வலைஞர் பக்கம்

வாழ்வை இனிதாக்கும் மாயா ஏஞ்சலோவின் 10 பொன்மொழிகள்

சேஃபகத்

ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகள் என கடந்த 50 ஆண்டு காலமாக தனது எழுத்துகள் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் மாயா ஏஞ்சலோ.

மண்ணை விட்டுச் சென்ற அந்த மாய மனுஷி மனிதத்துக்காக விட்டுச் சென்றவை அனைத்தும் உன்னதப் படைப்புகள். இவ்வேளையில் அவரை நினைவுகூரும் வகையில், அவர் உதிர்த்தவற்றில் நம்மைச் செதுக்கக் கூடிய 10 பொன்மொழிகளின் தொகுப்பு இங்கே:

1. "மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர்; நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவர்; ஆனால், அவர்களுக்கு நீங்கள் எத்தகைய உணர்வை அளித்தீர்கள் என்பதை என்றும் மறக்கமாட்டார்கள். வாழ்வில் நான் இதைத்தான் கற்றுக்கொண்டேன்."

2. "வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது; நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை விரும்புவது; நீங்கள் எப்படி அதனை செய்கிறீர்களோ அதனை விரும்புவது!"

3. "புன்னகைக்காத எவர் மீதும் நான் நம்பிக்கைக் கொண்டதில்லை."

4. "நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, கற்பியுங்கள்; நீங்கள் அடையும்போது, கொடுத்தளியுங்கள்."

5. "மற்ற அனைத்து குணங்களைவிடவும் மிக முக்கியமானது, துணிவு. ஏனெனில், துணிவு இல்லாமல் மற்ற எந்த குணங்களையும் தொடர்ந்து பின்பற்ற இயலாது."

6. "உங்களுக்கு நீங்கள் மட்டும் போதும். நீங்கள் மற்றவர்களிடம் நிரூபிப்பதற்கு எதுவுமில்லை."

7. "எனக்கு நானே நன்மை செய்யாத பட்சத்தில், மற்றவர்கள் எனக்கு நன்மை செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்?"

8. "நாம் பலமுறை தோல்வி அடையலாம். ஆனால், நாம் தோற்கடிக்கப்படக் கூடாது."

9. "உங்களிடம் ஒரே ஒரு புன்னகை இருப்பின், அதனை நீங்கள் விரும்பும் மனிதர்களுக்கு அளிக்கவும்."

10. "உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள். அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்."

SCROLL FOR NEXT