மேற்கு வங்க மாநில முதல்வராக 23 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தவர்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட நாள் முதல் அதன் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தவர் என்று பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஜோதி பாசு. கொல்கத்தாவில் வசதியான குடும்பத்தில் 1914 ஜூலை 7-ல் பிறந்தார் ஜோதி பாசு.
1930-ல் காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, ஜோதி பாசு கொல்கத்தா ராஜதானிக் கல்லூரி மாணவர். அப்போது காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் ஜோதி பாசுவின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இளங்கலைப் பட்டம் பெற்றதும் பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காக லண்டன் சென்றபோது அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.
லண்டனில் வி.கே.கிருஷ்ண மேனன் நடத்திவந்த இந்திய லீக் அமைப்பில் பல இந்திய மாணவர்களைத் திரட்டி உத்வேகமாகச் செயல்படத் தொடங்கினார் ஜோதி பாசு. அடுத்தடுத்து பிரிட்டனைச் சேர்ந்த பல கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட கம்யூனிஸச் சித்தாந்தத்தை ஆழமாக உள்வாங்கினார்.
இந்தியா திரும்பியதும் 1946-ல் ரயில்வே தொழிலாளர் தொகுதியிலிருந்து மேற்கு வங்கச் சட்டசபைக்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் ஐக்கிய முன்னணி அரசியல் துணை முதல்வரானார். 1977-ல் இடது முன்னணி அரசு ஆட்சியமைத்தபோது மேற்கு வங்க முதல்வரானார். 2000-ல் உடல்நலம் பாதிக்கப்படும்வரை மேற்கு வங்கத்தின் முதல்வராகத் தொடர்ந்து ஆட்சி புரிந்தார்.
ஒட்டுமொத்த இந்தியாவில் அமலான நிலச் சீர்திருத்தத்தில் 22% மேற்கு வங்கத்தில் அவரது ஆட்சிக் காலத்தில்தான் அமலானது. நிலச் சீர்திருத்தத்தால் பல விவசாயிகள் பயனடையவே, மேற்கு வங்கத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்தது. மூன்று அடுக்குப் பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்தி பஞ்சாயத்துத் தேர்தல்களைத் தொடர்ந்து நடத்தியதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா - வங்கதேசம் நதி நீர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது ஜோதி பாசுவின் மாபெரும் சாதனை.
மக்கள் மீது ஜோதி பாசு கொண்டிருந்த அக்கறை வெறும் தேர்தலை மையமாக வைத்து அல்ல என்பதற்குச் சிறந்த உதாரணம், அவர் பதவி விலகப்போவதாக அறிவித்தபோது அளித்த பேட்டி. உடல் நலக் குறைவால் ஏன் பதவியைத் துறக்க வேண்டும் என ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, “அலுவலகத்துக்குச் சிறிது நேரமே செல்கிறேன்.
எட்டுக் கோடி மக்கள் வாழும் மாநிலத்தின் முதலமைச்சர், அலுவலகத்துக்குச் சிறிது நேரம் மட்டுமே செல்வது சரியாகாது” எனப் பதிலளித்தார். ஒரு மாநிலத்தின் முதல்வராக மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் தோழனாக வாழ்ந்தவர் ஜோதி பாசு.