வலைஞர் பக்கம்

அண்ணா ஹசாரே 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

சமூக சேவகரும், ஊழல் எதிர்ப்புப் போராளியுமான அண்ணா ஹசாரே (Anna Hazare) பிறந்த நாள் இன்று (ஜூன் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l மகாராஷ்டிர மாநிலம் பிங்கார் கிராமத்தில் (1937) பிறந்தவர். இயற்பெயர் கிசான் பாபுராவ் ஹசாரே. தந்தை, மருந்துக் கடையில் வேலை பார்த்தார். வருமானம் போதாததால், ராலேகன் சித்தி என்ற மூதாதையரின் கிராமத்துக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது.

l உறவினர் உதவியுடன் மும்பையில் 7-ம் வகுப்பு வரை படித்தார். பிறகு மும்பை தாதரில் பூக்கடை நடத்தினார். 1962-ல் சீனப் போரின்போது ராணுவத்தில் ஓட்டுநராகப் பணியாற்றினார். 1965-ல் நடந்த பாகிஸ்தான் போரில் குண்டுவீச்சில் நூலிழையில் உயிர் தப்பினார்.

l சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, வினோபா பாவேயின் வாழ்க்கை வரலாறுகள், அறிவுரைகளைப் படித்தார். ஏழைகள் மேம்பாட்டை தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டார்.

l ராணுவத்தில் இருந்து 39 வயதில் விருப்ப ஓய்வு பெற்று ராலேகன் சித்திக்கு திரும்பினார். அங்கு மக்கள் வறுமையிலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாமலும் சிரமப்படுவதைக் கண்டு வேதனைப்பட்டார்.

l ‘தருண் மண்டல்’ என்ற இளைஞர் இயக்கத்தைத் தொடங்கினார். கள்ளச் சாராயத்துக்கு எதிராக இளைஞர்களை ஒன்றுதிரட்டி, அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தினார். அந்த கிராமத்தில் மது குடிப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. பீடி, புகையிலை, சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

l 1980-ல் தானிய வங்கி தொடங்கி, வசதியானவர்களிடம் இருந்து தானியத்தைப் பெற்று, குறைந்த விலையில் ஏழைகளுக்கு வழங்கினார். நிலத்தடி நீரை சேமித்து பாசனத்தை மேம்படுத்தினார். விவசாயம், பால் உற்பத்தி, கல்வி, நீர்நிலை ஆதாரங்களில் தனது கிராமம் தன்னிறைவு பெற, மாநில அரசுக்கு எதிராகப் போராடி வெற்றிகண்டார்.

l புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த ராலேகன் சித்தி கிராமம், முன்னுதாரண கிராமமாக மாறியது. கிராம வளர்ச்சி, கட்டமைப்பில் இவரது பங்களிப்பைப் பாராட்டி ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது. வேளாண்பூஷணா, பத்ம, ஷிரோமணி, மஹாவீர் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், கவுரவங்களையும் பெற்றுள்ளார்.

l நாட்டில் ஊழலுக்கு எதிராகப் போராட ‘பிரஷ்டாசார் விரோதி ஜன் ஆந்தோலன்’ என்ற அமைப்பை 1991-ல் தொடங்கினார். இது நடத்திய போராட்டத்தால், நாடு முழுவதும் பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தகவல் உரிமைச் சட்டத்தின் மீதான தடையை நீக்கக் கோரி, தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வெற்றிகண்டார்.

l ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி 2011-ல் சத்தியாகிரக இயக்கம் தொடங்கினார். இதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அர்விந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி உட்பட ஏராளமானோர் ஆதரவு அளித்தனர். நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்தது. லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

l ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் நாடு முழுவதும் மக்களை ஓரணியில் திரட்டிய காந்தியவாதியான அண்ணா ஹசாரே, ஊழலற்ற சமுதாயம் காண 78 வயதிலும் முனைப்புடன் பாடுபட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT