வலைஞர் பக்கம்

புதிய தொடர்: முத்துக் குளிக்க வாரீகளா...

கவிக்கோ அப்துல் ரகுமான்

கடவுள் துகள்!

இந்தப் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது? இதன் ஆதிமூலம் எது?

ஆதிகாலத்தில் இருந்தே இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கிரேக்க ஞானி டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்தே அணுதான் பிரபஞ்சத்தின் ஆதிமூலம் என்று விஞ்ஞான உலகம் நம்பி வந்தது.

1964-ம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி இந்த அணுக்கொள்கை மீதே ஓர் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டார். 40 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்து, அணுவுக்கும் மூலமாக ஒரு பொருள் உண்டு என்று அவர் கூறினார். அந்த மூலத் துகள் அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்பட்டது.

ஹிக்ஸ் சரி, அது என்ன போஸான்?

அணுவுக்கு உப அணு உண்டு என்று 1924-ம் ஆண்டே கண்டறிந்து கூறியவர் கொல்கத்தா வைச் சேர்ந்த சத்தியேந்திரநாத் போஸ்.

அதனை அங்கீகரித்து, அவர் பெயரையும் இணைத்துத்தான் மூலத் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர்.

‘துகள் இயற்பிய’லில் இது மிக அற்புதமான கண்டுபிடிப்பு என்பதால் பீட்டர் ஹிக்ஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

லியோன் லெடர்மான் என்ற இயற்பியல் விஞ் ஞானி 1993-ல் ஹிக்ஸ் போஸானுக்குக் ‘கடவுள் துகள்’ (God particle) என்று பெயர் சூட்டினார்.

இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள்தான் உண்டாக் கினார் என்று ஆத்திகர்கள் கூறுகிறார்கள் அல்லவா? அவர்களைக் கேலி செய்வதற்காகவே அவர் அப்படி பெயர் சூட்டினார்.

‘இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள்தான் உண்டாக் கினார் என்று கூறுகிறீர்களே... இதோ இந்தத் துகள்தான் பிரபஞ்சத்தை உண்டாக் கியது. எனவே, இதுதான் கடவுள்’ என்று கூறுவதன் மூலம் ஆத்திகர்களைக் கேலி செய்வது அவர் நோக்கம். இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள் உண்டாக்க வில்லை, இந்தத் துகள்தான் உண்டாக்கியது என்று ஆத்திகரைக் குத்துவது அவருடைய உள் நோக்கம்.

பீட்டர் ஹிக்ஸும் நாத்திகரே. அவருக்கே கூட லெடர்மான் இப்படிப் பெயர் சூட்டியது பிடிக்கவில்லை.

எப்படியோ, லெடர்மான் கேலியாகப் பெயர் வைத்தாலும் அவரே அறியாமல் ஆதிமூலத் துகளில் கடவுளுக்கு இடம் கொடுத்துவிட்டார். அதாவது கடவுளின் பொருளை அவர் பேருக்கே பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்.

இது கடவுளின் திருவிளையாடல்.

ஹிக்ஸ் போஸான் பற்றி ஆராய்ச்சி செய்வதற் காக சுவிட்சர்லாந்தில் செர்ன் என்ற இடத்தில் விஞ்ஞான ஆய்வுக் கூடம் அமைத்திருக்கிறார்கள்.

இந்த விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் 2004 ஜூன் 18 அன்று ஆறடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலையை நிர்மாணித்திருக்கிறார்கள்.

‘கடவுள் துக’ளில் மறுபடியும் கடவுள்!

விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் நடராஜர் சிலையா?

சிவபக்தர் யாராவது வம்படியாகக் கொண்டு வந்து வைத்துவிட்டாரா? இல்லை, இதற்குக் காரணமாக இருந்தவர் பிரபல அமெரிக்க இயற் பியல் விஞ்ஞானி ப்ரிட்ஜாப் காப்ரா (Fritjof Capra).

இந்தப் பிரபஞ்சத்தில் உப அணுக்கள் இடை விடாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன (Cosmic Dance). இந்த ‘ஆட்ட’த்தின் ஆட்டத்தைத்தான் நடராஜரின் நடனம் குறியீட்டு வடிவத்தில் உணர்த்து கிறது என்பதை காப்ரா அறிந்து கொண்டார்.

செர்ன் ஆய்வுக் கூடத்தில் நடராஜர் சிலை நிர்மாணிக்க இவரே காரணகர்த்தாவாக இருந் தார். இந்தச் சிலையை இந்திய அரசுதான் அனுப்பிவைத்தது.

நடராஜர் சிலையின் பீடத்தில், ‘இயற்பியலின் தாவோ’ என்ற காப்ராவின் பிரபலமான புத்தகத் தில் இருந்து எடுத்த சில வரிகள் இடம்பெற்றுள்ளன.

அதில், ‘பிரபஞ்ஞத்தில் உப அணுக்களின் நடனத்தையே சிவபெருமானுடைய நடனம் உணர்த்துகிறது’ என்ற கருத்து காணப்படுகிறது.

நடராஜர் சிலை தமிழர்களுடை கலைவண்ணம்!

அணுவே பிரபஞ்சத்தின் அடிப்படை. அதைப் பிளக்க முடியாது என்று விஞ்ஞான உலகம் உறுதியாக நம்பிய காலத்திலேயே அணுவைப் பிளக்கலாம், அணுவுக்கும் மூலமான ஒரு பொருள் உண்டு என்று இந்திய ஞானியர் நெடுங்காலத்துக்கு முன்பே அறிவித்தனர்.

‘அணுவின் அணுவினை ஆதிப் பிரானை

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவின் அணுவினை அணுக வில்லார்க்கு

அணுவின் அணுவினை அணுகலு மாமே!’

இது திருமூலரின் திருமந்திரப் பாடல்.

அணுவுக்கும் அணுவாக இருப்பவன் இறை வன். அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் ஆதிமூலம். அணுவின் அணுவான உப அணு என்று கூறப்படுவதைக் கூட பிளக்கலாம். அதை ஆயிரம் கூறாகப் பிரித்துப் பார்த்தால் வரும் அணுவை யார் அணுகுகிறார்களோ, அவர்கள் மூல அணுவுக்கும் அணுவான இறைவனை அணுக முடியும் என்பது பாடலின் கருத்து.

விஞ்ஞானம் எங்கே நின்றுவிடுகிறதோ, அதற் கும் அப்பால் செல்லக்கூடியது மெய்ஞ்ஞானம்.

விஞ்ஞானம் எதை ஆதிமூலம் என்று கண்டுபிடித்தாலும் அது பவுதீக ஆதிமூலமே. அணுவுக்கும் அணுவாக இருப்பவனே இறைவன் என்று கூறுகிறார் திருமூலர்.

‘பரத்திற்கெல்லாம் பரம் நீ’

என்கிறார் கம்பர்.

‘நீயாதி பரம்பரமும்’

ஹிக்ஸ் போஸான் எப்படி உருவாயிற்று என்று விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை; சொல்ல முடியாது. அவர்கள் பார்வை பவுதீக எல்லைக்குள் மட்டுமே.

‘‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’’ என்ற இரணியனின் கேள்விக்கு அவன் மகன் பிரகலாதன், ‘‘அவன் எங்கும் இருப்பான்!’’ என்கிறான்.

‘‘இந்தத் தூணில் இருக்கிறானா?’’ என்று இரணியன் கேட்கிறான். அதற்குப் பிரகலாதன்,

‘சாணிலும் ஊன்ஓர் தன்மை

அணுவினைச் சதகூ றிட்ட

கோணினும் உளன்’

என்கிறான்.

கம்பன் அணுவை நூறாகப் பிளக்கலாம் என்று கூறுவதோடு அப்படிப் பிளந்து வரும் உப அணுவிலும் இறைவன் இருப்பான் என்கிறான். அதோடு இந்த மூல அணுவுக் குக் ‘கோண்’ என்று ஒரு புதிய கலைச் சொல்லால் பெயர் சூட்டவும் செய்கிறான்.

அணுவினும் சிறிய உப அணுவுக்குப் பரமாணு என்று பெயர் சூட்டியவர்கள் சமணர்கள்.

சமணர் நாத்திகர். ‘பரம்’ என்ற சொல் இறைவனையும் குறிக்கும். இங்கும் அவர் கள் அறியாமலே மூல அணுவில் இறைவன் பரமன் வந்து அமர்ந்துவிட்டான்.

‘God Particle’-ன் மொழிபெயர்ப்பே ‘பரமாணு’.

கி.மு.600-ம் ஆண்டுக் காலகட்டத்தி லேயே காஸ்யபர் முனிவர், ‘பிளக்கப்பட முடியாத இறுதி உப அணுவே பராமாணு’ என்றார்.

மத் பாகவத மகாபுராணத்தில், முனிவர் மைத்ரேயர், சடப் பொருளின் மிக மிகச் சிறிய துகள் பரமாணு என்று கூறிய கருத்து இடம்பெற்றுள்ளது.

வைசேஷிகர் ‘பரமாணுக்களே சடப் பொருளின் மிகச் சிறிய பகுதி. அதற்குள் வேறு எந்தப் பகுதிகளும் இல்லை. அவை படைக்கப்பட்டவை அல்ல. அவற்றை அழிக்கவும் முடியாது. ஆகவே நிரந்தரமானவை. இக்காரணங்களாலேயே அவை பரிமாணமற்றவை. இடத்தைப் பிடிக்காதவை. உள்ளும் புறமும் அற்றவை என்று கூடுதல் தகவல் தருகின்றனர். பரமாணுக்கள் பல வகையானவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இவை எல்லாம் விஞ்ஞானிகளுக்கு இதுவரை தெரியாத விஷயங்கள்.

இந்த மெய்ஞ்ஞானியர்களின் கருத்துகள் வியப்பை ஊட்டுகின்றன.

பன்னெடுங்காலம் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மைகளை, மெய்ஞ்ஞானிகள் பன்னெடுங்காலத்துக்கு முன்பே எப்படிக் கூற முடிகிறது?

பிரபஞ்ச ரகசியங்களை மெய்ஞ்ஞானியர்க்கு இறைவன் உணர்த்துகிறான். அதனால்தான் விஞ்ஞானம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கும் உண்மைகளை நெடுங்காலத்துக்கு முன்பே மெய்ஞ்ஞானியர் கூறிவிடுகின்றனர்.

விஞ்ஞானம் மலையுச்சியை அடையக் கஷ்டப்பட்டுப் படியேறிச் செல்கிறது. மெய்ஞ்ஞானமோ ஒளிக் கிரணம் போல் பாய்ந்து மலையுச்சியை அடைந்துவிடுகிறது.

மெய்ஞ்ஞானம் பரமாணுவைக் கண்டால் அதில் பரமனைக் கண்டு பரமானந்தம் அடையும்.

விஞ்ஞானம் பரமாணுவைக் கண்டுபிடித்திருக் கிறது. இனி, அதை வைத்து உலகத்தை எப்படி அழிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யும்.

இதுதான் மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம்.

- சந்திப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

SCROLL FOR NEXT