வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1986 ஜூலை 6: ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி

செய்திப்பிரிவு

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த லட்சக் கணக்கான அப்பாவி மக்களை அகதிகளாக மாற்றி இந்தியாவில் தஞ்சம் அடையச் செய்தது, மேற்கு பாகிஸ்தானைக் கைப்பற்ற கிழக்கு பாகிஸ்தான் தொடுத்த போர். அன்று இந்திய மத்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜகஜீவன் ராம் திறம்படப் போர்ச் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்து 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் எனும் நாட்டைப் பெற்றுத் தந்தார். இந்தியப் போர் வரலாற்றில் போர் முனையில் சரணடைந்த 60,000-த்துக்கும் அதிகமான எதிரிப் படை வீரர்களைப் பத்திரமாக உயிருடன் சிறைப்பிடித்து வெற்றியை அறிவித்தவர் ஜகஜீவன் ராம். அதுவரை மேற்கு பாகிஸ்தானாகச் சிக்குண்டிருந்த பூமி இறையாண்மை மிக்க வங்காளதேசமாக உருவெடுத்தது ஜகஜீவன் ராம் எனும் ஆளுமையின் இடைவிடாத முயற்சியால்.

பாபு எனப் பிரியமாக அழைக்கப்படும் ஜகஜீவன் ராம் 1946-ல் பிஹார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டம் சந்தவா கிராமத்தில் சாமர் எனும் தலித் சமூகத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே தீண்டாமையின் கோர முகத்தைப் பல தருணங்களில் எதிர்கொண்டவர். பின்னாளில் பிரதமராகும் வாய்ப்பு நான்கு முறை முறியடிக்கப்பட்டவர். ஆனால், 1977-ல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் துணைப் பிரதமர் நிலைக்கு உயர்ந்தவர். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டவர். இருப்பினும், எவ்வளவு உயரம் போனால் என்ன சாதியம் எனும் சாத்தான் தன் கிடுக்கிப்பிடியை விடாது என்பதற்கு உதாரணம் இதோ, பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது ஜகஜீவன் ராம் சம்பூராணந்தா சிலையைத் திறந்து வைத்தார். சிலையைத் திறந்துவிட்டு அவ்விடத்தை விட்டு ஜகஜீவன் அகன்ற பின்னர், அந்த இடத்தைக் கங்கை நீர் ஊற்றிக் கழுவினார்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட உயர் சாதி வகுப்பினர்.

தனது 23 வயதில் காங்கிரஸில் இணைந்த ஜகஜீவன் ராம் காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை முழுவதுமாகப் பின்பற்றத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். 1950 முதல் அடுத்த 36 ஆண்டுகளுக்குச் சட்ட மன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபாடு நடத்தவும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் உரிமைகோரிப் போராடினார். தலித் பிரதிநிதியாக பிஹார் மாகாண அரசுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசியல் நிர்ணயச் சபையில் உறுப்பினராக இருந்து, சமூக நீதி அரசியல் சட்டத்தில் இடம் பெற அல்லும் பகலும் பாடுபட்டார். 1977 முதல் 1979 வரை இந்தியத் துணைப் பிரதமர் பொறுப்பு வகித்தார்.

தலைசிறந்த துணைப் பிரதமர், துணிச்சலான நாடாளுமன்ற உறுப்பினர், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி, ஆற்றல் மிக்க நிர்வாகி, பிரம்மிப்பூட்டும் மத்திய அரசு அமைச்சர், தீவிர பாட்டாளி மற்றும் தலித் போராளி இப்படி இந்திய அரசியல் அரங்கில் பல அவதாரங்கள் எடுத்தவர் ஜகஜீவன் ராம்.

SCROLL FOR NEXT