஸ்ரீ
நாளை நீயா நானா?
Kavin
பேனர் சாய்ந்து உயிர்கள் பலியாவதில் சுபஸ்ரீ கடைசியாக இருக்கட்டும். இனியும் இது தொடரக்கூடாது.
ஜிம்பலக்கடி பம்பா
சில பேரின் அலட்சியம்னால எத்தன பேரோட உயிர் போகுது இந்த நாட்டுல. தெரியாம நடக்கலாம் ஆனால் எத்தனை தடவை?
உங்களைத் திருத்தவே முடியாது.. #சுபஸ்ரீ
கோ. கார்த்திக் பாரதி
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சி பேனர்கள், கொடிகள் வைக்க கடுமையான தடைச் சட்டம் இருப்பதை நிரந்தரமாக்க வேண்டும். இனி பேனர் வைக்க மாட்டோம் என்று அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் நிலையானவை அல்ல!
என்று தான் ஒழியும் அரசியல்வாதிகளின் இந்த விதிமுறைகளை அத்துமீறும் விளம்பர பேனர் மோகம்? இவர்கள் வெட்டி விளம்பர மோகத்திற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?
சட்டங்கள் சாமனியர்களுக்கு மட்டுந்தானா?
∂ιηєѕн кυмαя м
ஒவ்வொரு விழிப்புணர்விற்கும், விபத்து எச்சரிக்கைக்கும் ஓர் உயிர் தேவைப்படுகிறதா ?
Guru
பேனர் மட்டுமல்ல, ரோட்டில் பூசணிக்காய் உடைப்பது, பட்டாசு வெடிப்பது, ஊர்வலம் போவது, குறிப்பாக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் போக்குவரத்துக்கு இடையூறு செய்வது என அனைத்தையும் நிறுத்த வேண்டும்.
Indiavaasan
சுபஸ்ரீ சாவுக்குக் காரணமான பேனர் வைத்ததே நீதிமன்ற அவமதிப்பு என்று ஏன் எந்தக் கட்சியும் வழக்குத் தொடரவில்லை? தானும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சம்தானே காரணம்?
Jôshuâ manî Jç
எத்தனை கனவுகளோ..எத்தனை ஆசைகளோ...எல்லாம் மண்ணாய்ப் போனது... அதிமுகவினரின் பேனர் மற்றும் கட்அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
N Vasanthakumar
கடந்த 10.01.2019 அன்று இரவு நானும், அப்பாவும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது வீட்டின் அருகிலேயே அரசியல் கட்சி கொடியினை மின் கம்பத்தில் கட்டிவிட்டு ஏணியுடன் இறங்கிய முதியவர் ஒருவர் நாங்கள் வருவதைக் கவனிக்காமல் ஏணியைத் திருப்பிய போது நாங்கள் சென்ற வண்டியில் ஏணி இடித்து நானும் அப்பாவும் தஞ்சை- கும்பகோணம் மெயின் ரோட்டின் நடுவில் சென்று விழுந்தோம். அந்த நிமிடத்தில் ஒரு பேருந்தோ, லாரியோ வந்திருந்தால் இன்று இந்தப் பதிவைப் போட நான் இருந்திருக்க மாட்டேன். அப்பாவுக்கு காயத்தையும், எனக்கு காலில் எலும்பு முறிவையும் ஏற்படுத்தியது அந்த விபத்து.
விபத்து நடந்த அடுத்த ஆறு மாதம் எந்தச் செயல்பாடுகளும் இன்றி, சில லட்சம் செலவு செய்து, வியாபாரத்தை இழந்து, குடும்ப நிம்மதியை இழந்து, பிறந்த ஐந்து மாதமான குழந்தையுடன் இருக்கவேண்டிய மகிழ்ச்சியை இழந்து , தற்போது வரை உடல்நிலையில் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், வியாபாரத்தில் சிக்கல் என பல சோதனகளைக் கடந்து வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த நபர் ஆறு மாதம் வேலைக்குச் செல்லவில்லை என்றால் அவரின் பொருளாதார நிலை??!!
இப்போது வரை சரியாக நடக்க முடியவில்லை. உடல் உபாதைகள், ஓய்வு தேவை, துணையின்றி வெளியில் செல்லமுடியாது என என் வாழ்க்கை மாறியுள்ளது.
ஒரு சின்ன விபத்துதான் இன்று என் நிலைமையை மாற்றியுள்ளது.
நேற்று சென்னையில் சுபஶ்ரீ மரணம் இது போன்ற ஒரு “விபத்து” ??? விபத்து என்று மட்டும் சொல்லிவிட முடியாது.
கடந்த மாதம் சுவாமி மலை அருகில் திருமணத்திற்கு பேனர் வைக்க இரு இளைஞர்கள் மின் கம்பத்தில் ஏற, மின்சாரம் பாய்ந்து அவர்கள் பலியாகினர். அவசியத் தேவையாக உள்ள இடங்களில் பேனர் வைப்பதை தவறாகச் சொல்லவில்லை. ஆடம்பரமாகவும், கவனக்குறைவாகவும் வைக்கும் பேனர்கள், கொடிகள் பலர் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும். அதில் நானும் ஒருவன்.
தற்போது இந்த விபத்தால் என் மகளை என்னால் முதுகில் அமர்த்தி யானை சவாரி செய்யமுடியாது. ஆடம்பரம் உங்களுக்குத் தரும் மகிழ்ச்சியைவிட, என்னுடைய இந்த யானை சவாரி மகிழ்ச்சி கோடி மடங்கு பெரிது.
போதும்.