வலைஞர் பக்கம்

’ஜங்க் ஃபுட்’ ஆபத்து; தீராத மலச்சிக்கல் - ஓர் உஷார் ரிப்போர்ட்

செய்திப்பிரிவு

ஜெமினி தனா
ஆரோக்கியமாய் இருக்கும்  உடலில்  திடீரென சிக்கல்கள் வந்தால் படுகிற அவஸ்தையை ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியாது. வலிகளைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால்  வயிற்றில் இருக்கும் சுமையை இறக்காமல் ஒருநாள் கூட இருக்கமுடியாது. அதனால்தான் இதை காலைக்கடன் என்கிறோம். இந்த ஒரு சிக்கல் ஓராயிரம் சிக்கலைக் கொண்டு வந்து இடியாப்பச்சிக்கலை உண்டாக்கிவிடும். மலச்சிக்கல்... இது வந்தால் மனச்சிக்கலும் வந்துவிடும் என்பது பழமொழி. 
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி 24 மணி நேரத்துக்குள் கழிவுகள் வெளியேற வேண்டும்.  சிலர் காலை எழுந்ததும் மலம் கழிப்பார்கள். இன்னும் சிலர் டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கவே தோன்றும் என்பார்கள். இன்னும் சில ஆண்கள் புகைப்பிடித்தால்தான் மலம் முழுமையாக வெளியேறும் என்றும் சொல்வது உண்டு. ஆனால் நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை மலம் கழித்தாலும், இரண்டு நாளைக்கு ஒரு முறை கழித்தாலும் அது மலச்சிக்கல் பிரச்சினை கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்..
தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை மலம் கழிக்காமல் இருப்பது,  தொடர்ந்து இறுக்கமாகவே மலம் கழிப்பது, மலம் கழிக்கும் போது ஆசனவாயை அடைத்துக்கொள்வது, சிக்கலாக மலம் வெளியேறுவது, மலம் கழித்த பின்பும் வயிறு அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு இவை எல்லாமே மலச்சிக்கலுக்கான அறிகுறி. மருத்துவரிடம்  செல்வதே நல்லது. 
மலச்சிக்கல் இல்லாத  காலம்:
கடுமையான உழைப்பு, உழைப்புக்கேற்ற செரிமானமாகும் சத்துமிக்க உணவு முறை இவைதான் நமது மூதாதையர்களை ஆரோக்கியமாக வைத்திருந்தது. குறித்த நேரத்தில் உணவு முடித்து உறங்கச் சென்று அதிகாலை நீராகாரம் குடித்த பிறகு அவர்களது பயணம் கழிவறை இல்லாத பொட்டல் காடுகளை நோக்கி நடையாகவே இருக்கும். இதனால் மலம் இளகி முழுமையாக வெளியேறி நாள் முழுவதும் மந்ததன்மையின்றி சுறுசுறுப்பாக இயங்கினார்கள். 
வயிற்றில் இருக்கும் கழிவு, பூச்சிகளை வெளியேற்ற ஆறுமாதங்களுக்கு ஒரு முறை பேதி உருண்டை, பேதிக்கீரை, வேப்பம்பூ உருண்டை, விளக்கெண்ணெய் கலந்த நீராகாரம் என ஏதேனும் ஒன்றை குடிப்பார்கள். இதனால் வயிறு சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்சினையே இல்லாத அவர்களது வாழ்க்கை மிக ஆரோக்யமாகவே இருந்தது.
 காரணம் என்ன:
இப்போது வயது பேதமின்றி அனைவரும் வாழ்வில் அடிக்கடி இந்தப் பிரச்சினையைச் சந்தித்துவிடுகிறார்கள். மாறிவரும் உணவு பழக்கங்கள்தான் இதற்கு முதல் காரணம் என்று நிச்சயமாகச் சொல்லலாம். நார்ச்சத்து மிக்க காய்கறிகள், பாரம்பரியமிக்க சிறுதானியங்கள், பழங்கள் முதலானவற்றைத் தவிர்த்து நவீன உணவுகளின் பிடியில் சிக்கியதாலேயே மலச்சிக்கலிலும் சிக்கத் தொடங்கிவிட்டோம். 
அடுத்தது உடல் உழைப்பு. உட்கார்ந்தபடி உடல் உழைக்காமல் இருப்பவர்களுக்கு உரியநேரத்தில் செரிமானம் ஆகாததால் இந்தப் பிரச்சினை உண்டாக வாய்ப்புண்டு. போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது, அவசர அவசரமாக அரை குறையாக மலம் கழிப்பது, மூட்டுவலி இருப்பவர்கள் இந்திய முறைக் கழிப்பறையில் உட்காருவதற்கு சிரமப்பட்டு மலத்தை அடக்குவது என்று  தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல் தேடி வரும். 
காய்ச்சல், பசியின்மை, பயணங்களினால் உண்டாகும் அலைச்சல்களின் போது உடலுக்கு போதிய நீர்ச்சத்து கிடைக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். அதேநேரம் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலும் தைராய்டு, நீரிழிவு, குடலிறக்கம், தண்டுவடப் பிரச்சினைகள், பித்தப்பையில் உண்டாகும் கற்கள், குடல் வீக்கம், குடல் பாதிப்பு, ஆசன வாயில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் இருக்கும் போது அவற்றை உணர்த்தும் வகையில் அறிகுறியாக மலச்சிக்கல் ஏற்படுவதும் உண்டு.  
கர்ப்பிணிகள் மலச்சிக்கலை நிச்சயம் சந்திப்பார்கள். இவை தற்காலிக பிரச்சினையே. கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவதால் மலச்சிக்கல் உண்டாகலாம். மன அழுத்தம், உறக்கமின்மை குறித்த பிரச்சினைகளைக் கொண்டவர்களுக்கும் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்புண்டு.  
 அதிகமானால் சிக்கலே:
உடல் உஷ்ணம் அதிகமாக இருந்தாலோ, போதிய நீர்ச்சத்து பற்றாக்குறையாலோ  தொடர்ந்து நான்கு நாள்கள் அல்லது ஒருவாரம் வரை  மலச்சிக்கல் இருந் தால் பிரச்சினையில்லை. ஆனால் தொடர்ந்து  இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால்  மலம் இறுகி வெளியே வர சிரமப்படும் போது  ஆசன வாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும்.  மலத்தில் ரத் தம் கலந்து வெளியேறும். சிலருக்கு மலத்தில் சீழ் அல்லது சளி வெளியேறும். அதைத் தொடர்ந்து  செரிமானக் கோளாறுகள்,  வாயுத்தொல்லை, வயிறு உப்பசமாக இருப்பது, சிறுநீரக பிரச்சினை, மயக்கம் போன்ற நிலைகள்  உண்டாகவும் வாய்ப்புண்டு.
மலம் கழிக்கும் போது ஆசனவாயில் தாங்கமுடியாத வலியும், வயிற்றில் கடுமையான வலியும் உண்டாகும். உண்ட உணவு செரிமானமாகாமல் இருப்பதோடு பசியின்மையும் ஏற்படும். ஒவ்வாமை, காய்ச்சல், தலைவலி போன்ற உபாதைகள் அதிகமாகும். மேலும் மேலும் மலச்சிக்கல் அதிகரித்தால் மூலநோயில் கொண்டு வந்து நிறுத்தும் என்பதால் நிச்சயம் ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
சுய வைத்தியங்கள்:
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதமான சிகிச்சையையும் மருத்துவரின் ஆலோசனையோடு செய்வதே நல்லது. சிலர் மலம் இறுக்கமாக கழிகி றது என்று கடைகளில் மலச்சிக்கலுக்கான மாத்திரைகள், பேதி மாத்திரைகள் என்று வாங்கி சாப்பிடுவார்கள். எப்போதாவது என்றால் பரவாயில்லை. ஆனால் அவ்வப்போது என்றால் இது பெருங்குடலில் பாதிப்பை ஏற்படுத்தி உட லில் சோர்வை உண்டாக்கும்.
சிக்கலை உண்டாக்கும் உணவு வகைகளைத் தவிருங்கள்:
ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள், மசாலாக்கள் நிறைந்த உணவுகள், மைதாவால் செய்யப் பட்ட உணவு, பேக்கரி வகைகள்,  இனிப்புகள், கொழுப்பு நிறைந்த உணவுகள்  அதிகம் எடுத்துக்கொள்வது கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் முதல் உளவியல் நிபுணர்கள் வரை அனை வருமே வலியுறுத்துகிறார்கள். மருத்துவ ஆய்வுகளும் இதை உறுதி செய்கின் றன. குழந்தைகளுக்கும் அளவாக கொடுப்பது பாதிப்பை உண்டாக்காது.
மலச்சிக்கலைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
முதலில் உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஐங்க் புட் வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. நடைபயிற்சியோடு தினசரி 3 லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியம்.
 உணவில் நார்ச்சத்து மிக்க முழு தானிய உணவு வகைகளான கோதுமை, கேழ்வரகு, கீரைவகைகள், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைப் பழம், முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், அவரைக் காய் போன்ற காய்கறிகள், ஆப்பிள், மாதுளை, கொய்யா, மாம்பழம், பேரீச்சம் பழம், வாழைப்பழம், உலர் திராட்சை போன்ற பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 
பழச்சாறுகளுடன் போதிய நீர், மோர், இளநீர், மிதமான வெந்நீர், என திரவ ஆகாரங்களை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் அரைமணி நேர உடற் பயிற்சி மேற்கொள்வதும், உடல் உழைப்பை அதிகரிக்க  செய்வதும், மனதை இலேசாக வைத்துக்கொண்டு மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வதும் மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
மலச்சிக்கல் இல்லையென்றால் மனச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது மிக மிக எளிது.   
 

SCROLL FOR NEXT