படம் பார்க்கும் முன் படிக்க...
காலையில் பெருமாள் கோயிலில் பாடப்படும் பாடல்தான் நம் கதாநாயகனை எழுப்பி விடுகிறது. சிரமப்பட்டுக் கண்விழித்து, பல் துலக்கி, குளித்து முடித்துக் காலை உணவாக பூரிக்கிழங்கைச் சாப்பிட்டு முடிக்கிறார்.
இயல்பிலேயே மறதி அதிகம் கொண்ட அவர் முக்கியமான ஒரு வேலையைச் செய்ய மறக்கிறார். அவசரமாய் அலுவலகம் கிளம்ப கதவைப் பூட்டிக் கீழே வந்தவருக்கு பர்ஸை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டது ஞாபகத்துக்கு வருகிறது. திரும்பவும் வீட்டுக்குச் செல்பவர், பர்ஸை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிச் செல்கிறார். அப்போது, அவர் மறந்து வைத்த மற்றொரு பொருளால் எழுகிறது புதுச் சிக்கல்.
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது தொடங்குகிறது மற்றொரு மகா சிக்கல். செய்யத் தவறிய பணியொன்று அவரைப் பிணியாய்ப் படுத்தியெடுக்கிறது. அம்முக்கியப் பணியை முடிக்க அவர் தெருத்தெருவாய் அலையும் காட்சிகள் சிரிக்க வைக்கும் ரகம். கூடவே சிந்திக்கவும் வைக்கிறது.
அந்த வேலைக்காக அவர் தேடிப்போகும் வாசல்களில் சில மூடியிருக்கின்றன. சில பூட்டியிருக்கின்றன. சிலவற்றுக்குள் அவரால் நுழைய முடியவில்லை.
கடைசியாக என்னவாயிற்று? நாமும் திறப்புக்குள் நுழையலாமா?

படம் பார்த்த பின் படிக்க...

இந்நவீன யுகத்தில்எங்கெல்லாம் கழிப்பறைகள் இருக்கின்றன என ஆண்ட்ராய்ட் செயலிகள் மூலம் கண்டறியலாம். ஆனால் எவ்வளவு கழிப்பறைகள் பூட்டப்படாமல் பயன்படுத்த முடிகின்றவையாய் இருக்கின்றன; திறந்திருந்தாலும் எந்தளவிற்குப் பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பொட்டிலறைந்து சொல்கிறது இக்குறும்படம்.

விழிப்புணர்வுப் படங்களில், கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தைப் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இப்படத்தில் நடித்துள்ளவர் கதாபாத்திரத்தின் வேதனை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரின் அவசரத்துக்கு ஏற்றாற்போல கார்த்திக் ஆச்சார்யாவின் இசை பரபரத்து ஒலிக்கிறது.

சமூகத்தில் இருக்கும் முக்கியக் குறையை, அதன் அத்தியாவசியத் தேவையை, இயக்குநர் குரு சுப்பு நேர்மறையான விதத்தில் சித்தரித்தமைக்காக வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ்க் குறும்படப் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றிருக்கிறது இக்குறும்படம்.

இது போன்ற சமூக அக்கறையுள்ள படங்களுக்குக் கண்டிப்பாய் சொர்க்க வாசல் திறக்கத்தான் வேண்டும்.