கன்னடத்தில் புகழ் பெற்ற வரலாற்றுப் புதினங்களை எழுதியவரும் கன்னட சிறுகதை களைச் செழுமைப்படுத்தியவருமான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (Maasthi Venkatesha Iyengar) பிறந்த தினம் இன்று (ஜூன் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் கோஷாலி என்ற இடத்தில் தமிழ் பேசும் குடும்பத்தில் (1891) பிறந்தார். இளமைப் பருவத்தை மாஸ்தி என்ற கிராமத்தில் கழித்தார். 1914-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
l இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்து, மாவட்ட ஆட்சியராக கர்நாடகாவில் பல இடங்களில் பணியாற்றினார். இடைவிடாத அரசுப் பணிக்கு நடுவிலும், எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. சிறிது காலம் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். பிறகு கன்னட மொழியில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார்.
l மாஸ்தி எழுதிய முதல் நூல் ‘ரங்கன மதுவே’ 1910-ல் வெளிவந்தது. இவரது ‘கேலவு சன்ன கேட்டகளு’ என்ற சிறுகதைத் தொகுப்பு, நவீன கன்னட இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
l தத்துவங்கள், அழகியல், சமுதாயம் பற்றி நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். பல நாடகங்கள் எழுதியுள்ளார். புகழ்பெற்ற வேற்றுமொழி நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார். 26 ஆண்டுகள் சிவில் சர்வீஸில் பணியாற்றியவர், 1943-ல் ராஜினாமா செய்தார். ஸ்ரீநிவாசா என்ற புனைப் பெயரில் சிறுகதைகள் எழுதினார்.
l ‘ஜீவனா’ என்ற மாதாந்திர பத்திரிகையின் ஆசிரியராக 1944 முதல் 1965 வரை பணியாற்றினார். ‘சிக்கவீர ராஜேந்திரா’, ‘சென்னபசவ நாயக்கா’ ஆகிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களைப் படைத்தார்.
l வரலாற்றுப் புனைவு என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாக இவரது ‘சிக்கவீர ராஜேந்திரா’ நாவல் பேசப்பட்டது. நாவலின் வடிவமும், எழுதப்பட்ட விதமும், இயல்பான பேச்சு மொழியும் அற்புதமானவை என்று புகழப்பட்டன. இந்த நாவலுக்கு 1983-ல் ஞானபீட விருது வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 92.
l படைப்பாற்றல் மிக்க எழுத்தாளரான மாஸ்தி 123 கன்னட நூல்கள், 17 ஆங்கில நூல்கள் எழுதியுள்ளார். இவர் நல்ல பேச்சாளரும்கூட. இவரது பல படைப்புகள் தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், வீட்டில் தமிழில்தான் பேசுவார்.
l ஆரம்பகால கன்னட சிறுகதைகளை செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவராக மாஸ்தி கருதப்படுகிறார். ‘மாஸ்தி கன்னடட ஆஸ்தி’ (மாஸ்தி கன்னடத்தின் ஆஸ்தி) என்று புகழப்பட்டார். மைசூர் மகாராஜா இவருக்கு ‘ராஜசேவசக்தா’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.
l மாஸ்தி கிராமத்தில் இவரது வீடு நூலகமாக மாற்றப்பட்டு, கர்நாடக அரசால் பராமரிக்கப்படுகிறது. அங்கு ‘மாஸ்தி ரெசிடென்சியல் ஸ்கூல்’ என்ற பள்ளியை கர்நாடக அரசு 2006-ல் தொடங்கியது.
l தமிழராகப் பிறந்து கன்னட இலக்கியத்தில் சாதனை படைத்த மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் 95 வயதில் (1986) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் விதமாக, சிறந்த கன்னட எழுத்தாளர்களுக்கு ‘மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் விருது’ 1993 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.