வலைஞர் பக்கம்

இன்று அன்று | 2006 ஜூன் 15: உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்

சரித்திரன்

மக்கள் தொகையில் எதிர்பாராத மாற்றங்களை உலகம் சந்தித்துவருகிறது.

2050-ல் ஒட்டுமொத்த இளைஞர்களின் எண்ணிக்கையைவிடவும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. ஏற்கெனவே உலக அளவில் வாழும் பெருவாரியான முதியோர் உடல் மற்றும் மனரீதியிலான வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதையும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. இதனை முன்னிறுத்தி முதியோர் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் அவதானிக்கத் தொடங்கியது உலக சுகாதார அமைப்பு. அதன் விளைவாக முதியோர், முதியோரைப் பராமரிப்பவர்கள் மற்றும் அரசாங்கம் ஒன்றுகூடி முதியோருக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளை ஜூன் 14, 2006-ல் அறிவித்தது ஐ.நா. சபை.

இந்நாளில் உடல், உணர்வு, நிதிநிலையில் முதியோர் சந்திக்கும் வன்கொடுமைகளைக் களைய வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்தது ஐ.நா. அதற்கு மூத்த குடிமக்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள், கல்வியாளர்கள், அரசாங்கம், மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். முதலில் முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

அடுத்து, அவர்களுக்கான சுமூகமான சூழலைச் சமூகத்தில் உருவாக்க வேண்டும் என்றது ஐ.நா. இது அடிப்படை மனித உரிமை எனும் பிரகடனத்தையும் முன்வைத்தது. உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளுக்கான முதல் கூட்டம் 2012-ல் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடத்தப்பட்டது. இதையடுத்து முதியோரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக முதியோருக்கான சர்வதேச தினத்தையும் அக்டோபர் 1 அன்று அனுசரித்துவருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர் அதிக அளவில் புறக்கணிக்கப்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 2014-ல் இந்தியாவில் ஹெல்பேஜ் அமைப்பு நடத்திய ஆய்வு திடுக்கிடும் பல தகவல்களை அளித்துள்ளது. 2013-ம் வருடத்துடன் ஒப்பிடும்போது சென்ற ஆண்டு இந்தியாவில் வாழும் முதியோருக்கு எதிரான கொடுமை 23%-லிருந்து 50% ஆக உயர்ந்துள்ளது. இதில் 48% ஆண்கள், 53% பெண்கள். பெருநகரங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமான வன்கொடுமை பெங்களூருவிலும் (75%), குறைந்தபட்ச வன்கொடுமை டெல்லியிலும் (22%) பதிவாகியுள்ளன. இதில் புறக்கணிப்பு (29%), அவமதிப்பு (33%), வாய்மொழி வசைமொழிகள் (41%) தவிரவும் உடல்ரீதியாகவும் முதியோர் துன்புறுத்தப்படுகின்றனர். இவர்களில் 67% தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் காவல்துறையை அணுக வேண்டும் எனும் விழிப்புணர்வோடுதான் உள்ளனர். இருப்பினும், 12% மட்டுமே புகார் அளிக்க முன்வருகின்றனர். நகரங்களில் வசிக்கும் முதியோர் தங்களைப் பெரிதும் கொடுமைப்படுத்துபவர்கள் மருமகள்கள் (61%) மற்றும் மகன்கள் (59%) எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குடும்ப கவுரவத்தைப் பாதுகாக்கவே பல நேரங்களில் அத்துமீறல்களை மறைத்துவைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதியோரைப் பாதுகாக்க அவர்களுடைய பொருளாதாரச் சார்பின்மையை அதிகப்படுத்துதல், தலைமுறை இடைவெளியைக் குறைக்கும் வகையில் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முதியோருக்கு உதவ சுய உதவிக் குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நாளின் குறிக்கோள்.

SCROLL FOR NEXT